
ஈப்போ, டிச.16: மலேசிய கல்வி அமைச்சின் பயிற்சி மேலாண்மை அமைப்பை (SPLKPM) ரத்து செய்யும் முடிவை மக்கள் முன்னேற்றக் கட்சி (பிபிபி) ஆதரிக்கிறது.
அதேநேரத்தில், கற்றலின் தொடர்ச்சியும் மாணவர்களின் கல்வித் தரமும் பாதிக்கப் படாத வகையில், ஆசிரியர்களின் செயல் திறனை மதிப்பிடுவதற்கான முழுமையான, வெளிப்படையான மற்றும் செயல்திறன் கொண்ட முறையை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்த வேண்டும் என பிபிபி வலியுறுத்துகிறது.
பிபிபி தலைவர் டத்தோ டாக்டர் லோகா பால மோகன் இதன் தொடர்பில் மேலும் கூறுகையில், வகுப்பறைக் கற்பித்தல், பாடத் தயாரிப்பு மற்றும் SPLKPM-இன்கீழ் உள்ள விரிவான பயிற்சி, பதிவுகளை பராமரிப்பது ஆகியவற்றை ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டிய நீண்டகால சிக்கலை ஆசிரியர்கள் எதிர்கொண்டு வருவதை கட்சி நன்கு அறிந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மக்கள் முற்போக்குக் கட்சி- பிபிபி ஈப்போ அலுவலகத் திறப்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ லோக பாலா பேசினார்.
“பல ஆசிரியர்கள், பதிவுகளை நிறைவு செய்வதற்காக பள்ளிக்குப் பிந்தைய நேரத்தையும், வார விடுமுறை நாட்களையும் தியாகம் செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன், குறிப்பாக குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணையுடனும் செலவிட வேண்டிய மதிப்புமிக்க நேரத்தை இழந்து வருகின்றனர்.
இந்தக் குறை நீண்ட காலமாகவே ஆசிரியர் சமுதாயத்தில் நிலவி வருகிறது என்று அவர் கூறினார்.
கல்வி அமைச்சின் அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள பல ஆசிரியர்களுக்கு நிம்மதியையும் நிவாரணத்தையும் அளித்துள்ளதாக டத்தோ டாக்டர் லோகா பால மோகன் குறிப்பிட்டார்.
“SPLKPM முறை, அடிப்படையில் ஒரு மோசமான முறை அல்ல; ஆனால் அதன் அமலாக்கும் முறை, கற்பித்தல் மற்றும் மாணவர் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய ஆசிரியர்கள்மீது, பதிவுகள் மற்றும் விதிமுறை பின்பற்றல் தொடர்பான அதிகமான நிர்வாகச் சுமையை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“இந்த முடிவை ஆதரித்தாலும் கல்வித் தரம் , செயல்திறன் தொடர்ந்து குறைந்து வருவது தொடர்பாக உண்மையான கவலை இருப்பதால், கல்வி அமைச்சு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பிபிபி கேட்டுக் கொள்கிறது”.
“பள்ளிகளில் தகுதி இல்லாத ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருவது குறித்தும் கவலை உள்ளது. இதன் விளைவாக மாணவர்களின் கல்வி தொடர்பான செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்பிக்காமல், தங்களின் படிப்பில் மேலும் மேலும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர் என்றும் லோகா கவலை தெரிவித்தார்
மேலும் UPSR, PMR போன்ற தேசியத் தேர்வுகள் நீக்கப்பட்ட பின்னர், மாணவர்கள் எதிர்மறையான மற்றும் பயனற்ற செயல்களில் நேரத்தை வீணடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதனால் திறமையான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு இன்னும் அவசியமாகி யுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த முடிவு, தற்போது நிலவும் கல்விச் சிக்கலை மேலும் தீவிரப்படுத்தக் கூடாது.
ஆசிரியர்களுக்கான தெளிவான மதிப்பீட்டு கட்டமைப்பு, வகுப்பறை கண்காணிப்பு, மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் சாதனை அளவீடுகள், அதேபோல் கற்பித்தல் தரமும் மாணவர்களின் செயல்திறனும் பாதுகாக்கப்படுவதற்கான வெளிப்புற ஆய்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சரியான மதிப்பீட்டு முறையை கல்வி அமைச்சு கட்டாயமாக அறிமுகப்படுத்த வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறுகியகால தீர்வுகள் நீண்டகால விளைவுகளை பாதிக்கக்கூடும் என டத்தோ டாக்டர் லோகா பால மோகன் எச்சரித்தார்.
“நிகழ்காலத்தை காப்பாற்ற முயற்சிக்கும் போது, எதிர்காலத்தை இழக்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதே எங்களின் விருப்பம்.”
கல்வி சமத்துவத்திற்கான பிபிபி-இன் நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், உயர்தரக் கல்வியும் வலுவான கல்வித் தரநிலைகளும் அந்த இலக்கை அடைவதற்கான அடிப்படை என தெரிவித்தார்.
“மதிப்பீட்டு முறையை சீர்திருத்த இதுவே சரியான நேரம். செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்துடன், ஆசிரியர்கள்மீது தேவையற்ற நிர்வாகச் சுமையை ஏற்றாமல், அவர்களின் செயல்திறனை மதிப்பிட்டு கல்வித் தரநிலைகளை உயர்த்த பல புதுமையான மற்றும் பயனுள்ள வழிகள் உள்ளன,” என்று அவர் முடிவுரையாகக் கூறினார்.


