
உலகில் உயர்ந்த
உயர்தரக் குகைக் கோயில்
விளங்க முடியாத
வியக்க வைக்கும்
விசித்திர குன்று
இருநூற்று எழுபத்திரண்டு
படிகளைப் பாசத்தோடு சுமைக்கும்
பத்துமலையின் பால் வடியும்
பக்தி பரவசமிக்க பாலகன்
முன்னுக்கு முகமன்காட்டி
நூற்று நாற்பது அடியில்
ஆழம்பதித்த தங்கமகன்
எங்கள் அழகன் முருகன்…
பொய்மையில்லா பொன்முகம்
எழில் குன்றா ஏறுமுகம்
அன்பில் ஆருபம்
ஆண்டியான ஆறுமுகம்
ஐந்தெழுத்து மந்திரத்தில்
அற்புதங்களை அருளால் அளிக்கும்
அருவமாய் உருவமாய்
ஒளிரும் உத்தமனான
ஓம்காரன் எங்கள் குமரன்…
அறம்பொருள் இன்பம்
அருளிய தமிழ் மறைக்கே
மகுடம் சூட்டிய மயில்வாகனன்
மலைநாட்டில் சேவல் கொடி ஏந்தி
காடுகளை கடந்து
மலை முகட்டில் மையம் கொண்ட
மகாதேவனின் மகன்
முத்து தீவின் முதல்வன்
தண்ணீர் மலையில்
தாற்பரியம் கொள்ளும்
எங்கள் தண்டபாணி…
வேலுண்டு வினையில்லை
வெற்றியுண்டு தோல்வியில்லை
வீரமுண்டு பயமில்லை
வேட்கையுண்டு வெறுப்பில்லை
செவ்வேல் கொண்ட
சேவடிச் செந்தூரன்
ஆண்டவனுக்கே ஆகமம்
அளித்த அறங்காத்த
காவடி மைத்தன்
கல்லுமலையின் காவலன்
எங்கள் கந்தசுவாமி…
முத்தமிழிக்கு முத்துவேல்
ஞானத்திற்கு ஞானவேல்
கருணைக்கு கந்தவேல்
சங்கடங்கள் தீர்த்து சாந்தமான மனதில்
சாத்வீகம் மீட்டி
சாதனைகள் புரிய
துணைக்கு வரும்
சலனமற்ற தூயவன்
எங்கள் சன்னாசிமலையின்
சாந்தமான சரவணபவ சரவணன …
அகமலர அனுபூதியால்
தித்திக்கும் திருப்புகழால்
சிந்தைச் சிலிர்க்கும்
சஷ்டிக் கவசத்தால்
நலமான நாமாவளியால்
பலக் கோடி முறை
பாராணம் படித்து
பக்திப் பாமாலையால்
புகழ்மாலையால்
பரம்பொருளுக்கு
பல திருநாமங்களில்
வாழ்த்தி வணங்கி
உச்சரிக்கும் போது
உள்ளமெல்லாம் உருகி
உன் பெயரைச்
சொல்லச் சொல்ல
இனிக்குதடா முருகா.
என் அழகா.
கவிஞர் சத்தியா,
பகாங்.



