Saturday, April 18, 2026

34ஆவது இலக்கியப் போட்டிக்கு படைப்புகள் வரத் தொடங்கி விட்டன! -கரு.பன்னீர்செல்வம்

மலேசியத் தமிழ்ப் பூங்காவின் இலக்கியப் பாத்திக்கு தொடர்ந்து நீர் பாய்ச்சுகின்ற தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு சமூகம் மிகுகடமைப் பட்டுள்ளது.

இச் சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம், கடந்த ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் இலக்கிய போட்டியை அறிவித்து இதன் தொடர்பில் ஏடுகளில் செய்தியும் விளம்பரமும் வந்த நிலையில் போட்டிக்கான இலக்கிய படைப்புகள் வரத் தொடங்கி விட்டன.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் விரைந்து தங்களின் படைப்புகளை அனுப்புவதில் முனைப்பு காட்ட வேண்டும்; நிறைவு நாள் ஜூன் 30.

34-ஆவது முறையாக இப்போட்டி நடைபெறுகிறது.

சிறுகதை (பொதுப்பிரிவு), மரபுக்கவிதை, கட்டுரை, புதுக்கவிதை, உயர்க்கல்வி மாணவர்களுக்கான சிறுகதை என 5 பிரிவுகளை உள்ளடக்கியது இப்போட்டி.

ஏப்ரல் திங்கள் முதல் நாள் முதல் 30.6.2026 ஆம் நாள்வரை இலக்கிய படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பலாம் என்று அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து பிரிவுகளையும் சார்ந்து படைப்புகள் வர தொடங்கி விட்டதாக அறவாரிய நிருவாக பொறுப்பாளர் கரு. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆர்வமுள்ள எழுத்தாளர்களும் உயர்க் கல்வி மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில், இப்போட்டிகள் இரண்டு பிரிவுகளாக நடத்தப் படுகின்றன. புதிய எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துத் தரும் தளமாகவும் இந்தப் போட்டிகள் அமைகின்றன.

1992 ஆம் ஆண்டு முதல், கடந்த 33 ஆண்டுகளாக டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி – இலக்கிய அறவாரியத்தால் நடத்தப்பட்டு வரும் இந்த இலக்கியப் போட்டிகளின் விளைப்பயனாக நாட்டில் ஏராளமான புதிய எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் உருவாகி தமிழ் இலக்கிய உலகத்திற்கு சிறந்த படைப்புகளை வழங்கி வருகின்றனர்.

ஆகவே, இந்தாண்டு நடைபெறும் போட்டிகளில் இன்னும் அதிகமானோர் கலந்து கொண்டு, தமிழ் இலக்கிய உலகத்தின் பரிணாம வளர்ச்சியை பதிவு செய்ய வேண்டும் என சங்கத்தின் நிருவாக இயக்குனரும் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் செயலாளருமாகிய மதிப்புமிகு டத்தோ பா.சகாதேவன் கேட்டுக்கொள்கிறார்.

தமிழ்மொழிக்கும் இனத்திற்கும் கீழ்க்காணும் துறைகள் சார்ந்து மிகுபயன் விளைவித்தல்; மொழிச்சார்ந்த இலக்கிய வடிவங்களின் புதிய பரிணாம வளர்ச்சியைப் பதிவு செய்தல்; இனம் சார்ந்த கலை, கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகளை வளப்படுத்துதல்; சமுதாய முன்னேற்றத்திற்குக் கல்வி, அறிவி-யல், வாணிகம், தொழில் சார்ந்த படைப்பிலக் கியங்களின்வழி வாழ்க்கையை மேம்படுத்துதல்; மனிதநேயத்தையும் அகமேம்பாட்டையும் படைப்பிலக்கி-யங்களின்வழி வளர்த்தல் ஆகிய நோக்கங்களை இலக்காகக் கொண்டு, இப்போட்டி தொய்வில்லாமல் நடத்தப்படுகிறது.

பரிசுத்தொகை:
அனைத்து போட்டிகளிலும்முதல் பரிசாக 2,500வெள்ளியும் இரண்டாம் பரிசாக 1,750வெள்ளியும் மூன்றாம் பரிசாக 1,250வெள்ளியும் வழங்கப்படும் அதேவேளை, ஒவ்வொரு பிரிவிலும் மூன்று ஆறுதல் பரிசுகள் தலா 500 வெள்ளிவீதம் வழங்கப்பட இருக்கின்றன

பொது பிரிவில் சிறுகதை, கட்டுரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை என நான்கு பிரிவும் மாணவர் பிரிவில் சிறுகதை என ஒரு பிரிவுமாக மொத்தம் ஐந்து பிரிவுகள் இந்த போட்டியில் இடம்பெறுகின்றன.

கீழேக் கொடுக்கப்பட்டிருக்கும் ஏதேனும் ஒரு துறைச் சார்ந்ததாக இலக்கிய படைப்பு இருக்க வேண்டும்;

தமிழ்மொழியின் இலக்கணம், சொல்லாட்சி, மரபு ஆகிய கூறுகள் சார்ந்து தரமுடையதாக இருக்க வேண்டும்.

எழுத்தாளர்களின் படைப்பு, கொடுக்கப்படும் தலைப்புக்கேற்பவும் சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும்.

பொதுப் பிரிவு:
மலேசிய நாட்டு குடியுரிமையுள்ள எழுத்தாளர்கள் மட்டுமே இந்தப் போட்டி-களில் கலந்து கொள்ள முடியும். ஒருவர் ஒரு துறையில் ஒரு படைப்பை மட்டுமே போட்டிக்கு அனுப்பி வைக்கமுடியும். படைப்புகள் தங்களது சொந்தப் படைப்பு என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்துடன் தங்களின் தெளிவான அடையாள அட்டையின் நகலும், அண்மையப் புகைப்படமும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
(படைப்பாளர்கள் தமது அசல் படைப்புடன் மேலும் இரு நகல்கள் எடுத்து 3 படிகளாக அனுப்பி வைக்க வேண்டும்.)

மாணவர் பிரிவு:
மாணவர் பிரிவு படைப்பாளர்கள், உயர் கல்விக்கூடங்கள் (ஆறாம் படிவம் / கல்லூரிகள் / மெட்ரிகுலேஷன்) மற்றும் பல்கலைக்கழகங்களில் முழுநேர-மாகப் பயில்கின்றவர்களாக இருக்க வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் தங்களின் சொந்தப்படைப்பு என்பதை உறுதி செய்யும் வகை-யில், தங்கள் கல்விக்கூடங்களின் பொறுப்பாசிரியரின் உறுதிச் சான்றிதழை-யும் இணைத்து, தெளிவான அடையாள அட்டையின் நகலுடன், அண்மைய புகைப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

சிறுகதை:
சிறுகதைகள், மனித வாழ்வியலோடு ஒட்டிய சம்பவங்கள், சமுதாய உணர்வு, சீர்திருத்தக் கருத்துக்கள் ஆகியவற்றை சுவைப்படச் சித்தரிப்பதாக,
படைப்புகள் 5 பக்கங்களுக்குள் அமைய வேண்டும்.

மரபுகவிதை:
மரபுக்கவிதைசார் படைப்புகள் எண்சீர், அறுசீர் விருத்தங்களாகவும் நான்கடி சந்தப்பாடலாகவும் ‘உண்மை உழைப்பே உயர்வைக் காட்டும்’ அல்லது ‘தாழ்ந்துப் போகாதே வீரமிக்கத் தமிழாநீ’ என்ற தலைப்புகளில் ஒன்றனுக்கு 80 வரிகளுக்கு மேற்போகாமல், கவிதைகள் எழுதப்பட வேண்டும்.

மலேசியத் தமிழர்களின் முன்னேற்றம், ஒற்றுமை, மொழிப்பற்று மற்றும் மேன்மைக்கான வழிகள் என்ற கருப்பொருள் நாட்டப்படுவதுடன், மரபு பிசகாமல் கவிதைகள் அமைய வேண்டும். மேலும் ஒவ்வொரு படைப்பிலும் 10 உவமைகள் குறையாமல் இடம் பெற வேண்டும்.

புதுக்கவிதை:
புதுக்கவிதைப் படைப்பு ‘மனிதத்தை இணைப்பது சமயமும் மொழியும்’ அல்லது ‘போரைக் கடந்த மனித நேயம்’ என்ற பொருளில், 80 வரிகளுக்கு மிகாமல் புதுக்கவிதைகள் எழுதப்பட வேண்டும். வழங்கப்பட்டுள்ள தலைப்பை உள்ளடக்கியே கவிதைகள் அமைய வேண்டும்.

கட்டுரை:
கட்டுரைப் படைப்புகள் ஆய்வுக் கட்டுரையாகவும் உரிய சான்றுகள், துணை நூல்களின் குறிப்புகளுடனும் வழங்கப்பட்டுள்ள ஒரு தலைப்பில், 8 பக்கங்-களுக்கு மிகாமல் அமைய வேண்டும்.
தலைப்புகள்
அ. மலேசியத் தமிழரின் சுவடுகள்
ஆ. சமத்துவம் மலர்வதில் ஊடகங்களின் பங்கு..

இந்த 34ஆவது இலக்கியப் போட்டிக்கான பொது விதிகள்
(i) எல்லா படைப்புகளும் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

(ii) போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் படைப்புகள் அனைத்தும், வேறு எந்த நூல்களிலோ, சிறுகதை, கவிதைத் தொகுப்புகளிலோ, நாளிதழ்களிலோ, மாத, வார இதழ்களிலோ பிரசுரிக்கப்பட்டவையாகவோ அல்லது மின் ஊடகங்களில் வெளிவந்தவையாகவோ இருக்கக்கூடாது.

(iii) போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் படைப்புகள், குறிப்பிட்ட ஓர் இனத்தையோ, மதத்தையோ சிறுமைப்படுத்துவதாக இருந்தாலோ, இனத்துவேசம், தேச நிந்தனை, அல்லது நாட்டுப்பற்றுக்கு ஊறு விளைவிக்கும் கருத்துக்களைக் கொண்டிருந்தாலோ, அவை பங்கேற்பில் இருந்து நீக்கப்படும்.

(iv) போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்துப்படிவங்களும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்திற்கு சொந்தமாகும்.

இதில் அறவாரியத்தின் நூல் தொகுப்புகளில் வெற்றி பெறும் படைப்புகளின் பதிப்புரிமை தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்திற்கே உரியதாகும்.

போட்டியில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள், தனித்தாளில் தங்களின் முழுப்பெயர், புனைப்பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்களை ஆங்கிலத்-தில் எழுதி, தங்களின் படைப்புகளுடன் அடையாள அட்டையின் நகலை-யும் அண்மைய புகைப்படத்தையும் இணைத்து அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

(மேற்குறிப்பிட்டுள்ள ஆவணங்களும், தகவல்களும் இணைக்கப்படாவிடில், அனுப்பி வைக்கப்படும் படைப்புகள் போட்டிகளில் இருந்து தவிர்க்கப்பட-லாம்.)

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின், டான்ஸ்ரீ கே,ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் நியமிக்கின்ற நடுவர்களால், வெற்றிபெறும் படைப்பு-கள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்களின் முடிவே இறுதியானதாகும். இந்தப் போட்டிகள் குறித்தும் மற்றும் போட்டிகளின் முடிவுகள் குறித்தும் கடிதம் அல்லது தொலைபேசி வாயிலான எவ்வித தொடர்புகளும் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.

கூட்டுறவு சங்கத்தில் தற்போது பணிபுரிபவர்கள் இந்தப்போட்டியில் கலந்து கொள்ள இயலாது. போட்டிக்குரிய எல்லா படைப்புகளும் எதிர்வரும் 30.06.2026 ஆம் நாளுக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு வந்து கிடைக்கு-மாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

டத்தோ பா.சகாதேவன் PJN, SSA, PPT, ANS
நிர்வாக இயக்குனர்/செயலாளர்,
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்
(34ஆவது இலக்கியப் போட்டி- 2026),
டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம்,
10 வது மாடி, விஸ்மா துன் சம்பந்தன்,
50768 கோலாலம்பூர்

DATUK B.SAHADEVAN PJN,SSA,PPT,ANS
Managing Director/Secretary,
NATIONAL LAND FINANCE COOPERTAIVE SOCIETY,
(34th Literary Contest’ 2026),
Tan Sri K.R.Soma Language & Literary Foundation,
Level 10, Wisma Tun Sambanthan,
2 Jalan Sultan Sulaiman, 50768 Kuala Lumpur.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை