
பிப்ரவரி 21 உலக தாய்மொழி நாள். தாய்மொழியின் பெருமையையும், மொழி உரிமைக்காக உயிர்தியாகம் செய்தவர்-களின் நினைவையும் போற்றும் நாள்தான் பிப்ரவரி 21.
1952 ஆம் ஆண்டு, இன்றைய வங்காள தேசத்தில் மாணவர்கள் தங்கள் தாய்மொழி-யான வங்க மொழிக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்று அன்றே அமைதி-யான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் பலர் உயிர்தியாகம் செய்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, கடந்த 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஐ ‘யுனெஸ்கோ’ உலக தாய்-மொழி நாளாக அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் இந்த நாளை அனைவரும் அவரவர் தாய்மொழி-யைப் போற்றும் நாளாகவும் மற்ற மொழிகளை மதிக்கும் பாங்குடனுடன் கொண்டாடி வருகின்றனர்.
தாய்மொழி என்பது வெறும் தொடர்பு கொள்ளும் கருவி அல்ல. அது நம் சிந்தனை, நம் உணர்வு, நம் பண்பாடு, நம் அடையாளம். ஒரு குழந்தை முதலில் கற்றுக்கொள்வது தாயின் மொழிதான். அதனால்தான் அது தாய்மொழி என அழைக்கப்படுகிறது.
மொழி அழிந்தால், அந்த மொழியுடன் சேர்ந்து அந்த இனத்தின் வரலாறும், பண்பாடும், பாரம்பரியமும் மங்கி அழிந்து-விடும். ஆகையால், தாய்மொழியைக் காக்கவும் வளர்க்கவும் நம் ஒவ்வொரு-வருக்கும் பொறுப்பு உண்டு.
அந்த வகையில் ‘அறிவு ஆசான்’ தலைவர் தந்தை பெரியார் வலியுறுத்தியதுபோல், மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் அல்ல; அது மாந்தனின் சிந்தனைக்கு அடிப்படை, சமூக விழிப்புணர்விற்கான கருவி, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் ஆயுதம். தன் தாய்மொழியை இழக்கும் சமூகமென்பது தன் சுயமரி-யாதையை இழக்கும் சமூகமாக மாறிவிடும்.
எனவே, நாம் நம் இல்லங்களில் தாய்மொழி-யில் பேசுவோம். தமிழ் புத்தகங்கள் வாசிப்போம்.
நம் மொழியின் இனிமையை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம்; சொல்வோம். பல மொழிகளைக் கற்றாலும், தாய்மொழியை மறக்காமல் பேணுவதுதான் உண்மையான முன்னேற்றம். ஏனெனில், தாய்மொழிவழி பெறாததை ஒரு சமூகம் வேறுஎவ்வழியிலும் பெறாது.! அறிவுக்காக ஆயிரம் மொழி கற்றாலும் நாம் சிந்திக்கும் மொழி தாய்மொழியாக தான் இருக்கும். சிந்தனை மொழி சிதைவுற்றால் எந்த இனமாக இருந்தான் அதன் அடையாளம் அழிவுறும்.
எனவே, இவ்வுலகத் தாய்மொழி நாளில், ‘என் மொழி என் பெருமை’ என்ற உறுதியுடன், நாம் அனைவரும் நமது தாய்மொழியானத் தமிழ்மொழியை நேசித்து, சுயமரியாதை உணர்வோடு வாழ்வோம் வளர்வோம்..!
சுயமரியாதையுடன்: நாக.பஞ்சு,
தலைவர், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம்.
21-02-2026
(நேற்றைய உலகத் தாய்மொழி நாள் தொடர்பில், மலேசிய மாந்தநேய திராவிடர்க் கழகத் தலைவர் மானமிகு நாக. பஞ்சு, நேற்றைய முன்தினம் அனுப்பிய செய்தி; தாமதாம வெளியிட நேர்ந்தமைக்கு குமரி உளமார வருந்துகிறாள்)


