
ஷா ஆலம், டிச.23:
தமிழர்களின் நெடிய ஆன்மிக பயணத்தில் இறைவனை வழிபட எண்ணற்ற முறைகள் இருக்கின்றன. இறைவனை பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடுவதும் அதில் ஒருவகை. அபிராமி அந்தாதி பாடல்தொகுப்பும் இந்த வகையில் ஒன்றாகும்.
தமிழ் நாடு, திருக்கடவூரில் வாழ்ந்த அபிராமி பட்டர், அந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் அன்னை உமையவளாம் அபிராமி அம்பிகையைப் போற்றி இயற்றப்பெற்ற பாடல் தொகுப்பே அபிராமி அந்தாதி எனப்படுகிறது. இதில் ஒரு காப்புச் செய்யுள், ஒரு நிறைவுப் பாடல் உட்பட நூற்றிரண்டு செய்யுட்கள் அடங்கியுள்ளன. இடையிலுள்ள நூறு பாடல்களும் அந்தாதியாக அமைந்து, முதற் பாடலும் இறுதிப் பாடலும் மண்டலித்து வந்துள்ளன.
ஒரு பாடலின் நிறைவு வார்த்தையை அடுத்தப் பாடலின் தொடக்க வார்த்தையாகக் கொண்டு பாடப்பெற்ற பாடற்தொகுப்பை, அந்தாதிப் பாடலென வகுத்துள்ளனர்.
மெய்ஞ்ஞானம் வாய்க்கப்பெற்ற அபிராமிபட்டர், உமையவளின்(அபிராமி) திருவருளில் மூழ்கித் திளைத்தவர். அதனால், அவர் இயற்றிய அபிராமி அந்தாதி பாடல்களை தொடர்ந்து ஓதினால் விரும்பிய நன்மை விளையும் என்று ஆன்மிக நெறியில் திளைத்தவர்கள் நம்புகின்றனர்.
அந்த வகையில், ஷா ஆலம் அருள்மிகு புவனேசுவரி அம்மன் ஆலய நிருவாகத்தினரும் அபிராமி அந்தாதிப் பாடலை ஓதியோதி பெருநன்மை அடைந்ததாக ஆலயத் தலைவர் கே.சுப்பிரமணியன், துணைத் தலைவர் மணியரசு, செயலாளர் சந்தன தாஸ் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலயம், இட நெருக்கடியை எதிர்கொண்டு, அகற்றப்படும் ஆபத்தை எதிர்கொண்ட நேரத்தில் சுற்று வட்டார மெய்யன்பர்கள் புடைசூழ அபிராமி அந்தாதிப் பாடலை பக்திப் பெருக்குடன் தொடர்ந்து பாடியதால், இந்த ஆலயம் இங்கேயே நிலைகொண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் ஆலய நிருவாகத்தினர், இதன் வெளிப்பாடாகவே அபிராமி அந்தாதி விழாவை ஆண்டுதோறும் பேரளவில் நடத்தி வருவதாகக் கூறுகின்றனர்.
சிலாங்கூர் மாநிலத்தின் புதிய அரச நகரமான ஷா ஆலம், பிரிவு 16இல் அமைந்துள்ள அருள்மிகு புவனேசுவரி அம்மன் ஆலயத்தில் அபிராமி அந்தாதிப் பெருவிழா இவ்வாண்டின் நிறைவு நாளான டிசம்பர் 31-இல் பக்திப் பெருக்குடன் சிறப்பாக நடைபெற இருப்பதாக ஆலயத் தலைவர் கே.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அறிவும் ஆற்றலும்பெற, பிரிந்தவர் ஒன்றுசேர, குடும்ப இன்னல்தீர, உயர்பதவிபெற, கவலைதீர, மந்திர சித்தி வாய்க்க, துன்பம் நீங்க, பற்று விலகி பக்தி பெருக, நினைத்தது நிறைவேற, சொர்க்கத்தில் இடம்கிடைக்க, இல்வாழ்க்கை இன்பத்திற்கு, செல்வம் கிடைத்திட, நல்ல மாப்பிள்ளை வாய்த்திட என்றெல்லாம் நூறு நன்மை அடைய நூறு பாடல்களை உள்ளடக்கியுள்ளது அபிராமி அந்தாதி பாடல் தொகுப்பு.
அபிராமி அந்தாதி விழா, தற்பொழுது பல ஆலயங்களில் நடைபெறுகிறது; அதைப்போல,ஒரு சில சமய அமைப்புகளாலும் அவ்வப்பொழுது ஆங்காங்கே நடத்தப்படுகிறது; இருந்தாலும், வெள்ளி விழா கொண்டாடும் அளவிற்கு மலேசியாவிலேயே ஷா ஆலம் செக்சன் 16-இல் அமைந்துள்ள அருள்மிகு புவனேசுவரி அம்மன் ஆலயத்தில்தான் அபிராமி அந்தாதி விழாவை ஆண்டுத் திருவிழாவைப் போல சிறப்பாக, நடத்திவருகிறோம். டிசம்பர் 31-ஆம் நாள் நடைபெற இருக்கும் 2024 அபிராமி அந்தாதி விழா, வெள்ளி விழா ஆகும் என்று ஆலய நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
தொடக்கத்தில், சுங்கை ரெங்கம் தோட்டத்தில் இரப்பர் மரங்கள் சூழ்ந்த நிலையில், தோட்ட மக்கள் வணங்கிவந்த எளிய வழிபாட்டுத் தலமாக இந்த ஆலயம் இருந்தது. ரப்பர் பாலை சேமித்து வைக்கும் இடமாக இருந்த இதே இடத்தில்தான் அருள்மிகு புவனேசுவரி அம்மனை எளிய முறையில் வழிபடத் தொடங்கினோம். 1985-வரை இந்த நிலை தொடர்ந்தது. அதன்பிறகு தோட்டப்புறச் சூழல் மாறத் தொடங்கினாலும் சுற்றுவட்டார மக்களுக்கான வழிபாடு இடமாக இந்த புவனேசுவரி அம்மன் ஆலயம் நீடித்தது.
இந்த நிலையில், நகர மேம்பாடு காரணமாக இந்த ஆலயத்தை அகற்றும்படி அரசுத் தரப்பில் 1995-ஆம் ஆண்டில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம்-பி.கே.என்.எஸ். தலைமை பொறியியலாளராக இருந்த ஒரு மலாய் அதிகாரி ஒருவர், ம.இ.கா. தலைவர்கள் மூலம் முயற்சி செய்தால், இந்த ஆலயம் இடம் மாற்றப்படாமல் இங்கேயே நிலைபெற வாய்ப்பு ஏற்படலாம் என்று ஆலோசனை தெரிவித்தார்.

அதனடிப்படையில், மாநில அரசாங்கத்திலும் சிலாங்கூர் மஇகா-விலும் முக்கியத் தலைவர்களாக இருந்த டான்ஸ்ரீ மகாலிங்கம், த.ம.துரை, டத்தோ இராஜகோபால், டத்தோ க.சிவலிங்கம் ஆகியோரை யெல்லாம் அணுகி முயற்சி செய்தோம்.
ஆனால், காரியம் எதுவும் கைகூடவில்லை; ஆலய நிருவாகப் பொறுப்பில் இருந்தவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்தது.
இந்த நிலையில்தான் அபிராமி அந்தாதியை தினமும் ஓத முயன்றோம். “நாங்கள் வழிபடும் அம்பாள், இங்கேயே நிலைக்க வேண்டி, ஆலய மகளிர் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தொடார்ந்து 102 நாட்கள் அபிராமி அந்தாதியை முற்றுணர்ந்து ஓதினோம்.
மாலை வேளை நித்திய பூசனைக்குப் பின் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு 102 பாடல்களையும் ஒதி முடிக்கும்வரை, 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருக்கும் அன்றாட நிகழ்ச்சியாக இது அமைந்தது. இவ்வாறு, 102 நாட்களுக்கு தொய்வின்றி அன்னையை வணங்கி வந்தோம்.
இந்த சமயத்தில் கோல காரிங்கைச் சேர்ந்த சிவத்திரு கிருஷ்ணமூர்த்தி குருக்கள், சிவத்திரு முத்துக்குமார சிவச்சாரியார் ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்பை எந்நாளும் மறக்க மாட்டோம் என்று செயலாளர் சந்தன தாஸ் குறிப்பிட்டார். அந்த நேரத்தில் தலைவராக இருந்த சுப்பியமணியத்தையும் இந்த நேரத்தில் நினைவுகூர்வதாகத் தெரிவித்தனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிலாங்கூர் மாநில அரசு, அருள்மிகு புவனேசுவரி அம்மன் ஆலயத்திற்கு அரை ஏக்கர் நிலத்தை ஒதுக்கி இருப்பதாக 1998-இல் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ க.சிவலிங்கம் ஆலயத்திற்கு நேரில் வந்து அறிவித்தார்.
ஆலயத்தின் சார்பில் ஒரு ஏக்கர் நிலம் கேட்டோம். ஆனாலும் கேட்டதில் பாதி கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தோம். அபிராமி அந்தாதியை ஓதியதன் விளைவாக அம்பாள் அருள்பாலித்ததை உணர்ந்துகொண்ட நாங்கள், தொடர்ந்து அபிராமி அந்தாதி விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம் என்று துணைத் தலைவர் மணி அரசு தெரிவித்தார்.
ஒருசில ஆண்டுகள் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் விடுபட்டு போனாலும்
ஆலய நிலச் சிக்கல் தீர்ந்ததும் மீண்டும் இதே அருள்மிகு புனவேசுவரி அம்மன் ஆலயத்தில் இந்த விழாவை ஆண்டுதோறும் சுற்று வட்டார பக்தர்களின் ஆதரவுடன் நிறைவேற்றி வருகிறோம். அந்த வகையில், நிகழும் 2024 ஆம் ஆண்டு வெள்ளி விழா அபிராமி அந்தாதி விழாவாகும். இதில் அனைவரும் கலந்துகொண்டு அம்பிகையை வணங்கிச் சென்றால் நினைத்தது நிறைவேறும் என்று அபிராமி அந்தாதி விழாக் குழு சார்பில் பெரு.கோபால கிருஷ்ணனும் இல. நல்லையாவும் தெரிவிக்கின்றனர்.
ஒரு பாடல் முடிந்ததும் ஒரு நைவேத்தியம் அம்பாளுக்கு படைக்கப்படும்; இவ்வாறு 102 பாடல்களை ஓதி முடிக்கும்வரை 102 நைவேத்திய பண்டங்கள் அம்பாளுக்கு படைக்கப்படும்.
இந்த ஆலயம் தற்பொழுது விரிவாக்கம் கண்டுள்ளது; பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அருள்மிகு புவனேசுவரி அன்னையும் தன் பெயர் விளங்கும்படி இங்கேயே குடிகொண்டு சுற்று வட்டார பக்த அன்பர்களுக்கு அருள் வழங்கி வருவதால், இவ்வாண்டு வெள்ளி விழா அபிராமி விழாவை மிகச்சிறபாக கொண்டாட இருக்கிறோம் என்று ஆலயத் தலைவர் கே.சுப்பிரமணியம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.


