
வானவீதியில் அடிக்கடி அற்புதம் நிகழ்வதுண்டு; வானத்தை இரவு நேரத்தில் அடிக்கடி உற்று நோக்குபவர்கள், கோள்களின் இயக்கத்தை அவதானிக்க முடியும். அத்தகைய அரிய நிகழ்வு பிப்ரவரித் திங்கள் நிறைவு நாளான இன்று மாலையும் நடைபெற இருக்கிறது.
அந்த அரிய நிகழ்வு, ‘கோள்களின் அணிவகுப்பு’தான்.
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஆகிய ஐங்கோள்களையும் மலேசியர்கள் வெறுங்கண்ணால் இன்று சூரியன் மறையும் நேரத்தில் பார்க்க முடியும்; பார்வைத் திறன் நன்றாக இருந்தால் யுரேனஸ் கோளும் ஓரளவு கண்ணில் படும்; தொலைநோக்கி இருந்தால், யுரேனஸ், நெப்டியூன் கோள்களையும் ஒருசேரக் காணலாம். இந்த அரிய வாய்ப்பு,, வானியல் ஆய்வாளர்களையும் ஆர்வலர்களையும் மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. அதேவேளை, சூரியன் மறையும்போது சனி, புதன் கோள்களும் மறையும் நேரம் என்பதால், அவற்றை பார்ப்பது சற்று கடினமானதுதான்.
வானவீதியில் உலாவரும் சூரிய குடும்பத்தின் முக்கியமான 8 கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் வெவ்வேறு சுற்றுப்பாதையில் வலம்வருகின்றன. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள், புதன்; இது 88 நாட்களில் ஒரு சுற்றை நிறைவு செய்கிறது. அதாவது, புதன் கிரகத்திற்கு ஓர் ஆண்டு என்பது 88 நாட்கள் மட்டுமே. பூமியின் ஆண்டிற்கோ 365 நாட்கள் என்பது நாம் அறிந்தது. நெப்டியூன் கோளின் ஆண்டுதான் மிக நெடியது; இது, சூரியனை ஒருசுற்று சுற்றிவர 60,190 நாட்கள் ஆகின்றன. இந்த காலக்கட்டத்தில் நாம் வாழும் புவி, 165 தடவை சூரியனை வலம் வந்துவிடும்.
இவ்வாறு, கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால், சில நேரங்களில் அவற்றில் பல, சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசையாக நிற்பதைப் போன்ற தோற்றம் ஏற்படும். அப்படிப்பட்ட ஓர் அரிய தோற்றத்தைதான் உலக மக்கள் இன்று மாலையில் காண விருக்கின்றனர்.

பொதுவாக இரவு நேரத்தில், நிலத்தில் இருந்து வானத்தை நோக்கும்பொழுது பல கோள்களை நம்மால் காண முடியும். சில அரியவேளைகளில் கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தரும். இன்று மாலையில் தோன்றும் வின்வெளி அதிசய நிகழ்வை இன்னும் சில நாட்களுக்கு பார்க்க முடியும் என்கின்றனர் வானியலாளர்கள்.
தென்கிழக்கு லண்டனில் உள்ள கிரீன்விச் ரோயல் கோளரங்கத்தின் வானியலாளர் முனைவர் எட்வர்ட் ப்ளூமர், “நாம் எளிதாக பார்க்கும் விதத்திலான இடத்தில் அந்த ஏழு கோள்களும் இருக்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. என்றார்.
சூரியன் மறைந்தபிறகு அந்த கோள்களை பார்ப்பதற்கு சில நிமிடங்களே இருக்கும். அதன்பின், அவை அடிவானத்துக்குக் கீழே சென்றுவிடும். வெள்ளி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களை சற்று அதிக நேரத்துக்கு பார்க்க முடியும் என்று ப்ளூமர் மேலும் தெரிவித்துள்ளார்.
வியானும் வெள்ளியும் பிரகாசமான கோள்கள் என்பதால் அவற்றை எளிதாக பார்க்க முடியும். அதேசமயம், செவ்வாய்க் கோள் தனித்துவமான செந்நிறத்தில் காட்சியளிக்கும்.

ஒளி மாசு குறைவாகவும் அடிவானம் தெளிவாகவும் இருக்கும் இடமாக இருந்தால், இந்த வானத்து கோள் அணிவகுப்பு காண்பதற்கு பொருத்தமாக இருக்கும்.


