
கோலாலம்பூர், டிச.06:
மலாய் அல்லாத மக்கள்மீது எந்த வகையிலும் பாரபட்சம் இருக்காது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதியளிப்பதுடன் அதற்கான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து இன மக்களிடமும் அர்த்தமுள்ள நம்பிக்கை ஏற்படும்; அத்துடன் தேசத்தை கட்டியெழுப்பும் கடப்பாடும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும் மக்கள் மனதில் எழும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமுர்த்தி தெரிவித்துள்ளார்.
கோல கங்சார் முன்னாள் மாணவர் சங்கக் கூட்டத்தில் அண்மையில் பேசிய அன்வார், நாட்டில் அமல்படுத்தப்படும் சிறப்பு பொருளாதாரத் திட்டங்களால் மலாய் சமூகத்தில் உள்ள பணக்காரர்கள் மட்டும் அதிக அளவில் பயனடைந்திருப்பதால், மலாய்ச் சமூகத்தில் பாகுபாடு நிலவுவதாகக் கவலை தெரிவித்துள்ளார். அதேவேளை, நாட்டில் ஏறக்குறைய 40% அளவில் இருக்கும் மலாய் அல்லாத மக்கள் நீண்டகாலமாகவே பாகுபாட்டிற்கு ஆளாகி இருப்பதைப் பற்றி கவலைப்படாமல் அவர் கடந்து சென்றுள்ளார். சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் பாகுபாட்டை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது; ஆனாலும், மலாய் சமூகத்தை மட்டும் இலக்காகக் கொண்டு பொருளாதாரத் திட்டங்களை வரைவது, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கத்திற்கு மாறானது.
நீண்டகாலமாகவே பாகுபாட்டிற்கு ஆளாகி இருக்கும் மலாய் அல்லாத நலிந்த மக்கள், உணர்ச்சிப்பூர்வமாக கொந்தளிப்பதைப்பற்றி வெளிப்படையாக விவாதிப்பது முக்கியம். அதுதான், தங்களின் கவலைகுறித்து அக்கறைப் படுவதாகவும் குரல் கேட்கப்படுவதாகவும் மலாய் அல்லாத மக்களை உணர வைக்கும்.
கடந்த பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சியும் அமானாவும் சேர்ந்து வெறும் 15% மலாய் வாக்குகளை மட்டுமே பெற்றதால், அன்வார் பிரதமர் ஆனதிலிருந்து பெரும்பான்மை மலாய் மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார் என்பதை மக்கள் நன்கு புரிந்துள்ளானர். அதேவேளை, மலாய் அல்லாத மக்களின் உண்மையான பிரச்சினைகளை, பிரதமர் தொடர்ந்து அலட்சியப்படுத்த முடியாது;
தான் மற்ற தலைவர்களைப் போல இல்லையென்றும் இனம்-சமயம் கடந்து அனைத்து மக்களின் உரிமைகளையும் நிலைநாட்டுவேன் என்றும் பல கட்டங்களில் அன்வார் மார்தட்டி இருக்கிறார்.
எனினும், தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின் அன்வார்மீதான பொதுமக்களின் பார்வை மாறிவிட்டதுடன் அவர்கள் கொண்டிருந்த எதிர்-பார்ப்பும் கலைந்துவிட்டது. 16-ஆவது பொதுத் தேர்தல்மூலம் அதிகாரத்தில் தொடரவிரும்பும் அன்வார், தீவிர சமய உணர்வாளர்களையும் மதக் குழுவினரையும் சாந்தப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்.
ஆனால், இது பலிக்காது; 15-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பிருந்த மலாய் அல்லாதோரின் ஆதரவை அவர் இழந்துவிட்டார் என்று ஹிண்ட்ராஃப் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.


