
பழம்பெரும் நடிகையும் ஏவிஎம் ராஜனின் மனைவியுமான புஷ்பலதா காலமானார்.
இவர், 1958 இல் வெளியான செங்கோட்டை சிங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் கோடம்பாக்கத்துக்கு அறிமுகமானார்.
1966ஆம் ஆண்டில் திரைகண்ட கொங்கு நாட்டு தங்கம் என்ற திரைப்படத்தின்மூலம் நட்சத்திர நாயகியாக உயர்ந்தார் புஷ்பலதா.
தொடர்ந்து முன்னணி நடிகர்களான எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் எஸ் எஸ் ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்திருந்தார்.
நானும் ஒரு பெண் என்ற படத்தில் ஏவிஎம் ராஜேந்திரனுடன் இணைந்து நடித்தபொழுது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, மணம் புரிந்துகொண்டனர்.

நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த புஷ்பலதா, மலையாளம் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருந்தார், தமிழில் இவர் நடித்த சாரதா, பார் மகளே பார், கற்பூரம் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.
தொடர்ந்து சகலகலா வல்லவன், நான் அடிமை இல்லை, ஐயா உள்ளிட்ட
படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மூப்பின் காரணமாக திரைப்படத்துறையில் இருந்து விலகி சென்னையில் அமைதியாக வாழ்ந்து வந்த புஷ்பலதா அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று பிப்ரவரி நான்காம் நாள் மாலையில் புஷ்பலதா காலமானார்; அவருக்கு வயது 87.
அவரின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


