
இந்திய சமுதாய மாணவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ள பெர்டானா பல்கலைக்கழகத்திற்கு பாராட்டும் நன்றியும் தெரிவிப்பதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் தெரிவித்துள்ளார்.
2023-2024 கல்வி ஆண்டில், மெட்ரிகுலேசன் கல்வி மற்றும் மலேசிய உயர்க்கல்விச் சான்றிதழ்-எஸ்.டி.பி.எம். கல்வி முடித்த 50 மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி தொடர்பான புரிந்துணர்வுடன் பெர்டானா உயர்க்கல்வி நிறுவனம் மலேசிய இந்திய சமூக-பொருளாதார உருமாற்றப் பிரிவான மித்ரா-வுடன் இணைந்து மேற்கொண்டுள்ள கூட்டு முயற்சியின் விளைவாக 50 மாணவர்கள், மருத்துவம் பயிலும் நல்வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

பி-40 குடும்பங்களைச் சேர்ந்த இந்த ஐம்பது மாணவர்களில் 10 பேருக்கு பெர்டானா பல்கலைக்கழகம் முழு பொறுப்பேற்று கல்வி உதவிநிதி அளிக்கிறது. மற்ற 40 மாணவர்களுக்கு பகுதி கல்வி உதவி நிதி வழங்கப்படும் அதேவேளை மீதித் தொகைக்கு உயர்க்கல்விக் கடன்வசதி செய்துத்தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்போல, மற்ற உயர்க்கல்வி நிறுவனங்களும் பெர்டானா பல்கலைக்-கழகத்தைப் பின்பற்றி இந்திய சமுதாய மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டும் என்று பிகேஆர் சிலாங்கர் மாநில உதவித் தலைவருமான ஜி.குணராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.


