
கோலாலம்பூர், டிச.23:
வங்க தேசத்தில் சிறுபான்மை இனத்தினருக்கும் சமயத்தினருக்கும் எதிராக மாதக் கணக்கில் தொடரும் தாக்குதல், கொள்ளை, கொலை முயற்சி, உயிர் அச்சுறுத்தல், பாதிக்கப்பட்ட இந்து மக்களுக்காகவும் சமயத் தலைவர்களுக்காகவும் முன்னிலையாகும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே தாக்கப்படுவது, அவர்களுக்கு எதிராக நேரடி கொலை மிரட்டல் என, அந்த சணல் உற்பத்தி நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கடும் வன்முறையால் சட்ட ஒழுங்கிற்கு அச்சுறுத்தலும் மறுட்டலும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஹிண்ட்ராப் நிறுவனத் தலைவர் பொன். வேதமூர்த்தி, , இதன் தொடர்பில் பன்னாட்டு வழக்கறிஞர் மன்றத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த நாட்டில் முகமட் யூனுஸ் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசும், வங்கதேசத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் அச்சத்திற்கு ஆளாகி இருப்பதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது; எந்த நாடாக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள், தங்களுடன் வாழும் சக சிறுபான்மை மக்களை ஆதரிப்பதுதான் ஜனநாயகம் என்று, ஐநா மன்றம் வரைந்துள்ள கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணாக இது அமைந்துள்ளது.
இந்த நிலையில், பன்னாட்டு வழக்கறிஞர் மன்றத்திற்கு பொன்.வேதமூர்த்தி அவசரக் கடியம் அனுப்பினுள்ளார்.
வங்கதேச இடைக்கால ஆட்சியாளர், சட்ட-ஒழுங்கை நிலைநிறுத்துவதை உறுதி செய்வதற்கும் நீதித் துறைசார் நடவடிக்கையில் வழக்கறிஞர்களும் அலுவலர்களும் அச்சமின்றி தங்கள் பணியைத் தொடரவும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்கு ஏதுவாகவும் பன்னாட்டு வழக்கறிஞர் மன்றம், தன் பிரதிநிதியை வங்காள தேசத்திற்கு உடனே அனுப்பவேண்டும்;
வங்க தேச இந்துத் துறவி சின்மோய் கிருஷ்ண தாசின் சார்பில் வழக்காடவந்த வழக்கறிஞர்களை வெளிப்படையாக மிரட்டிய முஸ்லிம் தீவிரவாத வழக்கறிஞர்களுக்கு எதிராக வங்க தேச இடைக்கால அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்;
தவிர, வங்க தேச வழக்கறிஞர் மன்றமும் இத்தகைய சட்டத்துறை காலாடியருக்கு எதிராக விசாரணை நடத்தி, உடனே அவர்களை இடைநீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும்;
வழக்கறிஞர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆகாமல், தங்கள் கடமையை விருப்பு-வெறுப்பின்றி செய்யவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உண்மை அறியும் குழுவையும் பன்னாட்டு வழக்கறிஞர் மன்றம் வங்க தேசத்திற்கு அனுப்ப வேண்டும்;
சின்மோய் கிருஷ்ண தாசின் பிணைமனு 2025, ஜனவரி 2-ஆம் நாள் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அது சட்டமுறைப்படி நடைபேறுகிறதா என்பதை உறுதி செய்ய ஒரு கண்காணிப்புக் குழுவையும் பன்னாட்டு வழக்கறிஞர் மன்றம் அனுப்ப வேண்டும் என்றும் லண்டன் மாநகரில் அமைந்துள்ள சர்வதேச வழக்கறிஞர் மன்றத் தலைவர் செல்வி அல்முடீனா எர்போன் டி மெண்டிவி அல்டாமாவிற்கு(Ms Almudena Arpon De Mendivil Aldama) அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


