Thursday, April 2, 2026

தைப்பூச திருநாளை சமய நெறியோடு கொண்டாடுவோம்: ‘சிவநெறி செல்வர்’ தங்க கணேசன்

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 05:
தைப்பூச திருநாளை இந்து சமய மக்களாகிய நாம் அனைவரும் சமயநெறி வழுவாமல் அதேவேளை பாரம்பரியத் தன்மை குன்றாமல் சிறப்பான முறையில் கொண்டாடுவோம் என்று 2025 தைப்பூச நன்னாள் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக செய்தியில் மலேசிய இந்து சங்கத் தலைவர் ‘சிவநெறி செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்து சமய விழா எதுவாக இருந்தாலும் ஆன்மீக மேன்மையை நிலைநிறுத்த பக்தர்கள் முன்வர வேண்டும்.
தைப்பூச திருநாளைப் பொறுத்தவரை எல்லா ஆலயங்களிலும் அன்னதான சேவை தாராளமாக வழங்கப்படுகிறது. இவ்வாறான சேவையை அதன் பாங்கு அறிந்து பக்குவமாக பயன்படுத்திக் கொண்டால் நன்மை விளையும்.

குறிப்பாக உணவை வீணடிக்காமல் தேவையான அளவை மட்டும் எடுத்து சாப்பிட்ட பின் சம்பந்தப்பட்ட நுரைப்பத் தட்டு குவளை மற்றும் நெகிழிப் பைகளை அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் சேர்ப்பது நம் ஆன்மீக தலங்கள் தூய்மையாக இருக்க துணை புரியும்; தவிர இன்னொரு தரப்பினர் வந்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் நேராது

நம் வழிபாட்டு தலங்களை பராமரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உண்டு என்பதை பக்த அன்பர்கள் இந்த வேலையில் நினைவில் கொள்ள வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக உணவை வீணாக்குதல் தவிர்க்கப்பட வேண்டும். தேவைக்குமீறி உணவை எடுத்துக்கொண்டு சாப்பிட்டும் சாப்பிடாததுமாக கண்டபிடி வீசுவது மிகவும் பொறுப்பற்ற செயல்.

காவடி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தும் அன்பர்களில், பெரும்பாலானவர்கள் மாலை, பூ உள்ளிட்ட பொருள்களை தேவைக்கு அதிகமாக வாங்கி வந்து, பயன்படுத்தியது போக மீதப் பொருள்களை ஆங்கெங்கே அப்படி அப்படியே விட்டுவிட்டு செல்வது பொருத்தமாகத் தெரியவில்லை; இவ்வாறு சேரும் பொருள்கள், குப்பையாக குவிவதுடன் அடுத்தடுத்து காவடி ஏந்தவரும் அன்பர்களுக்கு இடையூறாகவும் அமைந்து விடுகிறது. ஒரு சிலர் காவடி புறப்பட்டதும் சுத்தம் செய்கின்றனர்; பெரும்பாலானவர்கள் அப்படி அப்படியே விட்டுச் செல்கின்றனர்.

இதைத் தவிர்ப்பதற்காக மலேசிய இந்து தர்ம மன்றத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் காவடி ஏந்துமிடத்தில் இருக்கின்றனர். பாலும் குடமும் மட்டும் கொண்டு வந்தால் போதும்; பூஜை உள்ளிட்ட மற்ற அனைத்தையும் அவர்களே செய்து கொடுக்கின்றனர்; காவடி எடுப்பதற்கான அணுகூலங்களையும் அவர்கள் செய்து கொடுக்கின்றனர். அதற்கு ஏற்ப குருக்கள்மாரும் தேவையான பொருட்களுடன் ஆற்றங்கரையில் தயாராக இருப்பார்கள். பக்தர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்வது நலம் என்று மலேசிய இந்து சங்கம் கருதுகிறது.

நம் அன்பிற்குரிய பக்தர்கள் எவரையும் மலேசிய இந்து சங்கம் கட்டாயப்படுத்தவில்லை; அதேவேளை இத்தகைய சேவையைப் பயன்படுத்திக் கொண்டால் பக்தர்களுக்கு சிக்கனமாகவும் இருக்கும்; தேவையற்ற பொருள்கள் அந்த இடத்தில் தேங்கி அறுவறுக்கத் தக்க சூழல் உருவாவதை தவிர்க்கவும் ஏதுவாக இருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக பக்தர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாரம்பரிய உடைகளில் வந்து நமது சமய மேன்மையை நிலை நிறுத்த வேண்டும் என்பதை இந்து சங்கம் மிகவும் வலியுறுத்த விரும்புகிறது. மிகுதியான வெளிநாட்டவர் வருகின்ற இடத்தில் நமது சமயக் கூறுகளையும் பண்பாட்டு மேன்மையையும் கட்டிக்காக்க வேண்டிய கடமை ஒவ்வொரு இந்துவுக்கும் இருக்கிறது என்பதை மலேசிய இந்து சங்கம் அன்புடன் நினைவுறுத்த விரும்புகிறது என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘சங்கபூசன்’ தங்க கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை