
இந்திரா காந்தியின் வழக்கு ஒரு குடும்ப வழக்கு; மாறாக அது சமய வழக்கு அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட்டிற்கு பாலர் பள்ளி முன்னாள் ஆசிரியர், இந்திரா காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
நீண்டகால சட்டப் போராட்ட வரலாற்றை கொண்டுள்ள இந்திரா காந்தியின் வழக்கு, அவரின் மகள் பிரசன்னா தீட்சாவை தன்னுடன் இணைத்து கொள்வதற்கான ஒரு தாய்ப்பாச போராட்டம் ஆகும்.
2009இல் பிரசன்னா 11 மாத குழந்தையாக இருந்தபொழுது அவரின் முன்னாள் கணவர் கே பத்மநாபன் அல்லது முகமட் ரிடுவான் அப்துல்லா என்பவரால் ஒருதலைப் பட்சமாக எடுத்து செல்லப்பட்டது.
ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கு மதம் சம்பந்தப்பட்டது அல்ல; மாறாக தன் குழந்தையை பிரிந்த ஒரு தாயின் பாசப் போராட்டத்தின் அடிப்படையிலானது.

இந்த உண்மையை நாட்டுக்கு எடுத்துரைத்துள்ள தலைமை நீதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திரா காந்தி தெரிவித்துள்ளார்.
தற்பொழுது 17 வயதை எட்டியுள்ள மகள் பிரசன்னாவை இத்துணை காலமும் பிரிந்து இருப்பது கடுமையான துயரத்திற்கும் துன்பத்திற்கும் உரியது.
மகள் பிரசன்னா தொடர்பான இந்த வழக்கின் நீண்ட பயணத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் கூட்டரசு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒரு முக்கியமான திருப்புமுனைத் திர்ப்பாகும். தன் முன்னாள் கணவர், தங்களின் மூன்று பிள்ளைகளையும் ஒருதலைப் பட்சமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்றியது செல்லுபடியாகாது என்று நாட்டின் உச்ச நீதி அமைப்பான கூட்டுரச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு இவ்வாறாக இருந்தாலும் காவல்துறை இதுவரை தன்னுடைய மகளை கண்டுபிடிக்கவில்லை.
கூட்டரசு நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் தன் மகள் பிரசன்னா கிடைத்துவிடுவாள் என்று என்னை போலவே நாட்டில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொண்டனர். ஆனால் இதுவரை அது நடைபெறவில்லை. காவல்துறையின் அமலாக்கத்தில் இதை ஒரு பின்னடைவாகப் பார்க்கிறேன். மகள் பிரசன்னாவிற்காக என்னால் ஆன அனைத்தையும் செய்து விட்டேன் ஆனாலும் இதுவரை எனக்கு நீதி கிடைக்கவில்லை என்று இந்திரா காந்தி மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.
தலை நகரில் நேற்று கருத்து தெரிவித்த நாட்டின் தலைமை நீதிபதி, தன்னுடைய நீதித்துறை பயணத்தில் இந்திரா காந்தியின் வழக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய வழக்காகும் என்று குறிப்பிட்டார்; சிவில் நீதிமன்றம் இந்திரா காந்திக்கு சாதகமான தீர்ப்பை அளித்திருந்த போதிலும் ஷரியா நீதிமன்றம் அதற்கு மாறான தீர்ப்பை அளித்தது.
‘Live to Lead’ என்று தலைப்பிடப்பட்ட ஒரு கருத்தரங்கில் நேற்று பேசிய தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட், பெரும்பாலான வேளைகளில் இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதல்கள், பொதுவெளியில் மாறுபாடான கருத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் குறிப்பிட்டார்.


