
கெடா மாநிலத்தில் புதிய இந்து மின் சுடலை கட்டுவதற்கு மடானி அரசாங்கம் 25 லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இந்திய சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக கெடா மாநில இந்திய சமூகம் முன்வைத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து இந்த மிகப்பெரிய மானியம் வழங்கப்படுகிறது.
பிரதமருடன் தாம் நேரடியாக பேசியதன் பலனாக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.
சுங்கை பட்டாணி அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தின் மேற்பார்வையில் நடைபெறும் இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு ஜூன்- ஜூலை மாதத்தில் நிறைவடையும்.
மடானி அரசாங்கம் மானியம் வழங்கியதுபோக நிதி பற்றாக்குறை நிலவினால் ஆலய நிர்வாகமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் .
இந்த புதிய மின் சுடலை கட்டுவதன் தொடர்பான பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.
கடந்த 2024 செப்டம்பர் 25 அன்று தீபாவளி நிகழ்ச்சியின்போது சிறப்பாக அறிவித்தபடி, பல மாநிலங்களில் இந்திய சமூகத்திற்கான புதிய மின்சுடலை வசதியை மேம்படுத்துவதற்காக மொத்தம் வெ.20 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சண்முகம் நினைவூட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டின் சில பகுதிகளில் இன்னும் போதுமான மின் சுடலை வசதி இல்லாததால் இந்து சமூகங்கள் பல சவால்களை எதிர் கொள்கின்றன.
இதன் காரணமாக, சில குடும்பங்கள் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய மற்ற மாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகிறது.
இது குடும்பத்தினருக்கு கூடுதல் மன அழுத்தத்தையும் செலவையும் ஏற்படுத்துகிறது.
“இந்த நாட்டில் உள்ள இந்து சமூகத்தின் அடிப்படை தேவைகள் உரிய கவனத்துடன் பார்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்”.
” மின் சுடலை என்பது வெறும் கட்டிட வசதி அல்ல; அது சமய மரபு, பாரம்பரியம் மற்றும் துயரமான நேரத்தில் குடும்பத்தின் மரியாதையுடன் நேரடியாக தொடர்புடைய ஒன்று” என்றும அவர் கூறினார்.
இந்த முயற்சியின் கீழ் மொத்தம் 10 புதிய மின்சுடலைத் திட்டங்கள் எட்டு மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அவை ஜொகூர், பேராக், சிலாங்கூர், மலாக்கா, கெடா, நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்கள் ஆகும்.
உள்ளூர் தேவைகளை கருத்தில் கொண்டு, ஜொகூர் மற்றும் பேராக் மாநிலங்களுக்கு தலா இரண்டு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மற்ற மாநிலங்களுக்கு தலா ஒரு மின் சுடலை வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஐந்து மாநிலங்களுக்கு மட்டும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் பகாங் மாநிலமும் திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
சில இடங்களில் ஏற்கேனவே உள்ள வசதியுடன் கூடுதலாக இன்சினரேட்டர் (தகன இயந்திரம்) சேர்த்து சேவையின் திறன் அதிகரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஜொகூர் மாநிலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலில் இந்த ஒதுக்கீட்டை பெற்றது. அதன் பின்னர் மே மாதத்தில் பேராக் மாநிலம் பெற்றது. மற்ற திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் அனைத்தும் 2025 அக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மொத்தம் 10 கிரிமிட்டோரியத் திட்டங்களும் 2027-ஆம் ஆண்டுக்குள் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தருணத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.


