Monday, March 9, 2026

அரச அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்பு பதிலளிக்கப்படுவதில்லை!

அரசுத் துறைகளிலும் அமைச்சகங்களிலும் உள்ள சில அலுவலகங்கள் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு சரியான முறையில் பதிலளிப்பதில்லை என்ற புகார்கள் அதிகரித்து வருவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதாக மேனாள் துணை அமைச்சர் டத்தோ த. முருகையா தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், அதிகமான பணிச்சுமை மற்றும் நேரக் கட்டுப்பாடுகளுக்கிடையிலும், அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களையும் பாராட்டி நன்றியும் தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

“அவர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்ய மிகுந்த முயற்சியுடன் செயல்படுவதை புரிந்து கொள்கிறேன்; இதை மக்களும் புரிந்து கொள்கிறார்கள்” .

எனினும், தொலைபேசி அழைப்புகள் பதிலளிக்கப்படாமல் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஏனெனில், தொலைபேசி என்பது பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்திற்கிடையேயான முக்கிய தொடர்பு வழிமுறையாகும். அழைப்புகள் பதிலளிக்கப்படாதபோது, பொதுமக்களின் பணிகள் தாமதமாகி, ஏமாற்றத்தை ஏற்படுத்துவதோடு, அரச சேவையின் மதிப்பையும் பாதிக்கக்கூடும்.

அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு திறமையான, நட்பான மற்றும் தொழில்முறை சேவையை வழங்க வேண்டிய பொறுப்பு உடையவர்கள். மேனாள் செனட்டருமான அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்

தொலைபேசி அழைப்புகளை அலட்சியம் செய்வது நேர்மை மற்றும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட அரசுச் சேவையின் அடிப்படை நோக்கத்திற்கு முரணானதாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து அமைச்சகங்களும் மற்றும் அரசுத் துறைகளும் பின்வருவனவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாயக்கா தேசிய உதவி தலைவர்களில் ஒருவருமான டத்தோ முருகையா வலியுறுத்தி உள்ளார்.

1.  தொலைபேசி இணைப்புகள் சரியாக பராமரிக்கப்பட்டு, உடனடியாக பதிலளிக்கப்படுவதை உறுதி செய்தல்.
2.  தொடர்பு பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களின் செயல்திறனை கண்காணித்தல்.
3.  பொதுமக்கள் மையமாகக் கொண்ட, பொறுப்புணர்வு மிக்க பணியியல் பண்பாட்டை மேம்படுத்தல்.

இந்த விடயத்தில் பொதுமக்களிடமிருந்து பல புகார்கள் கிடைத்துள்ளதால், அவர்களின் கவலைகளை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயம், அனைவரின் ஒத்துழைப்புடன் அரசுச் சேவையின் தரம் மேலும் மேம்படும் என்பதில் நம்பிக்கை உள்ளது.

மஇகா எப்போதும் பொதுமக்களின் உரிமை மற்றும் நலனை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. இந்த விடயத்தை அதிகாரிகள் தீவிரமாக எடுத்துக் கொண்டு, உடனடி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று நம்புவதாக டத்தோ முருகையா மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை