
-நக்கீரன்
கோலாலம்பூர், டிச.31:
“அமைதியான தோற்றமும் உறுதியான உள்ளமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற டாக்டர் மன் மோகன் சிங், மேநாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் உள்ளம் கவர்ந்த தலைவர் என்பதுடன் எனக்கும் உன்னதமான தலைவர்” என்கிறார் டத்தோஸ்ரீ டாக்டர் மு.சரவணன்.
கோலாலம்பூர் ‘லிட்டில் இந்தியா-பிரிக்ஃபீல்ஸ்’ உருமாற்ற நாயகரான அவர், கூட்டரசுப் பிரதேச மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் இவ்விரு பிரமதர்களுக்கும் இடையில், 2010-இல் ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட அனுபவத்தையும் நஜீப் தலைமையில் தலைநகரத்து லிட்டல் இந்தியாவை ‘நினைவில் வாழும்’ மன்மோகன் சிங் தொடங்கி வைத்ததையும் பசுமை மாறாமல் நினைவுகூர்கிறார்.
1991 மே 21-இல் தேர்தல் களத்தில் ராஜீவ் காந்தி அகால மரணம் அடைந்ததற்குப்பின், அந்த நாட்டின் அனைத்து பிரதமர்களும் சொந்த நாட்டிலேயே குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து உரையாற்று-வதுதான் வழக்கமாக இருந்தது.
இத்தகைய சூழலில் பொதுவெளியில் அதுவும் வெளிநாட்டில் பொதுமக்க-ளுடனும் சமூக-அரசியல் தலைவர்களுடனும் பொதுவெளியில் நெருங்கிப் பழகிய இந்தியப் பிரதமர், டாக்டர் மன் மோகன் சிங்-தான்; இதை அவர் தன்னிடமே குறிப்பிட்டதாக மு.சரவணன் தெரிவிக்கிறார்.
இந்தியப் பொருளாதார சிற்பி-புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகம் செய்தவர், நிதி அமைச்சர், பிரதமர் ஆகிய பொறுப்புகளையெல்லாம் வகித்த அவர், நிறைகுடமாக விளங்கினார்.
பழிச் சொல்லுக்கும் இழிச் சொல்லுக்கும் ஆளாகாத அவரை, Accidental Prime Minister என்றும் மௌனகுரு என்றும் அரசியல் எதிர்முகாமில் இருந்தோர் விமர்சித்ததை உலகு அறியும். ஆனாலும் “கால மகளின் கருணை என்மீது இருக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் உறுதியாக சொன்னது இப்போது பலித்திருக்கிறது.
2014-ஆம் ஆண்டு தொடக்கத்தில், அவர் 10 ஆண்டு பிரதமர் பதவிக்கு விடைகொடுக்க இருந்த நேரத்தில் சொன்ன இந்த நம்பிக்கை வார்த்தைகள், 1932 செப்டம்பர் 26-ஆம் நாள் பிறந்து இந்த மண்ணில் 92 ஆண்டுகள் 92 நாட்கள் வாழ்ந்து, 2024 டிசம்பர் 26-இல் இம்மண்ணுலக வாழ்வுக்கு விடைகொடுத்த நேரத்தில் கால மகளின் கருணை அவருக்கு மிகுதியாக வாய்த்திருக்கிறது என்பதைக் கண்டு வியக்கிறேன். அப்போது அவரை விமர்சித்தவர்களெல்லாம் நெஞ்சாரப் புகழ்த்திருக்கின்றனர் என்றார் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணைவேந்தரும் மலேசியத் தமிழிலக்கிய உலகின் சொல்வேந்தருமான மு.சரவணன்.
வரலாறு நெடுகிலும் தீர்க்கதரிசனமான தலைவர்கலும் கவிஞர்களும் வந்து வந்து போகின்றனர்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சுமார் கால் நூற்றாண்டிற்கு முன்பே, ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பள்ளு பாடுவோமே என்று பாடினான் விடுதலைக்கவி பாரதியார். பாரதி அவ்வாறு சொன்னது அப்படி பலித்தது பின்னாளில்;
அதைப்போல உலகத் தலைவர்களில் ஆப்ரகாம் லிங்கன், ஃபிடல் காஸ்ட்ரோ போன்றோர் சொன்னதெல்லாம் பலித்ததை இந்த உலகு அறியும்.
பள்ளி செல்ல வகையின்றி நூல்நிலையங்களை மட்டுமே நம்பி தன்னை செப்பம் செய்துகொண்ட லிங்கன், தான் அமெரிக்க அதிபரானால் இனவேற்றுமையை அகற்றுவேன் என்றார்; சொன்னபடி அதிபரானார்; நிற வேற்றுமைக்கு எதிராக சட்டமும் இயற்றினார்.

அவரைப்போல, அமெரிக்க உளவுப் படையின் வேட்டையில் இருந்த சுமார் 100 முறை தப்பிய ஃபிடல் காஸ்ட்ரோ, ஒருமுறை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்; கியூபா நாட்டின் மான்கட்டா இராணுவ முகாம்மீது தாக்குதல் மேற்கொண்டபோது, அது தோல்வி அடைந்து, இராணுவத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
அந்த நேரத்தில் இராணுவ நீதிமன்ற விசாரணைக் கூண்டில் இருந்தபடியே “இந்த நீதிமன்றம் என்னை விடுவிக்காவிட்டாலும் வரலாறு எனக்கு விடுதலை அளிக்கும்” என்றார். இன்று அவர் மறைந்துவிட்டாலும் வரலாற்றால் விடுதலை செய்யப்பட்ட புகழ்மிகு மனிதராகத்தான் அறியப்படுகிறார்.
இந்த வரிசையில் மன்மோகன் சிங்கும் புதுடில்லி பத்திரிகையாளர்களிடம் நம்பிக்கையுடன் சொன்னபடி, காலம் அவர்மீது அளவிறந்த கருணை காட்டியிருப்பது மெய்ப்பட்டிருப்பதாக மு.சரவணன் குறிப்பிடுகிறார்.
கிள்ளான் பள்ளத்தாக்குவாழ் இந்தியர்களின்-தமிழர்களின் வர்த்தக முனையமாக உருமாற்றம் அடைந்துள்ள பிரிக்ஃபீல்ட்ஸ், தொடக்கத்தில் ‘15-ஆம் கட்டை’ என்ற பெயரில் பிரபல பட்டணமாக விளங்கியது.
அத்தகைய பிரிக்ஃபீல்ட்சில் 10 ஆண்டுகளுக்குமுன் நிறுவப்பட்டுள்ள தோரண வாயில், மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நிலவும் தொடர் நட்பின் அடையாளமாக இந்திய நடுவண் அரசு வழங்கிய அன்பளிப்பாகும். இத்தோரண வாயிலின் கட்டமைப்பு, இந்து-பௌத்த கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010-இல் இந்திய பிரதமரும் பொருளியல் மேதையுமான டாக்டர் மன் மோகன் சிங், மலேசியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பொழுது இந்த தோரணவாயிலுக்கான கட்டுமானம் குறித்து அறிவித்தார்.
அதனைத் தொடந்து இந்திய வெளியுறவு அமைச்சகம் 16 நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இதன் கட்டுமானத்திற்கான வடிவமைப்பைத் தயாரிப்பதற்காக போட்டி நடத்தியது. அந்தப் போட்டியின் முடிவில், ‘அக்சயா ஜெய்ன் & அசோசியேட்ஸ்’ என்ற கட்டட வடிவமைப்பு நிறுவனத்திடம் பிரிக்ஃபீல்ட்ஸ் தோரணவாயில் கட்டுமானப் பணி ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சாஞ்சி நகரில் உள்ள பிரம்மாண்ட தூணை நினைவுகூரும் வகையில் இந்தத் தோரணவாயில் வடிவமைக்கப் பட்டுள்ளது; 2015 ஆகஸ்ட் 20-ஆம் நாள் கட்டிமுடிக்கப்பட்ட இத்தோரண வாயில், அடுத்த முன்று மாதங்களில் நவம்பர் 23-ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது.
தோரணவாயில் என்பது, பொதுவாக ஒரேக் கட்டமைப்பில் வடிவமைப் பட்டிருக்கும். ஆனால், பிரிக்ஃபீல்ட்சில் நிறுவப்பட்டுள்ள தோரணவாயில் இரட்டைக் கட்டுமானத்தில் உருவாக்கப்பட்டு, வடிவங்கள் செதுக்கப்பட்ட சலவைக் கற்களும் பதிக்கப்பட்டு அவற்றின் உச்சிப் பகுதிகள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளன.

வெளிறிய சாம்பல் நிறமும் பால் நிறமும் கலந்த கூட்டுவண்ணத்தில் 24 அடி அகலத்திலும் 34 அடி உயரத்திலும் நிறுவப்பட்டுள்ள இந்தத் தோரணவாயிலின் ஒவ்வொரு பகுதியும் அலங்காரமாக காட்சி தருகிறது. இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட மணற்கற்களில் செதுக்கப்பட்டுள்ள வடிவங்கள் கண்களைக் கவருவதாக உள்ளன.
இந்த கலைப்படைப்பு தாளம், சமச்சீர்மை மற்றும் அலங்கார அழகை வெளிப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, அதேநேரத்தில் இந்திய கைவினைத்திறனையும் பறைசாற்றுகிறது. இதில் பதிக்கப்பட்டுள்ள கற்களில் செதுக்கப்பட்டுள்ள வடிவியல் சிந்தையை அள்ளுவதாக உள்ளன.
2010-இல் பிரிக் ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவைத் தொடக்கிவைத்தபோது டாக்டர் மன்மோகன் சிங் இந்தத் தோரணவாயில் குறித்த அறிவிப்பைச் செய்தார். அப்போது, அவர் மலேசியாவிற்கு வருவதற்கு ஒரு மாதத்திற்குமுன், இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் பிரிக் ஃபீல்ட்ஸ் பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
நெருக்கனமான கட்டடங்கள் சூழ்ந்திருக்கும் இந்த வட்டாரத்தைக் கண்டு, தொடக்கத்தில் இந்திய உளவுப் பிரிவினர் தொடக்கத்தில் தயக்கம் காட்டினர். இந்த இடத்தில் பொதுமக்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதும் அதில் பிரதமர் மன் மோகன் சிங் கலந்து கொள்வதும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அஞ்சிய அவர்கள், தொடர்ந்து அவதானித்து ஆய்வுசெய்தபின் இந்திய நடுவண் அரசுக்கு மன நிறைவான பதிலை அளித்தபின், மன் மோகன் சிங்கிற்கான பயணம் திட்டமிடப்பட்டது.
இந்தக் காலக்கட்டத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தான் நெருங்கிப் பழகியதாகவும் அவர்கள் கேட்ட தகவல் அனைத்தையும் அவ்வப்பொழுது தந்து உதவியதாகவும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
மன்மோகன் சிங் பிரிக் ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவை, 2010, அக்டோபர் 27-இல் தொடக்கிவைத்த நிகழ்ச்சியின்போது, இந்தப் பகுதியில் உள்ள கட்டடங்களின் மொட்டை மாடிப் பகுதிகள் யாவும் மலேசிய காவல் துறையினர் மற்றும் இந்திய உளவுப் பிரிவினரின் ஒருங்கிணைந்தக் கட்டுப்பாட்டில் இருந்ததாகத் தெரிவித்த டத்தோஸ்ரீ மு. சரவணன், தன்னிடம் தனிப்பட்ட முறையில் நட்புடன் பழகியதாகவும் குறிப்பிட்டார்.
ஒரு மாமாங்கத்திற்கு மேற்பட்ட காலத்தைக் கடந்திருந்தாலும், பண்டித ஜவஹர்லால் நேருவுக்குப் பின், ஒரு முழுமையான தவணைக் காலத்திற்குப் பின் மீண்டும் பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்ட டாக்டர் மன்மோகன் சிங்குடனான நினைவுகள், தன் மனதில் என்றென்றும் பசுமையாக நிலைத்திருக்கும் என்றும் மலேசிய கண்ணதாசன் அறவாரியம் என்னும் இலக்கிய அமைப்பின் தலைவருமான டத்தோஸ்ரீ மு. சரவணன் தெரிவித்தார்.


