
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டிற்கான நிதியைப் பயன்படுத்துவதில் இருந்து தடுப்பது ஜனநாயக நடைமுறைக்கு முரணானது என்று மக்கள் முற்போக்குக் கட்சி-மமுக தலைவர் டத்தோ லோக பாலமோகன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், ‘மலேசிய மடாணி’ முழக்கத்துடன் செயல்படுகிறது. இந்த நிலையில் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சுபாங் எம்பி வோங் சென், அம்பாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், பெட்டாலிங் ஜெயா மக்கள் பிரதிநிதி லீ ச்சியான் ச்சங் ஆகிய மூவரும் தத்தம் தொகுதிக்கான சிறப்பு நிதியை நிர்வகிக்கும் MyKhas இணையதளத்தை அணுகுவதிலிருந்து அண்மையில் தடுக்கப்பட்டுள்ளனர்.
இம்மூவரும், கடந்த மேத் திங்களில் ‘பெர்சம’(BERSAMA) கட்சி தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
பிகேஆர் மேநாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, மேநாள் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோரால் இந்தப் புதியக் கட்சி நிறுவப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்டதற்காகவே மேற்கண்ட மூன்று எம்பிக்களும் ரத்தம் தொகுதிக்கான நிதியுடைய பயன்படுத்த முடியாதவாறு தடை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று மக்கள் பிரதிநிதிகளும் கட்சி அளவில் தவறு செய்திருந்தால் அதை, கட்சி மட்டத்தில் தீர்க்க வேண்டுமே அல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் வகையில் தத்தம் தொகுதிகளுக்கான பணியை மேற்கொள்வதில் இருந்து தடை செய்வது ஜனநாயக முறை கிடையாது.
இந்த சிக்கலால் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் லோக் சென் எம்பி பொறுப்பில் இருந்து விலகி இருப்பது அந்த தொகுதி மக்களுக்கு நேர்ந்துள்ள இழப்பாகும்.
கட்சி அரசியலையும் அரச நிர்வாகத்தையும் தொடர்புப்படுத்துவது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல என்றும் முன்னாள் துணை அமைச்சருமான டத்தோ லோக பால மோகன் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்


