Sunday, April 19, 2026

மஇகா-வின் ஆன்மிக அரசியல் ஆபத்தானது: எதிர்காலம் தீர்ப்பெழுதும்…!

கோலாலம்பூர், ஜன.05:
இன்றைய அரசியல் உலகம், வலச்சாரித்தன்மை கொண்டதாக மாறிவருகிறது.
இனவாதமும் மதவாதமும் கலந்த அரசியலை முன்னெடுக்கும் போக்கு, அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி, நியூசிலாந்து உள்ளிட்ட மேலைநாடுகள், வளைகுடா நாடுகள், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், மியன்மார் போன்ற ஆசிய நாடுகளை ஆக்கிரமித்துள்ளது. இந்த வரிசையில், மலேசியாவும் இணையப் பார்க்கிறது; கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எழுந்த பசுமை அலையே அதற்கு சான்று.

இன-மதவாத அரசியலின் தாயகம், அமெரிக்காவின் கைப்பிள்ளை இஸ்ரேல் என்பது உலகம் அறிந்தது.

இந்த நிலையில், அரசியலில் சமயத்தைக் கலக்கும் பொல்லாத போக்கை மஇகா-வும் கைக்கொள்கிறதே என்பதை அறியும்பொழுது வேதனை மிஞ்சுகிறது. எதிர்கால அச்சம் மேலிடுகிறது.

மலேசிய இந்தியர்களின் தாய்க் கட்சியான மஇகா-விற்கு எத்தனையோ சிறப்பும் மேன்மையும் உண்டு; இந்திய சமுதாயத்திற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த மலேசியாவிற்கே, நாட்டின் விடுதலைக்கு முந்தைய மலாயாக் காலத்திலிருந்தே இந்த மலைசூழ் தேசத்தில் முளைத்த முதல் அரசியல் இயக்கம் மஇகா என்பதால், நாட்டின் மூத்த அரசியல் இயக்கமும் மஇகா-தான்.

சங்கப்பதிவகத்தால் ரத்து; அதனால் மறுபதிவு; மீண்டும் மஇகா பாரு என்ற சிக்கலெல்லாம் எதுவுமின்றி, சிந்தாமல் சிதறாமல் அந்த நாள் முதல் இந்த நாள் வரை தொய்வின்றி பயணிக்கின்ற இந்த அரசியல் பேரியக்கம், தன் நெடிய பயணத்தில் பல ஏற்றத் தாழ்வுகளையும் தடுமாற்றத்தையும் சந்தித்துள்ளது என்பது வேறு கதை.

தவிர, மஇகா-விற்கு என, தனித்த தேசிய பெருமையும் ஒன்றுண்டு; அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த இந்த நாட்டில் விடுதலை வேட்கையை ஏற்படுத்தியக் கட்சி மஇகா; இந்தக் கட்சி உதயமானதே விடுதலை உணர்வில்தான்;

தேர்தல் களத்தில் 100% வெற்றியை, அதுவும் தொடர்ச்சியாக பல தேர்தல்களில் பதிவுசெய்த ஒரேக் கட்சி, மலேசிய அரசியலில் மஇகா மட்டுமே.

அத்தகைய மகுடப் பெருமையை 2008 மார்ச் 08, 12-ஆவது பொதுத் தேர்தலின்போது இந்தக் கட்சி இழந்தாலும், அப்போதைய பிரதமர் துன் படாவிக்குப் பின் பொறுப்பிற்கு வந்த டத்தோஸ்ரீ நஜீப்பின் ஒன்பது ஆண்டு ஆட்சிக்காலம் மஇகா-விற்கு பொற்காலம் என்பது உண்மைதான். அதேவேளை, மஇகா-வின் நீண்ட கரத்தை, குறுக்கியதும் இதே நஜீப்தான்.

இதுவொருபுறமிருக்க, வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் நஜீப்பிற்கு வெண்சாமரம் வீச மஇகா தயங்குவதில்லை. இப்பொழுதுகூட, நஜீப்பிற்கு நீதிமன்ற அணுகூலம் வேண்டி, அணிதிரள்வதில் பொருள் உண்டு; ஆனால், வழிபாடு எதற்கு? அரசியலையும் ஆன்மிகத்தை கலப்பது பொருத்தமில்லாதது.

பிரித்தாளுவதில் கைதேர்ந்த நஜீப், முதன்முதலில் மக்கள் கூட்டணியை உடைத்து, அதிலிருந்து பாஸ் கட்சியை பிரித்தெடுத்தார். நாட்டின் முதல்நிலை மதவாதக் கட்சியான பாஸ் கட்சியின் வங்கிக் கணக்கில், அந்த காலக் கட்டத்தில் 25 இலட்ச வெள்ளி சேர்க்கப்பட்டது. அது யாரால், எப்படி எப்பொழுது என்பதெல்லாம் வெளியுலகிறகும் தெரியாது; உள்நாட்டினருக்கும் புரியாது. ஆனாலும் அணுமானிக்கக்கூடியது.

இதை பாஸ் கட்சியும் தெரிவிக்கவில்லை. தெரிவிக்க வேண்டும் என்று நாமும் கட்டாயப்படுத்த முடியாது; ஆனால், இந்த நாட்டில் இலஞ்ச-லாவண்யம் தலைவிரித்தாடுவதற்கு மலாய் அல்லாதவர்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் தான் காரணம் என்று அக்கட்சியின் தலைமை அடித்துச் சொன்னது; இந்தக் கருத்து, அதன் மதவாத கோர முகத்திற்கு இன்றளவும் சாட்சியாக இருக்கிறது. மொத்தத்தில் மக்கள் கூட்டணியை நம்பிக்கைக் கூட்டணியாக உருமாற்றியது நஜிப்தான்.

அடுத்து நஜீப் குறிவைத்தது, ஹிண்ட்ராஃப் இயக்கத்தை; மக்கள் சக்தி கட்சி உருவானது இந்த வகையில்தான். 2010-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பேருந்து அரசியலை நாட்டிற்கு அறிமுகம் செய்தது இதே மக்கள் சக்தி கட்சிதான். ஹிண்ட்ராப் இயக்கதின்மீது, குறிப்பாக அது நடத்திய 2007 நவம்பர் 25 எழுச்சிப் பேரணியை டத்தோஸ்ரீ நஜீப், தனிப்பட்ட முறையில் தன் மனதிற்குள் ஆராதித்தார். இப்பேரணி நடந்திராவிட்டால், அவர் பிரதமராவதற்கு இன்னும் காலம் பிடித்திருக்கும்.

நாளை ஜனவரி 06-இல் அம்னோ கட்சி 118 பேருந்துகளுடன் புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தை முற்றுகையிட திட்டமிட்டதும், பாஸ் கட்சி 100 பேருந்துகளை அமர்த்தியதும் மக்கள் சக்தி கட்சி கற்றுத் தந்த பாடம்தான்.

ஹிண்ட்ராஃப் இயக்கத்திற்குப் பின், நஜீப் குறிவைத்து அடித்தது மஇகா-வைத்தான். சுங்கை சிப்புட் தொகுதியில் தேர்தல் களத்தை இழந்தாலும் மஇகா தலைமைப் பொறுப்பில் இருந்து ஒருகாலும் அசைந்து கொடுக்க மாட்டேன் என்று இரும்புப் பிடியுடன் இருந்த துன் சாமிவேலனாரையும் அசைத்தார் நஜீப்.

தென் ஆசியாவின் கட்டுமானத் தூதர் என்னும் கிளுகிளுப்பையில் மயங்கிய குழந்தையானார் சாமிவேலு.

அடி மரத்தை மட்டும் விட்டுவைத்து, கிளைகளைக் கழிப்பதைப் போல, இந்திய சமுதாயத்தில் மஇகா-விற்கு இருந்த ஏகபோகத்தை சன்னம் சன்னமாக சரிய வைத்தார் நஜீப். அதற்கு அவர் கையில் எடுத்தக் கருவி, ‘மானியம்’.

இந்திய சமுதாயம் என்றுபொதுவாக சொல்லப்பட்டாலும், அதில் இணைந்திருந்த மொழிவாரியான சமூகங்களின் பிரதிநிதிகளுடன் நேரில் தொடர்புகொண்டு, எதற்கெடுத்தாலும் இனி மஇகா-விடம் கைகட்டி நிற்க வேண்டாம்; என்னிடம் வாருங்கள் என்று சொல்லாமல் சொல்லி, நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

ஆலயங்களுக்கான நிதி ஒதுக்கீடு, தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியம் என அனைத்தையும் நஜீப், தானாகவேக் கையாண்டார். அதற்குத் தோதாக அமைந்தது, மஇகா-வில் அந்த வேளையில் நிலவிய தலைமைத்துவ போராட்டம்.

டத்தோஸ்ரீ கோ.பழனிவேலு-டான்ஸ்ரீ டாக்டர் சுப்ரா இடையிலான தலைமைத்துவ போராட்டம் 2015 கடைசிவரை நீடித்தது. இதற்கிடையில்13-ஆவது பொதுத் தேர்தலையில் நஜீப் நடத்தி முடித்துவிட்டார்.

2015 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் எல்லாச் சிக்கலும் தீர்ந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டது முதல், தன் அரசியல் பயணத்தை அமைதியாக மேற்கொண்டு வருகிறது மஇகா.

ஹிண்ட்ராப் இயக்கத்தை சிதைக்கும் முகமாக அதிலிருந்து ஒரு சாராரைப் பிரித்து மக்கள் சக்திக் கட்சியை உருவாக்கிய நஜீப், சிறையில் இருந்த ஹிண்ட்ராஃப் தலைவர்களை விடுவித்து, நல்லிணக்கத் தலைவரைப் போல தன்னைக் காட்டிக் கொண்டார்.

அதைப்போல, இந்திய சமுதாயத்திற்கான சமூக நலத் திட்டங்களை செடிக் அமைப்பின்மூலம் தன்னுடைய பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக மேற்கொண்ட நஜீப், மஇகாவையும் மெலிதாக அரவணைக்கத் தவறவில்லை.

சுதந்திர மலேசியாவில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகளுக்கு உரிமத்துடன் அனுமதி அளித்த நஜீப், இந்தியர் பெருந்திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அறிவித்தார். தவிர, சுதந்திர மலேசியாவில் இந்திய சமுதாயம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதற்காக பொது மன்னிப்பும் கேட்டார்.

அப்படிப்பட்ட நஜீப்பிற்கு பதவி பறிபோனது; தற்பொழுது, எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் தண்டமும் சிறைவாசமும் விதிக்கப்பட்டுள்ளார். இடையில், 12 ஆண்டு சிறைவாசம் 6 ஆண்டுகளாகவும் 10 மில்லியன் வெள்ளி தண்டம், 5 மில்லியனாகவும் குறைக்கப்பட்டது.

இத்தண்டனையை மேலும் குறைப்பதன் தொடர்பில், அதாவது வீட்டுக்காவல் குறித்து, பிப்ரவரி 2ஆம் நாள் அரச மன்னிப்பு வாரியம் முடிவெடுக்க உள்ளது; இதற்கிடையில், இதன் தொடர்பில், நீதித்துறை மறுஆய்வு மனுவையும் நஜீப் சமர்ப்பித்துள்ளார். இந்த மறுசீராய்வு விண்ணப்பம் குறித்துதான் மேல்முறையீட்டு நீதிமன்றம் நாளை ஜனவரி 06-திங்கட்கிழமை முடிவெடுக்க உள்ளது.

நஜீப்பின் சிறைவாசத்தை வீட்டுக் காவலாக மாற்றுவதா இல்லையா என்பது குறித்த நீதிமன்ற நடவடிக்கைதான் இது;

இதன் தொடர்பில்தான் நஜீப்பிற்கு ஆதரவாக புத்ராஜெயாவில் அணிதிரள பாஸ் கட்சி, அம்னோ, பெர்சத்து, மசீச, மஇகா ஆகிய கட்சிகள் கடந்த சில தினங்களாக தொடைதட்டி, முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தன.

இப்பொழுது அம்னோ பின்வாங்கி விட்டது; பாஸ் கட்சியோ முன்வைத்த காலை பின்வைப்பதில்லை என்று பறைசாற்றிவிட்டது. பெர்சத்து கட்சி, பாஸ் கட்சிப்பக்கம் மெல்ல சாய்கிறது; மசீசவோ பின்வாங்குவதாக அறிவித்தாலும், மசீச உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்து பச்சைக் கொடியை பாதியில் பறக்கவிட்டுள்ளது.

இந்தக் கட்டத்தில், மஇகா அம்னோ முடிவையும் பின்பற்றாமல், பாஸ் பக்கமும் செல்லாமல் பத்துமலை திருமுருகன் திருத்தலத்தில் நஜிப்பிற்கு ஆதரவு தெரிவித்து அணிதிரள்வோம் என்று அறிவித்துள்ளது. ஆக, முன்வைத்த காலை, பின்வைக்க வில்லையேத் தவிர, பக்கவாட்டில் வைக்கிறோம் எனபதைப் போல அமைந்துள்ளது மஇகாவின் இம்முடிவு.

மஇகா-வின் இந்த முடிவு அந்தக் கட்சிக்கு பொருத்தமானதாக இருக்கலாம்; ஆனால், நஜீப்பிற்கு நீதிமன்ற அணுகூலம் ஏற்பட வேண்டும் என்பதற்காக விழிபாட்டை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது பொருத்தமா என்பதை இந்த பாரம்பரியக் கட்சி ஒருமுறைக்கு இருமுறை எண்ணிட வேண்டாமா?

நீதிமன்ற பரிபானத்தில் தங்கள் தரப்பிற்கு நியாயம் வேண்டும் என்று ஓர் அரசியல் கட்சி பூசை நடத்திட முனைந்தால், மலேசிய அமைச்சரவையில் தமிழ்ப் பேசும் அமைச்சர் இடம்பெற்று வந்த பாரம்பரியத்தை இந்த ஒற்றுமை அரசி சிதைத்துவிட்டதே, அது சீர்ப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக மஇகா வழிபாடு நடத்துமா?

அரசாங்க வேலைவாய்ப்பில் இந்திய சமுதாயத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் இல்லையே, அதற்காக மஇகா வழிபாடு நடத்துமா?

இதற்கு மஇகா முழு கடப்பாடு கொண்டுள்ளது. மலேசிய அரசக் கட்டிலில் தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றிருந்த கட்சி மஇகா; இந்த காலக்கட்டத்தில்தான், இந்திய சமுதாயத்திற்கான அரசாங்க வேலைவாய்ப்பு பேரளவில் பறிபோனது.

2008-இல் டான்ஸ்ரீ சுப்ரா, மனித வள அமைச்சராக இருந்த நேரத்தில், ஜசெக எம்பி மு.குலசேகரன், அரசாங்க வேலைவாய்ப்பில் இந்திய சமுதாயத்தினருக்கான வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுப்ரா, இந்திய சமுதாயத்தின் விகிதாச்சார அளவிற்கு ஏற்ப இந்திய அரச ஊழியர்களின் எண்ணிக்கை இல்லைதான்; அது ஏறக்குறைய 3% அளவிற்குத்தான் உள்ளது; இது கட்டம் கட்டமாக உயர்த்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அடுத்த அமைச்சரவையில் அவர் சுகாதார அமைச்சரானார். 10 ஆண்டு காலத்தில் இதன் தொடர்பில் சுப்ரா என்ன நடவடிக்கை எடுத்தார்? இந்தியர்களின் அரச வேலைவாய்ப்பு விகிதம் உயர்ந்ததா என்று எந்தத் தகவலும் தெரியவில்லை; அடுத்த 10 ஆண்டுகளில் கேள்வி கேட்டவரே அந்தத் துறைக்கு அமைச்சரானார்.

தனக்கு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டால், மனித வளத்துறைதான் வேண்டும் என்று அடம்பிடித்து, கேட்டுவாங்கியதாக குலசேகரனே சொன்னார். பொதுச் சேவைப் பிரிவில் இந்தியர்களின் எண்ணிக்கையை உயர்த்த இவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை.

எதிரணியில் அமர்ந்து கேள்வி கேட்பதிலேயே பழக்கப்பட்ட இந்தத் தரப்பிற்கு, ஆளுந்தரப்பு வரிசை, அந்நியப்பட்டதாகத்தான் இருந்ததுபோலும்; சீக்கியர்களின் மண்டையை மறைக்கும் கொண்டையான தலைப்பாகைமீது காட்டிய அக்கறையை, இவர், இந்திய சமுதாயத்தின் அரசாங்க வேலைகுறித்து எந்த அளவிற்குக் காட்டினார் என்பது குறித்து ஒன்றுமே தெரியவில்லை. மனிதவளத் துறை மீண்டும் மஇகா வசமாகி, இப்போது அதை திசைமாற்றிவிட்டார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்.

மொத்தத்தில், இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகமாக பரிபோனது, மஇகா காலத்தில் என்பதால், அதை நேர் செய்யும் விதமாக, இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வேண்டும் என்று மஇகா பரிகார பூசையும் பிரார்த்தனையும் மேற்கொள்ளுமா?

அரசியல் அரசியலாக இருக்க வேண்டும்; அதில் ஆன்மிகத்தைக் கலப்பது ஆபத்தானது.

மஇகா-வின் ஆற்றல்மிகு பணிப்படைகூட, மலர்ந்துள்ள 2025-ஆம் ஆண்டை வழிபாட்டுடன் தொடங்கியதாக அறிவித்துள்ளது. இந்தப் பிரிவினர், புத்தாண்டில் வெளியிடும் முதல் தகவல் இதுதான்.

ஆண்டு தொடங்கியதும் எஸ்பிஎம் தேர்வு, நாடு முழுவதும் தொடங்கியது; இதன் தொடர்பில் இந்தப் பிரிவினர் எந்த வினையும் ஆற்றவில்லை; மஇகா இளைய சமுதாயம், தாய்மொழியாம் தமிழில் ஆளுமையின்றி இருக்கிறது; இதற்காக ஒரு பட்டறையை ஏற்பாடு செய்யலாம்; மலேசிய இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருவதால், நம் வாக்கு வலிமையும் குன்றி வருகிறது.

இதை சீர்செய்யும் பொருட்டு, இளம் ஆண்களும் பெண்களும் பருவம் தப்பாமல் மண்ம்புரிந்து இல்வாழ்க்கையில் இணைய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இதையெல்லாம் விடுத்து,

பால்-பருவம்-வண்ணம்-வடிவம்-அருவம்-உருவம்-அருவுருவம் என எந்த வரையறைக்கும் உட்படுத்த முடியாவண்ணம், அணுவாகவும் அண்டமாகவும் அண்டத்தின் பிண்டமாகவும் ஒப்புயர்வற்று அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் பரம்பொருளை வழிபட்டதுதான் முதற்பணி என்று பறைசாற்றிக் கொள்ளும் மஇகா பணிப்படை, சமய சாயம் பூசிக் கொள்வதை விடுத்து, இனியாவது சமூக-கல்வி-பொருளாதார-அரசியல் சிந்தனையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

அண்மையில்கூட, ஒருமுறை மானிய உதவி பெற்றுவிட்டால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கு எந்த உதவியும் இல்லையென்று உள்ளாட்சி-வீடமைப்புத்துறை அறிவித்தபோது, அதற்கு ஒரு சமயத் தலைவர்கூட குரல்கொடுக்கவில்லை; அரசியல் தலைவர்கள்தான் வரிந்துகட்டிக் கொண்டு வந்தனர்.

ஆன்மிகத்தை சமய அமைப்புகளிடம் விட்டுவிட்டு, அரசியல் பணியை மட்டும் மேற்கொண்டு, நலிந்துள்ள நம் சமுதாயம் வீறுகொண்ட மறுமலர்ச்சியை எட்ட வைப்பதில் அயராமல் அக்கறைக் காட்டுவதுதான் அரசியல் கட்சிகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?
காலம் என்னும் நல்லாள் தீர்மானிக்கட்டும்!!.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை