
ஒவ்வோர் ஓசைக்கும் பொருளும் வலிமையும் இருப்பதைப்போல ஒவ்வொரு சொல்லும் ஆளுமையையும் வலிமையையும் பெற்றுள்ளன என்பதுதான் உண்மை;
இதனடிப்படையில் சொல்லதிகார அமைப்புகள் ஒன்றுசேர்ந்து சங்கமம் என்ற பெயரில் தொடர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவருகின்றன.
ஒவ்வொரு குரலுக்கும் வலிமையுண்டு என்பதன் அடிப்படையில் தமிழ் சொவேந்தர்களைக்(Toastmasters) கொண்ட நான்கு அமைப்புகள் அல்லது கிளப்புகள் ஒன்றுசேர்ந்து இவ்வாண்டு தொடக்த்தில் இருந்து இரண்டு முறை ஒன்றுகூடி இருக்கின்றன.
சங்கமம் என்ற பெயரில் இவ்வாறு ஒன்றுகூடிய ‘அன்பு’, ‘மகாகவி’, ‘லவங்கம்’, ‘திரிசூலம்’ என்னும் நான்கு கிளப்புகளும் ‘சங்கமம் 3.0’ என்னும் பெயரில் மூன்றாவது முறையாக தலைநகரத்து பிரிக்ஃபீல்ட்ஸ் பட்டணத்தில் மீண்டும் ஒன்றுகூடுகின்றன.

தமிழில் வாக்காற்றல்மிக்கோரை மேலும் உற்சாகப்படுத்தி பன்னாட்டு அளவில் பன்மொழி டோஸ்ட்மாஸ்டர்ஸ் மத்தியில் தமிழ்ச் சொல்வேந்தர்களையும் மிளிரச் செய்வதே இந்த சங்கமம் நிகழ்ச்சியின் முதன்மை நோக்கம் என்று இந்த சங்கமம் நீகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியருமான முனைவர் சரசுவதி துரைராஜ் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கான அறிமுக விழா தமிழ்ப் பள்ளிகளின் மாணாக்கர் 50 பேருடன் கடந்த சனிக்கிழமை நவம்பர் 08-ஆம் நாள் காலையில் ரவாங் நகரத்தில் நடைபெற்றது.
ரவாங் பட்டணத்தைச் சுற்றியுள்ள குவாங் தமிழ்ப் பள்ளி, சுங்ஙை ச்சோ தமிழ்ப் பள்ளி, ரவாங் தமிழ்ப் பள்ளி, பத்து ஆராங் தமிழ்ப் பள்ளி, புக்கிட் பெருந்தோங் தமிழ்ப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து பேச்சுக் கலையில் தேர்ந்த பப்பத்து மாணாக்கர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த 50 மாணவர்களைத் தெரிவுசெய்வதில் அந்தந்தப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினரும் துணைநின்றதாகக் குறிப்பிட்ட முனைவர் து.சரசுவதி, தமிழ்ப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் அதிகமானோர் தாய்மொழியான தமிழில் உரையாடுவதற்கே தடுமாறுகின்றனர்.
உரையாடுவதிலும் மேடைப் பேச்சிலும் திறமிக்கவர்கள், தங்களின் எதிர்கால வாழ்வை வளமாக்கும் வல்லமைப் பெற்றவர்களாக விளங்குவர் என்பது திண்ணமாதலால், பேச்சுக் கலையில் ஆர்வமும் நாட்டமும் கொண்ட மாணவர்களை இளம் வயதிலேயே அடையாளம் கண்டு அவர்களையும் தமிழ் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப்புகளில் இணைந்து இயங்க வைப்பதும் தமிழ் மொழியுடன் கூடுதலாக தேசிய மொழியான மலாய், உலக மொழியான ஆங்கிலம் அல்லது சகோதர மொழியான மெண்டரின் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் கூடுதலாக பேச்சாற்றல் பெறவைப்பதும் தங்களின் உள்ளார்ந்த நோக்கம் என்றும் அதன் அடிப்படையிலேயே தமிழ்ப்பள்ளி மாணவர்களும் தங்களின் சங்கமம்-03 நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் சரசுவதி இதன் தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேலும் விளக்கம் அளித்தார்.

முன்னதாக தொழில்முனைவரும் தன்னூக்கப் பயிற்றுநருமான டத்தோ டாக்டர் சமனன் ரத்தினம், சிவஞானி நாகப்பன், கஜமுகன் ஜெயானந்தன், அ.நா.இராமு ஆகிய சொல்வேந்தர்களும் சங்கமும் 3.0 குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இவர்களில் கஜமுகன் ஆங்கில மொழியில் தன்னூக்க உரை நிகழ்த்தினார்.
முதலில் வட்டார அளவில் தேர்ச்சிபெறும் சொல்வேந்தர்கள் அடுத்தடுத்து மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான போட்டிகளில் எல்லாம் பங்குபெறுவார்கள் என்றும் இடையிடையே அவர்களுக்கான அனுபவப் பயிற்சியும் பட்டறையும் நடத்தப்பட்டு அவற்றின்மூலம் சம்பந்தப்பட்ட சொல்வேந்தர்கள் அடையும் அடைவுநிலை குறித்தும் மதிப்பாய்வு செய்யப்படும்.
அதேவேளை, பாராட்ட வேண்டிய இடத்தில் அவர்கள் பாராட்டப்பட்டு உற்சாகப்படுத்தப்படுவர்; அத்துடன் குறைகளும் நளினமாக சுட்டிக்காட்டப்படும்.

இப்படியெல்லாம் செப்பம் பெற்று உலக அளவில் இரண்டாவது இடத்தில் வென்றவர்களும் நம்மிடையே உள்ளனர்.
இன்று உலக நாடுகளைஆளும் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், எதிரணித் தலைவர்கள் உட்பட அனைவரும் பேச்சுக் கலையில் சிறந்தவர்கள் என்றால் அதில் மிகையில்லை;
மலேசியாவை இப்பொழுது ஆளுகின்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமே, பேச்சுக் கலையில் தேர்ந்த ஒரு ‘ToastMaster’ என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய கல்லூரிக் கல்விக் காலத்தில் இருந்தே அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை நாடறியும்.
மலேசியா முழுவதும் தமிழ் சொல்வேந்தர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ் மொழிக்கான பேச்சுக்கலை ஆற்றலை வலுப்படுத்தவும் தமிழ் உரைஞர்களை தன்னம்பிக்கையுடன் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தவும் எண்ணம் கொண்டுள்ள இந்த சங்கமம் 3.0 நிகழ்ச்சி, 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலையில் கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ், 72-1 துன் சம்பந்தன் சாலை, மராஸ் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது என்று இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கோ.அழகன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகராக மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் மு சரவணன் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது; அவரும் ஒரு சொல்வேந்தர் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது.


