
நூல் வெளியீடு: 28-02-2025 வெள்ளி
மாலை 6:30 மணி அளவில்
டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கம், கோலாலும்பூர்
இந்நூலினை ஆக்கிய ஆசிரியர் தமிழறிஞர் திருமாவளவனார் மலையகத்தில் தனித்தமிழோடும் தமிழ் சார்ந்த அறத்தோடும் தொடர்படுத்திப் பேசப்படுகின்ற அறிஞர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். மலேசியத் தமிழ்நெறி கழகத்தின் தலைவராகப் பல்லோரை வழிநடத்தி தமிழியச் சிந்தனையையும் தமிழ் உணர்வையும் வளர்த்துவரும்வேளையில் திருக்குறளை வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்ந்தும் காட்டுகிறார்.
புலால் உண்பதை அறவேத் தவிர்த்து மரக்கறி உணவை மட்டுமே உண்டு தமிழ் மெய்யியல் சார்ந்த பண்பாட்டில் ஒழுகுகின்றார். மலேசியாவில் தமிழறிஞர் பலர் இருக்கின்றனர். ஆனால் தமிழாகத் தமிழுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்போர் ஒரு சிலரே; அவர்களில் முதன்மையானவர் ஐயா திருமாவளவனார். தமிழ்க்காப்பு நடவடிக்கைகளிலும் இளமைக் காலம் முதலே தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.
கடந்த இருபது ஆண்டுகளாக அவரை நான் அறிவேன். நற்றமிழை, தூயத்தமிழை நிலைநாட்டப் பள்ளிக்காலம் தொட்டே அவர் ஆர்வம் காட்டி வருகின்றார். அவரின் மலேசியத் தமிழ்நெறிக் கழகவழியாகவும் தமிழறிஞர் பலருடன் இணைந்தும் அவர் ஆற்றிவரும் தொண்டினை நான் கூர்ந்து கவனித்து வருகின்றேன். அவரின் மேடைப் பேச்சுக்களை உவந்து கேட்பதும் உண்டு.
கருத்தினைச் செறிவுடன் எடுத்தியம்பும் சிறந்த தனித்தமிழ்ப் பேச்சாளராகவும் அவர் திகழ்வதனாலே அவர் பேசுகின்ற கூட்டங்களுக்கு நான் செல்வதுண்டு. அவருக்குத் தெரியாமல் அவர்பேசும் தமிழின் அழகைப் பார்த்து வியப்பதும் உண்டு. பிறமொழி கலவாது தனித்தமிழில் அவர் பேசுவதைக் கேட்டால் நெஞ்சினிக்கும். மெய்சிலிர்க்கும்.
அவர் உருவாக்கிய ஆயிரக்கணக்கான தனித்தமிழ் சொற்களை இன்று ஊடகத்துறையிலும் தமிழ்க்கல்வியிலும் பலரும் பயன்படுத்துகின்றனர். பள்ளிகளில் பாட நூல்களில் அவர் உருவாக்கியத் தனித்தமிழ் கலைச்சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒரு காலத்தில் ‘கேக்கு’ என்று சொன்ன குழந்தைகள் இன்று அனிச்சல் என்கின்றனர். தனியொருவராக அவர் உருவாக்கி வழங்கிய கோறனி -19 (கோவிட்- 19) பெருந்தொற்றுத் தொடர்பான தமிழ்க் கலைச்சொற்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றவை.
Sanitizer – தூய்மி
Hand sanitizer- கைத்தூய்மி
Physical/ social distancing- கூடல் இடைவெளி
இப்படி நூற்றுக்கணக்கான புதிய கலைச்சொற்களைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கியவர் ஐயா திருமாவளவனார். புலனம் என்று இன்று நாம் அழைக்கும் WhatsApp க்கு தமிழ்ப்பெயர் சூட்டியவர் வளவனார் அவர்கள்.
தமிழ்நாட்டில்கூட வளவனார் உருவாக்கிய கலைச்சொற்களுக்கு மிகுந்த வரவேற்பு உண்டு.
தனித்தமிழ் வளர்ச்சிக்கு நம் நாட்டில் பங்காற்றியோர் யார் என்று கேட்டால் உடனே நம் நினைவுக்கு வருவார் வாழும் பாவாணராக விளங்கும் அருமை நண்பர் தமிழ்த்திரு திருமாவளவனார் அவர்கள்.
அவரின் மொழி ஆளுமையைக் கண்டு பொறாமை வேண்டுமானால் கொள்ளலாம். ஆனால் அவரின் தமிழ்ப்பற்றினை மொழிவளத்தை உள்ளூர எல்லோரும் அங்கிகரிப்பர் என்பதே உண்மை.
தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆசிரியர் ஆற்றியுள்ளப் பங்கு
ஒரு மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்பது அம்மொழியினுடைய சொற்கள் காலத்திற்கு ஏற்ப குறிப்பாக, அறிவியல் நுட்பவியல் வளர்ச்சி மிகுந்த இக்காலத்தில் புதிய சொற்களைப் படைத்துக்கொள்ளும் ஆற்றல் உள்ள மொழியே தன்னைத் தொடர்ந்து தகவமைத்துக் கொள்ளும்; வாழும், வளரும், நிலைக்கும்.
அந்த மொழிக்கு உரியவரே அல்லது மொழியைப் பயன்படுத்துபவரே அம்மொழிக்கான சொற்களையும் உருவாக்க வேண்டும். வேற்றுமொழிச் சொற்களை கொண்டுவந்து தமிழிலே திணிக்கக்கூடாது. மொழிக்கலப்பை வரவேற்கும் சிலர் ஆங்கில மொழிச் சொற்களை அப்படியே எடுத்து கையாளுகின்றனர். செம்மொழியான தமிழ்மொழியின் தகுதிப்பாட்டுக்கு இது ஒருபோதும் உதவாது
தமிழ்மொழியில் போதுமான அறிவியல், நுட்பவியல் கலைச்சொற்கள் உருவாகவில்லை எனில் தமிழில் துறைசார்ந்த பல அறிவுக்கலைகள் வளராது போய்விடும்.
தமிழ்மொழிப் பயனீட்டாளர்கள் ஆங்கிலம் அல்லது பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தி தங்களின் கருத்துக்களைப் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்துவது புதிய சொற்களைப் படைக்க விரும்பாத சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடு என்றே கூறவேண்டும்.
அதற்காக வேற்றுமொழிச் சொற்களை மொழிப்பெயர்ப்பு செய்கின்றேன் என்று நேரடி மொழிமாற்றம் செய்து குழப்புவதும் நடப்பதுண்டு.
நேரடி மொழிமாற்றம் எ.கா
Good Morning – காலை வணக்கம், நல்ல காலை எனப் பிழைபட சொல்வாரும் உண்டு.
toastmaster என்பதற்கு வெதுப்பிவல்லுநர் என்றா
மொழிப்பெயர்க்க முடியும்? சூழ்நிலைக் கருதி ‘சொல்வேந்தர்’ என நற்றமிழில் மொழியாக்கம் செய்யத் தமிழறிவும் வேண்டும் ஆங்கில மொழியின் மூலமும் அறிந்திருக்க வேண்டும்.

ஒரு சொல்லைப் புதிதாக உருவாக்கும் எண்ணத்தில் பிறமொழியில் இருந்து எடுத்து அச்சொல்லின் மூலப்பொருள், உருவான சூழல், சமகாலத் தேவை அறியாது நேரடி மொழிமாற்றம் செய்கின்றனர் சிலர்.
நூலைப் பற்றி.. .
எந்தக் குழப்பமும் இல்லாது தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வினை (etymology) அடிப்படையாகக் கொண்டு தனித்தமிழில் புதிய கலைச் சொற்களை உருவாக்கிவரும் ஐயா வளவனார் இப்பொழுது 10,000 புதிய கலைச்சொற்களை இந்நூலின் வழியாக அறிமுகம் செய்கின்றார். அவற்றுள் அறிவியல், நுட்பவியல் சார்ந்த சொற்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன.
நேரடி மொழிமாற்றத்தைத் தவிர்த்து இயல்மொழியின் பொருளுணர்ந்து தமிழ்மொழி இலக்கணத்திற்கும் உட்பட்டு மொழியாக்கம் செய்திருக்கின்றார்.
சமூகவியல், உடல்நலம், பொருளியல், கல்வி என பல துறைகளுக்கும் தேவையான தமிழ்க் கலைச்சொற்களின் தொகுப்புதான் இந்த நூல். அகர வரிசையில் (alphabetical order) சொற்கள் அடுக்கப்பட்டுப் படிப்பதற்கும் தேடுதற்கும் எளிமையான வகையில் இந்நூல் வடிவம் பெற்றிருக்கிறது. என்பது கூடுதல் சிறப்பு.
பயன்பாடு:
தமிழ் ஊடகத்துறையினர் பலர் நாளும் நாளும் ஆங்கிலத்திலும் தேசிய மொழியிலும் உருவாகிவரும் புதிய கலைச்சொற்களுக்கு ஈடான தமிழ்ச்சொற்களை உருவாக்குவதில் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்த நூல் ஒரு வரம்.
தமிழ்க்கல்வியாளர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் புத்தகப் பதிப்பகத்தாருக்கும் இந்நூல் மிகுந்த பயனைத் தரும். முதுகலை, முனைவர் படிப்பு, ஆய்வு மாணவர்களுக்கும் இந்த நூல் உதவும். ஆசிரியர் தொடர்ந்து புதிய கலைச்சொல் உருவாக்கத்திற்குப் பங்காற்றி வருவார் என்பது திண்ணம்.
தமிழ் மொழியைச் சிதைத்து கலப்பு மொழியாக்கும் பலமுயற்சிகளின் கதைகள் வரலாற்று ஏடுகளில் எடுத்தியம்பப் பட்டுள்ளன. அதை தடுக்கும் முகமாக தன்வாழ்நாள் முழுவதையும் ஈகம் செய்த தமிழிய அறிஞர் பெருமக்களால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் இளமை மாறாது தனித்தமிழாகவே இப்புவியிலே நிலைத்து நிற்கிறது தமிழ்.
தமிழ்கூறு நல்லுலகம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய சான்றோர் பெருமக்களை என்றும் நன்றியோடு நினைந்துப்பார்க்கும். தமிழ்த்தாய்க்காக வளவனார் ஆற்றிவரும் திருத்தொண்டும் என்றும் நினைவுக்கூரப்படும். அவருக்கு எமது உளங்கனிந்த பாராட்டு என்று மேனாள் கல்வியமைச்சரின் சிறப்பதிகாரியும் மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின் மேனாள் உதவித் தலைவருமான முனைவர் குமரன் வேலு தெரிவித்துள்ளார்.


