Sunday, May 31, 2026

மக்கள் சிந்தனைப் பேரவையின் 27-ஆவது பாரதியார் விழா

-நக்கீரன்

கோலாலம்பூர், டிச.10:
பொதுவிடுமுறை நாள், வார விடுமுறை நாள், உள்ளூர் திருவிழா என்றெல்லாம் எந்தச் சூழலுக்கும் அசைந்து கொடுக்காமல் பாரதியார் பிறந்த நாளான டிசம்பர்த் திங்கள் 11-ஆம் நாளில் எந்தக் காரணத்திற்காகவும் காத்திராமல் சரியாக மாலை 6:00 மணிக்கு மாகவி பாரதியார் விழா நடத்துவதை ஈரோட்டு மக்கள் சிந்தனைப் பேரவையினர், செஞ்சோற்றுக் கடனாற்றுவதைப் போன்று ஆண்டுதப்பாமல் மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வண்ணம், 27-ஆம் ஆண்டாக நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பாரதிவிழா தொடர்பில், கடந்த ஒரு திங்களுக்கும் மேலாக மக்கள் சிந்தனைப் பேரவையினர் அகல கால்வைத்து, பெரும்பாடாற்றி வருகின்றனர்; குறிப்பாக, இவ்வமைப்பின் செம்மாந்த தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன்.

இதனால், இக்கால், தொல்தமிழினத்தின் தலைநிலமாம் தமிழ் நாட்டை செந்தமிழ் நாடு என்றழைத்த செந்தமிழ்ப் பாவலர், அவதான கவி, விடுதலைப் பாவலர், புதுக்கவிதை என்னும் வீச்சுரைக்கு பாட்டை சமைத்த புதுக்கவி என்றெல்லாம் எத்துணையோ பெருமைக்கும் புகழுக்கும் உரிய பாரதியின் பெயரும் தாக்கமும் ஈரோட்டு பெருநகர் முழுவதும் விரவியிருக்கிறது.

ஈரோடு, சம்பத் நகரம், கொங்கு கலையரங்கத்தில் நடைபெறவுள்ள இவ்விழா, பாரதிச் சுடருடன் தொடங்குகிறது.

பாரதியார், தன் வாழ்க்கைப் பயணத்தில் கடைசியாக உரையாற்றிய இடம், ஈரோட்டை ஒட்டியுள்ள உள்ள கருங்கல்பாளையம் என்னும் சிற்றூரில் அமைந்திருந்த இருந்த வாசக சாலை. தற்பொழுது அங்கு அமையப் பெற்றுள்ள நூல் நிலையத்தில் இருந்து நூற்றுக் கணக்கான மாணாக்கர் சீருடை அணிந்து பாரதிச் சுடரை ஏந்தி வருவர்.

மரணமில்லா பெருவாழ்வுவாழ்ந்த மாகவி பாரதி, ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்னும் தலைப்பில் ஈரோட்டில் பேசியதுடன், தன் மண்ணுலக வாழ்வை நிறைவுசெய்தது எண்ணிடத்தக்கது.

அணிவகுப்பினர் எழுப்பும் பாரதி முழக்கமும் இசைத் தாக்கமும் வழிநெடுகிலும் இருப்போர்தம் சிந்தையைக் கவருவதாகவும் பாரதி உணர்வை புதுப்பிப்பதாகவும் அமையும். விழா நடைபெறும் அரங்கை நெருங்க நெருங்க, அணிவகுப்பின் எண்ணிக்கைப் பெருகும். மேடையை நெருங்கியதும் பாரதி விருதைப் பெறவிருக்கும் தக்கார், பாரதிச் சுடரை ஏற்று, அதை அருகில் நாட்டியதும் விழா முறையேத் தொடங்குவது வழக்கம். அணிவகுப்பினரோ அந்தமட்டில் அரங்கத்தில் ஐக்கியமாகிவிடுவர்.

பாரதியாரின் 142-ஆவது பிறந்த நாளில் மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரிய ஏற்பாட்டில் நடைபெறும் இவ்வாண்டு பாரதி விழாவில், பாரதி விருதைப் பெற இருக்கும் பெருமகனார், ‘பாரதிபித்தர்’ முனைவர் சொ. சேதுபதி; புதுவை அரச பாவேந்தர் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரான இவர், தொடர் இலக்கியப் படைப்பாளியாகவும் விளங்குகிறார்.

கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், ஆய்வு, பகுப்பு, தொகுப்பு என இவர் சமைத்த 150 நூற்களில், 35 பாரதியாரைப் பற்றியது என்பதால்தானோ இவரை இவ்வாண்டு பாரதி விருதிற்கு தேர்வு செய்துள்ளனர் போலும்.

ஏந்திவரப்பட்ட பாரதிச் சுடர், மேடை அருகில் நாட்டப்பட்டதும், மக்கள் சிந்தனைப் பேரவைச் செயலர் ந. அன்பரசின் வரவேற்புரையுடன் விழா தொடங்கும். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருவுருவப் படத்திறப்பும், இலக்கிய சொற்பொழிவும் இயைந்த இவ்விழாவிற்கு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன் தலைமை வகிக்கவுள்ளார்.

வரவேற்புரையைத் தொடர்ந்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர், ‘தமிழியப்பாங்காளர்’ த. ஸ்டாலின் குணசேகரன் ஆற்றவிருக்கும் அறிமுக வுரை, மக்கள் சிந்தனைப் பேரவையை உள்ளும்புறமுமாக காட்சிப்படுத்துவதாகவும் கருத்துப்படுத்துவதாகவும் அமையும்.

இலக்கியவாணரும் சாகித்திய அகாதெமி விருதாளருமான பொன்னீலன், குன்றக்குடி அடிகளாரின் படத்தைத் திறந்துவைத்து, சொற்பெருக்காற்ற வுள்ளார்; அதைப்போன்று, பாரதி விருதை வழங்கி சிறப்புரை ஆற்ற இருப்பவர் குன்றக்குடி அடிகளாரின் ஆன்மிக-சமுதாய வழித்தோன்றல் தவத்திரு பொன்னம்பல அடிகளார்; இவர், ஆன்மிக எல்லையைச் சேர்ந்தவரா அல்லது சமூக வீதியில் உலாவருபவரா என்பது, அடையாளம்காண முடியாதது!.

மக்கள் சிந்தனைப் பேரவையின் துணைத் தலைவர் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கத்தின் நன்றியுரையுடன் நிறைவு காணும் இவ்விழா, மொத்தத்தில் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திற்கு, குறிப்பாக பாரதி வாழ்ந்த காலத்திற்கு ஈரோட்டு நகரையும் அங்கு குழுமியுள்ள செந்தமிழ்வாணர்களையும் நற்றமிழ் பாங்காளரையும் அழைத்துச் செல்லும் என்பது திண்ணத்திலும் திண்ணம்.

எல்லாவற்றுக்கும் முன்னதாக, கோபிசெட்டிப் பாளையத்து பவானி நதி பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் என்.எஸ். சத்திய சுந்தரி, பாரதி சோதியை ஏற்றி, அணிவகுப்பைத் தொடக்கிவைப்பார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை