Saturday, April 18, 2026

நன்னெறிப் பாடத்திலும் இனி எஸ்எம்சி கவனம் செலுத்தும்! -சுரேஷ் கந்தா

ஸ்ரீ முருகன் செண்டர்-எஸ்எம்சி இனி எஸ் பி எம் நன்னெறி பாடத் தேர்விலும் அக்கறை செலுத்தும் என்று அதன் தலைமை இயக்குனர் சுரேஷ் கந்தா தெரிவித்தார்.

கோலசிலாங்கூர் கோல் பீல்ட் வெஸ்லி மெத்தடிஸ்ட் பள்ளி மண்டபத்தில் இன்று
எஸ்எம்சி சார்பில் கல்வி யாத்திரை நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.

கோல சிலாங்கூர் பகுதியை சேர்ந்த ஆசிரியர் சுகுமாரன் ஆறுமுகம் ஒருங்கிணைப்பில் சுற்றுவட்ட தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டை இலக்காகக் கொண்டு இந்தப் பகுதியில் எஸ் எம் சி மையம் திறக்கப்பட இருப்பதை அறிவித்தார்.

கல்வி ஒன்று தான் நம் சமுதாயத்திற்கு மீட்சியையும் மேன்மையையும் கொண்டுவரும் என்பதால் மாணவர்கள் ஒவ்வொருவரும் கருத்தூன்றி கற்று தன்னையும் தான் சார்ந்த குடும்பத்தையும் மேம்படுத்தி சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று சுரேஷ் கந்தா குறிப்பிட்டார்.

சுற்றுவட்டார தமிழ்ப் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏறக்குறைய ஆயிரம் பேர் திரண்டிருந்த மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

‘நினைவில் வாழும்’ டான்ஸ்ரீ தம்பிராஜா தொடங்கி வைத்த இந்தக் கல்வி நிலையம் இந்திய சமுதாய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்து வருகிறது.

நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டிருக்கும் எஸ் எம் சி நிறுவனம், தற்பொழுது கோல சிலாங்கூர் வட்டாரத்தில் புதிய கிளையைத் தொடங்கி தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மற்றும் இடை நிலைப்பள்ளி இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் உறுதுணையாக இருக்க முன்வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அதிகமானோர் கலந்து கொள்வார்களா என்ற ஐயம் நிலவியதாகவும் அதிர்ஷ்ட குலுக்கல் கலை நிகழ்ச்சி போக்குவரத்து வசதி உணவு ஏற்பாடு இருந்தால்தான் நம் மக்கள் அதிகமாக திரளுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் இத்தகைய கூற்றை எல்லாம் இங்கே கூடியுள்ள மக்கள் பொய்யாக்கி உள்ளனர் என்று சுரேஷ் கந்தா தெரிவித்தார்.

பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் நம் பெற்றோர் அதிக அக்கறை கொண்டுள்ளதை இது காட்டுவதாகவும் சுரேஷ் கந்தா மேலும் தெரிவித்தார்.

முன்னதாக குகனேஸ்வரி, ஸ்ரீ கணேஷ், தர்மராஜ், சுகுமார் ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை