
இம்மலையகத்தின் தமிழர்தம் தாய்க் கட்சியான மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா என்னும் அரசியல் பேரியக்கத்தில் பதவி என்னவோ தேசிய துணைத் தலைவர்தான்; நடைமுறை என்னவோ தேசிய இணைத் தலைவரைப்போல;
தேசியத் தலைவரும் அதற்கான பாட்டையை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் எங்கெங்கும் பாட்டுடைத் தலைவனாக வலம் வருகிறார் டத்தோஸ்ரீ சரவணன்.
மஇகா தேசியத் தலைவரும் இவரும் கோடம்பாக்கத்து ஜெமினி பொம்மையை போல ஒன்றாக திசைத் திரும்புகின்றனர்; ஒருசேர முகம் காட்டுகின்றனர்; ஒருவர் எண்ணுவதை மற்றவர் வெளிப்படுத்துகிறார் அப்படியே.

எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணை வேந்தரைப் போல மஇகா-வின் இணைத் தலைவராக வலம்வரும் டத்தோஸ்ரீ சரவணன், சமூகவெளி, தமிழ் இலக்கிய வட்டம், அயலகத் தமிழர் சுற்றம் என எங்கெங்கும் மஇகாவின் முகமாக காட்சி தருகிறார்; மலேசிய நாடாளுமன்றத்திலும் அப்படியே பிரதிபலிக்கிறார்.
கண்ணதாசன் பிறந்தநாள் விழா, நூல் வெளியீட்டு விழாக்கள் என்றெல்லாம் தமிழ் இலக்கிய அன்பர்களுக்கு விட்டுவிட்டு இலக்கிய விருந்து படைத்து வருகிறார்; கதகதக்கும் அரசியல் பயணத்தில் தகதகக்கும் வெம்மையை தணிக்கும் முகமாக தண்மைதேடி இலக்கிய வட்டத்தை தொட்டுத்தொட்டு செல்கிறார்.

மலையக இந்திய சமூகத்தின் – தமிழர் குலத்தின் நாளைய வழிகாட்டி! இன்றைய சமூகத் தேரோட்டி!!
இத்தகைய சரவணனார், நீடு வாழ்ந்து நெடியது நாட்டுக என்று குமரி நல்லாள் வாழ்த்துகிறாள்.
இந்தத் தமிழ் நல்முத்து என்னும் வார்ப்படம், நல்வித்தாக உருவான அச்சு என்னும் மங்கைநல்லாள் சமூகத்தின் வாழ்த்துக்கும் போற்றுதலுக்கும் உரித்தாகட்டும்!
வாழ்க வாழ்க சரவணன்! எய்துக எய்துக இன்னும் புகழ்ப்பேறு!!


