
கூட்டுறவு சங்கத்தை நிமிர்த்தவும் உயர்த்தவும் 1974-ஆம் ஆண்டில் ம.இ.கா.-வின் அன்றைய தலைவர் துன் வீ. திருஞான சம்மந்தரால் கோலாலம்பூருக்கு அழைக்கப்பட்டவர் தான்ஸ்ரீ கே ஆர் சோமசுந்தரம்.
அதுவரை தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் சார்பில் முதன்முதலில் வாங்கப்பட்ட புக்கிட் சீடிம் தோட்டத்தை நிர்வகித்து வந்த டான்ஸ்ரீ கே ஆர் சோமசுந்தரம், அங்கு தன்னுடன் இணைந்து பணியாற்றிய டத்தோ பா சகாதேவனையும் உடன் அழைத்து வந்தார்.
அந்த நேரத்தில் கூட்டுறவு சங்கம் நல்ல நிலையில் இல்லை என்பதால், இந்த நிலையில் அங்கு பணியில் தொடர வேண்டுமா? அதுவும் கோலாலம்பூருக்கு செல்ல வேண்டுமா என்றெல்லாம் சகா தேவனிடம் வினவியவர்களும் உண்டு.

ஆனாலும், உள்ளூர மனதளவில் தன்னுடைய வழிகாட்டியாகவும் தலைவராகவும் ஏற்றுக்கொண்ட டான்ஸ்ரீ கே ஆர் சோமசுந்தரத்தின் வாக்கைத் தட்டாமலும் அவரின் வழிகாட்டுதலில் தயங்காமல் பயணிப்போம் என்ற எண்ணத்தையும் உள்ளத்தில் உறுதியாகக் கொண்டு சகாதேவன் கூட்டுறவு சங்கத்துடனான தன் பயணத்தை, டான்ஸ்ரீ கேஆர் சோமாவுடன் தொடர்ந்து வந்தார்.
இத்தகைய பயணம், இப்பொழுது 51-ஆவது ஆண்டில் தொடர்கிறது..
கொஞ்சம் வளர்ந்தாலே தலைமைப் பதவிக்கு ஆசைப்படுகின்ற இன்றைய அரசியல் வாழ்விலும் பொது வாழ்விலும் விதிவிலக்காக திகழ்வதுடன் தன்னுடைய தலைவர் தான்ஸ்ரீ சோமசுந்தரம், எள் என்றால் எண்ணைய்யாக காரியம் சாதிக்க கூடியவர் சகாதேவன் அவர்கள்.

இதனால்தான் நாட்டின் பொருளாதாரம்- பன்னாட்டு வர்த்தக நிலைமை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் மட்டும் சிந்தாமல் சிதறாமல் அகலக்கால் வைத்து பல்துறை சார்ந்து இன்று முன்னேற்றமான நிலையை எட்டியுள்ள அதே வேளையில் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு கல்வி, பொருளாதாரம், சமூகநிலை சார்ந்தெல்லாம் ஊற்றுழி உதவுகின்ற சமூக பாதுகாவலனாக திகழ்கிறது.
நாட்டின் பொருளாதார சூழல் பன்னாட்டு வர்த்தக நிலை எல்லாவற்றையும் அவதானித்து ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டு வருமுன் காக்கும் ஆற்றலாலும் திட்டமிட்டு சாதிக்கும் முன் யோசனையாளும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தை சிந்தாமல் சிதறாமல் தொடர் முன்னேற்றப் பாதையில் பயணம் மேற்கொள்ள வைக்கும் அற்புத நிர்வாக திறனைக் கொண்டுள்ள டத்தோ பா. சகாதேவன், இன்று பிறந்த நாளை காண்கின்றார்.

அவரை குமரி வான்முற்றத்தின் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.
இந்த நாட்டின் தலைசிறந்த கூட்டுறவு சங்கங்களில் ஒன்றாக தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் திகழ்வதில் முக்கியப் பங்காற்றிவரும் டத்தோ சகாதேவன் கூட்டுறவு சங்கத்தையும் நிலைநிறுத்தி ஆண்டுதோறும் அதன் உறுப்பினர்களுக்கு அதிகபட்ச லாப ஈவை வழங்கி வருவதால் மலேசிய அரசாங்கத்தின் பாராட்டுதலுக்கு ஆண்டுதோறும் இலக்காகி வரும் ஒரு பொது அமைப்பாகத் திகழ்கிறது.
ஒரு கூட்டுறவு சங்கம் தன்னையும் நிலை நிறுத்திக் கொண்டு தான் சார்ந்த சமூகத்துக்கு மொழி கலாச்சாரம் பண்பாடு கலை உள்ளிட்ட தலங்கள் சார்ந்து பாதுகாப்பு அளிப்பதுடன் அவை வளரவும் துணை நின்று ஆதரவை வழங்குகின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் அதற்கு எல்லாம் இந்த சங்கத்தின் இணை அடித்தளமாக விளங்குகின்ற சகாதேவன் முழு முதல் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அந்தப் பெருமகனார் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தை இன்னும் புகழ் நிலைக்கு உயர்த்தி , இந்திய சமுதாயத்தின் பாதுகாவலராகவும் வழிகாட்டியாகவும் திகழ்வதற்கு காலமகள் என்றென்றும் துணை நிற்க வேண்டும் என்று குமரி நல்லாள் வாழ்த்துகிறாள்!!


