
இளம் பட்டதாரி டாக்டர் மோகேஷ் சபாபதி மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நோய் எதிர்ப்பு உயிரியல் ஆய்வாளராகத் திகழ்கிறார்
சிலாங்கூர் மாநிலத்தின் புதிய அரச நகர், ஷா ஆலமைச் சேர்ந்த இவர் மலேசியத் திரெங்கானு பல்கலைக்கழகத்தில் கடல் உயிரியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
மேலும் புத்ரா பல்கலைக்கழகத்தில் நோய் எதிர்ப்பு உயிரியல் துறையில் ஆய்வு முனைவர் பட்டமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் இன்று பிற்பகல் சிறப்பு செய்யப்பட்டது.
பிபிபி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
மலேசிய இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தத் துறையில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது பெருமை அளிக்கிறது என்று டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
இவர் பெர்னாமா மலாய் செய்தியை வாசிப்பதில் மிகவும் கெட்டிக்காரர்.
இவரைப் போன்ற இளைஞர்கள் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் மிகவும் தேவை. பிபிபி கட்சி எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

கல்வி மட்டுமே ஒரு சிறப்பான எதிர்காலத்தை வழங்கும் என்பதால் நம் சமுதாயம் கல்விக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பிபிபி கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ இந்தர்ஜிட், இளைஞர் அணித் தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, தகவல் தொடர்பு துறைத் தலைவர் ஸ்டீபன், துணைத் தலைவர் குமார் மற்றும் பிபிபி சிலாங்கூர் மாநிலத் தலைவர் டாக்டர் சுரேந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதனிடையே தமக்கு சிறப்பு செய்த பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மற்றும் பிபிபி கட்சிக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக டாக்டர் மோகேஷ் சபாபதி தெரிவித்தார்.


