Thursday, March 19, 2026

மலேசிய இந்திய முஸ்லிம் இளைஞர் இயக்கம்-கெபிமா’வின் மாந்தநேய நோன்பு துறப்பு!

நிகழும் ஹிஜ்ரி ஆண்டு 1447 நோன்பு மாதத்தில் கெபிமா இயக்கத்தின் சார்பில் நேற்றைய முன்தினம் பொதுப் பணித் துறை அரங்கத்தில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சி, நலிந்தோர் நலம் நாடிய மாந்தநேய நிகழ்ச்சியாக அமைந்தது.

இந்த இயக்கத்தின் சார்பில் 27 ஆம் ஆண்டாக நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சி இது.

கடந்த 30 ஆண்டுகளாக இந்த நாட்டில் தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு குறிப்பாக இளைஞர்களுக்கான சமூகநல-மார்க்கம் சார் தொண்டாற்றி வருகின்ற கெபிமா இயக்கம், இந்த ஆண்டு நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்கள், பேறுகுறைந்த சிறுயோர்-பெரியோர் மற்றும் அடைக்கலம் நாடியுள்ளோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்புடன் உணவுப் பொருட்களையும் வழங்கியது.

நோன்பு திறப்புடன் நடைபெற்ற இந்த சிறப்பு சமூக நல உதவி, அழிந்தோருக்கு பண்டிகைக்கால அணுகூலமாக அமைந்தது

மக்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையுடனும் பெருநாளைக் கொண்டாடும் வகையில் கெபிமா இந்த உதவியை செய்து வருவதாக, கெபிமாவின் தோற்றுநர் ஜனாப் முகமது பின் காதிர் அலி தெரிவித்தார்.

அண்மை க்காலமாக சமூகத்தை பாதிக்கும் வகையில் நடைபெற்றுவரும் சில சம்பவங்களை மிகவும் வருத்தம் அளிப்பதாக அவர் கூறினார்.

மலேசியாவின் அடையாளமே பல்லின மக்களும் மற்றவரின் சமயத்தையும் கலாச்சாரத்தையும் மதித்து ஒற்றுமையாக வாழ்வதுதான் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய நல்லிணக்கத்தை நிலைநாட்ட நம் முன்னோர் செய்த தியாகமும் உழைப்பும் வீணாகும் வகையில் ஒருசில மத வெறுப்பு நபர்களின் சொல்லும் செயலும் அமைந்து உள்ளன என்று இந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது அவர் செய்தியாளர்-களிடம் தெரிவித்தார்.

இத்தகைய கெடுமதியாளர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டால் இந்த நாட்டின் அடையாளமும் அமைதியும் பாதிக்கப்படும் என மூத்த சமூக சேவகரு-மான ஜனாப் முகமது பின் காதிர் அலி கவலை தெரிவித்தார்.

கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக தொடரும் இஸ்ரேல்–அமெரிக்கா–ஈரானிய மோதலால் பல நாடுகள் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டு வரும்நிலையில், சாணக்கியமான முன்னேற்பாடுகளை செய்து, அதே நேரத்தில் சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமை தாம் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

அரச அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்ததும், நோன்பு பெருநாள் தொடர்பில் பொது உபசரிப்பை ரத்து செய்ததும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு இருப்பு நிலையையும் அவற்றின் விநியோகத்தையும் சீராக மேற்கொள்வது பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

‘அகேட்’ கூழுமத்தின் தலைமை இயக்குநர் டத்தோ வீரா நைனா முகம்மது பின் சுல்தான் அப்துல் காதர், ‘கெபிமா’ இயக்கத்தின் நிறுவனரும் ஆலோசகருமான முகமது பின் காதர் அலி, ‘கெபிமா’ அமைப்பின் ஆலோசகரும் ‘உபைடி’ குழுமத்தின் அறங்காவலர்க் குழுத் தலைவருமான டத்தோ ஹாஜி ஹிஷாமுடின் பின் தான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா, டத்தோ ஹாஜி டாக்டர் சையட் இப்ராஹிம், டத்தோ சேக் ஜமீல், அலி சாஜகான் உள்ளிட்ட பெருமக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில்
ஏறக்குறைய 500 பேருக்கு நலஉதவி வழங்கப்பட்டது.

முகமது இப்ராகிம் தலைமையில் கெபிமா சிறப்பாக செயல்படுவதற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை