Sunday, April 19, 2026

12 மலேசியத் திட்டங்களிலும் இந்தியர்களுக்காக மஇகா குரல் கொடுத்ததா? அப்படியானால், ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணி ஏன் இடம்பெற்றது? 2013-இல் நஜீப் ஏன் இந்தியர்களிடம் பொது மன்னிப்பு கேட்டார்?

பொன்.வேதமூர்த்தி கேள்விக் கணைகள்!

கோலாலம்பூர், டிச.20:
நாட்டின் முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்தே இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கான முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் மஇகா வழங்கியதாக அதன் தலைவர் ஒருவர் திடீரென பேசுவது விந்தையானது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவரும் ஹிண்ட்ராப் பேரியக்க நிறுவனருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மஇகா தலைவர் குறிப்பிடுவது உண்மையானால், 2014இல் ஹிண்ட்ராஃப் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய அவசியம் தேசிய முன்னணிக்கு ஏற்பட்டிருக்காது. அதற்கு முன்னதாக, பிரதமர் நஜீப் இந்திய சமுதாயத்திடம் ஏன் பொது மன்னிப்பு கேட்டார்?. 1971-இல் துன் ரசாக் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தபோது, மஇகா, சொந்த சமுதாயத்திற்காக எந்தக் கோரிக்கையையும் முன்வைத்த-தாகத் தெரியவில்லை; அதற்கான சான்றோ, தரவோ எதுவுமில்லை. இந்தியர்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை திசைதிருப்பவும் மக்களை தவறாக வழிநடத்தவும் மஇகாவின் பொய்யுரை தடையின்றி தொடர்கின்றன என்று இதுகுறித்த அறிக்கையில் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

1970-களில் சுமார் 8லட்சம் இந்திய தோட்டப் பாட்டாளிகள் இடப்பெயர்வு காரணமாக பாதிக்கப்பட்டதை அந்த காலக்கட்டத்தில் மஇகா-வை வழிநடத்திய துன் வீ.தி.சம்பந்தனும் டான்ஸ்ரீ மாணிக்கவாசகமும் நன்கு அறிந்திருந்தனர். தோட்டங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டபோது சமூகம் நிர்க்கதிக்கி ஆளாகி, துயர நிலைக்கு தள்ளப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், மஇகா தலைவர் இப்போது குறிப்பிட்டதில் ஏதேனும் உண்மை இருக்குமானால், தோட்டப் புறங்களை சார்ந்திருந்த இந்திய சமூகத்தின் அவலநிலை புதிய பொருளாதார கொள்கையில் கொஞ்சமாவது பிரதிபலித்திருக்க வேண்டும்.

2007-இல் தான் ஹிண்ட்ராஃப் இயக்கத்தை உருவாக்கியபோது ஆலய உடைப்பு, தோட்ட இடப்பெயர்வால் எழுத்த சமுதாய அவலம், அடையாள ஆவண சிக்கல், சட்டத்திற்கு புறம்பான மதமாற்றம், போதிய கல்வி வாய்ப்பு இன்மை, தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தடை போன்ற பிரச்சினைகள் இந்திய சமுதாயத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. இன்றைய மஇகா தலைவர்களின் ஒத்துழைப்புடன் அன்றைய மஇகா-வை வழிநடத்திய துன் சாமிவேலு தலைமைத்துவத்தின் தோல்வியினால்தான் 2007 நவம்பர் 25 எழுச்சிப் பேரணி நாட்டை உலுக்கும் வண்ணம் பேரளவில் நடைபெற்றது; சர்வதேச கவனத்தையும் ஈர்த்தது.

மஇகா, நெருப்புக் கோழியைப் போல தன் முகத்தை மண்ணில் புதைத்து மறைத்துக் கொள்ளலாம்; ஆனால், உண்மை என்னவென்று ஊரும் உலகும் அறியும். அதேவேளை, இந்திய சமுதாயத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதில் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி-யும் ஹிண்ட்ராஃப் பேரியக்கமும் திடமாக உள்ளன. இதன் அடிப்படையில்தால், இந்திய சமுதாயத்திற்கு தொடர்ந்து இழைக்கப்பட்ட அநீதியை தற்போதைய மடானி அரசு உணர்ந்து, அடுத்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட இருக்கும் 13-ஆவது மலேசியத் திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு 25பில்லியன் வெள்ளியை ஒதுக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைத்து வருவதாக முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை