Thursday, April 16, 2026

திருநங்கை-நம்பியர்: சொல் அல்ல, சுயமரியாதை! ஆர்.முத்துக்குமார்

புலனத்தில் பகிரப்பட்டு, தரம்கருதி மீள எடுத்தாளப்படும் செய்தி; சிற்சிறு திருத்துடன்.. .

தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணிகள் அல்லது துணை அமைப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியல் வரிசையில் திருநர் அணிக்கு ஒன்பதாவது இடம் தரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 9 என்ற எண்ணைக் கொண்டு திருநங்கையர் ‘சொல்வன்முறைக்கு உள்ளாக்கப்படும் நிலையில், விஜய் தலைமையிலான அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகம்-தவெகவின் இந்த அறிவிப்பு சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது.

முதல் எதிர்ப்புக்குரலை எழுத்தாளர் லிவிங்ஸ்மைல் வித்யா எழுப்பியிருக்கிறார். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு 9 என்ற இழிவை நாங்கள் சுமக்கவேண்டும் என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். அந்த ஆதங்கம் நியாயமானது, புரிந்துகொள்ளக் கூடியது.

அதேசமயம், அந்தக் குறிப்பிட்ட வரிசை எண் திட்டமிட்டோ, வேண்டுமென்றோ தரப்பட்டது என்று நான் நம்பவில்லை. அதேசமயம், ஒவ்வொரு அம்சத்தையும் எப்படி கவனத்துடனும் பொறுப்புடனும் அணுக வேண்டிய தேவை இருக்கிறது என்பதை விஜய்க்கு உணர்த்துவதற்கான வாய்ப்பாகவே லிவிங்ஸ்மைல் வித்யாவின் குரலைப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான சமூகநீதி – சுயமரியாதை சார்ந்த வரலாற்றுக் குறிப்பைப் பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது.

பேரறிஞர் அண்ணா கடிதங்களை எழுதியபோது தம்பி என்று விளித்து எழுதுவார். ஆனால் கலைஞர் மு. கருணாநிதியின் கடிதங்கள் உடன்பிறப்பே என்றுதான் தொடங்கும். சற்று நுட்பமாகப் பார்த்தால் தம்பி என்ற சொல் ஆண்பாலுக்கு மட்டுமே உரியது. ஆனால் உடன்பிறப்பே என்ற சொல் ஆண்பால், பெண்பால், மாற்றுப்பால் என்ற முப்பாலுக்கும் பொருந்தக்கூடியது. ஆம், அண்ணனுக்கும் பொருந்தும், தம்பிக்கும் பொருந்தும், அக்காளுக்கும் பொருந்தும், தங்கைக்கும் பொருந்தும், திருநங்கைக்கும் பொருந்தும், திருநம்பிக்கும் பொருந்தும். அந்த வகையில் கருணாநிதி பயன்படுத்திய உடன்பிறப்பே என்ற சொல், பாலின சமத்துவத்தின் குறியீடு.

அந்தப் பாலின சமத்துவத்தைக் குறியீடாக மட்டுமே வைத்திருப்பதைவிட செயல்வடிவத்துக்குக் கொண்டுவருவதே சரியாக இருக்கும் என்ற அடிப்படையில் மாற்றுப் பாலினத்தவரின் பிரச்னைகளைக் கையிலெடுத்தார் முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி.

உண்மையில், மாற்றுப் பாலினத்தவர்களைக் குறிப்பிடுவதற்கு சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த சில சொற்கள் மாற்றுப் பாலினத்தவர்களைக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கின. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சொல்லைப் பயன்படுத்துவார்கள். ஆனால் எதுவுமே அவர்களின் கண்ணியத்தை உறுதிசெய்யவில்லை. மாறாக, அவர்களைக் காயப்படுத்தவே செய்தன.

அப்படி காலம் காலமாகப் புழக்கத்தில் இருந்தபடி மாற்றுப் பாலினத்தவர்களின் சுயமரியாதையைச் சீண்டிவந்த அந்த சொற்களை அடியோடு நீக்கிவிட்டு, திருநங்கையர் என்ற புதிய சொல்லைச் சட்டரீதியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார் முதலமைச்சராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி.

இது சமூகநீதி மண்!
சுயமரியாதை மண்!
ஆம், பெரியார் மண்!

இந்த நகல் செய்தி தொடர்பில், குமரியின் அசல் செய்தி கூடிய விரைவில்..!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை