
சரவணனார் டத்தோசிறி பிறந்தநாள் இன்று
தமிழினமும்,இந்தியரும் பிறயினத்தார் தாமும்
கரங்கொடுத்தும் கைகுவித்தும் வாழ்த்துரைத்தார் அவர்க்கே
கலையழகாம் தமிழ்ப்பொழிவில் ; காண்பவர்க்கே அரசில்
பொறுப்பழகாம் ; மலேசியரின் பராமரிப்பி னோடும்
பிறப்பினத்தைப் பேணுவதில் பேரழகாம் ; இறையின்
அருள்பெற்ற சரவணரே, உம்பிறந்த நாளில்
வரம்பின்றி எல்லாரும் உமக்குரைத்தார் வாழ்த்து !
தமிழ்க்கவிதை வளர்ச்சியுடன், தமிழ்மொழியின் காப்பும்
தமிழ்சொல்லும் இலக்கியத்தின் மேன்மைக்கும் நாட்டுத்
தமிழினத்தார் உள்ளிட்ட இந்தியர்மேன் மைக்கும்
தாப்பா வாழ் மலேசியர்கள் அனைவருக்கும் தம்மின்
இமைமூடாக் கண்கொண்டே இயன்றபணி செய்த
எல்லார்க்கும் நட்பாக, இணைவார்க்கெ உறவாய்த்
தமைக்கருதி வாழ்ந்துவரும் சரவணனார் நாளும்
தரணியிலே தமிழ்முருகன் அருள்பெற்றே வாழ்க !
“இவரால்நான் உயர்ந்தே(ன்)”என் றுரைப்பார்க்கு மாற்றாய்
” என்னாலே இவருயர்ந்தார்” என்றுபிறர் கூறும்
அவர் ஆக வாழ்பவர்தாம் அருந்தமிழ ரூடே
அதிகம்பேர் இருப்பதற்கே ஆவனசெய் பவராய்
எவரையுமே உருவாக்கும் வார்ப்படமாய் நம்மின்
எதிர்காலத் தலைவரெனச் சரவணனார் வாழ்க !
சுவர்பூனை ஆகாமல் துல்லியமாய் முடிவைச்
சூட்சமமாய் எடுத்துவரும் சொல்வேந்தே வாழ்க !
பாதாசன்



