Monday, April 20, 2026

தமிழ் பள்ளிவழி கல்விப் பயணத்தை தொடங்குகிற செல்வங்களுக்கு மஇகா பாராட்டு: தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன்

2025 கல்வி ஆண்டு நாளை தொடங்குகின்ற நிலையில் தங்களின் கல்விப் பயணத்தை தமிழ்ப் பள்ளிவழி முதல் முதலாக தொடங்குகின்ற நம் சமுதாய செல்வங்களுக்கு மஇகா சார்பில் பாராட்டும் வரவேற்பும் தெரிவிப்பதாக அதன் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நம் சமுதாயத்தின் பண்பாட்டு- பாரம்பரிய அடையாளமாக விளங்குகின்ற தமிழ் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்ற பெற்றோருக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கு கல்விசார் அடித்தளத்தை சிறப்பாக அமைக்க இருக்கின்ற ஆசிரியர் பெருமக்களுக்கும் இந்திய சமுதாயத்தினர் தம் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதன் தொடர்பில் பரந்த அளவில் பரப்புரை மேற்கொண்ட சமூக இயக்கங்களுக்கும் தமிழ்ப் பற்றாளர்களுக்கும் இந்த வேலையில் மஇகா சார்பில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

இந்த மண்ணில் நம் சமுதாயத்திற்கு அரணாக விளங்கக்கூடிவை நம் தமிழ் பள்ளிகள்தான். தமிழ் பள்ளிகளுக்கு அன்று முதல் இன்று வரை காவலனாகவும் பாதுகாப்பு கேடயமாகவும் விளங்கக்கூடிய இயக்கம் மஇகா என்பதை நாடறியும்.

அதைப்போல தமிழ்ப் பள்ளிகளின் பாதுகாப்பு, மறு உருமாற்றம், புதிய பள்ளிகளுக்கான கட்டுமானம் ஆகியவற்றுக்கு மஇகா தன் பங்களிப்பை இடையறாது வழங்கி வருகிறது.

இத்தகைய கடமையில் மஇகா தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

தமிழ் பள்ளிகளுக்கான உரிமையுடன் மானியம் உள்ளிட்ட வசதிகளுக்கும் மஇகா தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.

அந்த வகையில் நாளை தொடங்குகின்ற 2025 கல்வியாண்டில் புதிய உத்வேகத்துடன் கல்விச்சாலைகளில் அடி எடுத்து வைக்கின்ற நம் இளம் சிட்டுகளுக்கு மஇகா மீண்டும் வாழ்த்து தெரிவிப்பதுடன் அவர்கள் தங்களின் கல்விப் பயணத்தில் ஆரம்பக் கல்வியை சிறப்பாக பயின்று இடைநிலைப் பள்ளிக்கு ஆயத்தமாகும் படியும் வாழ்த்துகிறது.

அதைப்போல இடைநிலைப் பள்ளிகளுக்கு புதிதாக செல்கின்ற தமிழ் பள்ளி மாணவர்கள் புதிய சூழலில் தங்களின் முதலாம் படிவ கல்வியை மேற்கொள்ள விருக்கின்றனர். இந்த மாணவர்கள், புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு எஸ்பிஎம் தேர்வுவரை சிறப்பாக கல்வி கற்று வெளியே வரும்பொழுது அவர்களின் உயர்கல்விக்காக மஇகா, தன் கல்விக் கரமான எம்ஐஇடி மூலம் எப்பொழுதும் தயாராக இருக்கும் என்பதை இந்த வேளையில் தெரிவிக்க விரும்புகிறேன்

நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவரையும் பட்டதாரி ஆக்கி அவர்களின் எதிர்காலம் சிறக்க எம்ஐஇடி என்றென்றும் தயாராக இருக்கிறது.

அதனால் அனைத்து தரப்பு மாணவர்களும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்வியில் தலைசிறந்து விளங்க வேண்டும்.

நம் சமுதாய எதிர்கால மீட்சிக்கு கல்வி ஒன்றுதான் பற்றுக்கோடு என்பதால் நம் சமுதாய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக தாங்கள் ஆற்ற வேண்டிய கடப்பாட்டை ஆசிரியர் குலம் உணர்ந்து உள்ளது.

அதற்கு ஏற்ப பெற்றோரும் தம் பங்கை உரிய முறையில் ஆற்ற வேண்டும் என்பது மஇகாவின் எண்ணம் என்பதை சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இக்கண்
எல். சிவசுப்பிரமணியன்
தலைவர் –
தேசிய ஊடகப் பிரிவு
மலேசிய இந்திய காங்கிரஸ்-மஇகா 16-02-2025

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை