Thursday, April 16, 2026

நக்கீரன் கோபாலுக்கு கலைஞர் எழுதுகோல் விருது

பேரறிஞப் பெருந்தகை அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்று புனித ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றிய 58 ஆம் ஆண்டு வரலாற்று நினைவு நாள், இன்றைய மார்ச் திங்கள் ஆறாம் நாள்.

இன்றைய நாளில் அரசியல் வல்லார் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பெயரால் இன்றைய தமிழ்நாட்டு அரசு வழங்கிய ‘கலைஞர் எழுதுகோல் விருதை’ அண்ணன் நக்கீரன் ராஜகோபால் பெற்றிருப்பதை அறிந்து குமரி நெஞ்சார மகிழ்கிறாள்; வாழ்த்தும் தெரிவிக்கிறாள்.

கோலாலம்பூரில் என்னை புதிதாக அறிபவர்கள், என் பெயரை கேட்டதுமே, ஊரில்(தமிழ்நாட்டில்) நக்கீரன் பத்திரிகை வெளிவருகிறதே அதுவா என்று வினவியதும் “தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் வாரம் இருமுறை வெளிவருகின்ற இதழின் பெயர் நக்கீரன்; அதை வழிநடத்துபவர் ராஜகோபால்; ஆனால் உள்ளூர் ஊடகர் என்னுடைய பெயர் நக்கீரன்” என்று விளக்கம் அளித்ததும் ‘ஓஓ.. ., அந்த மீசைக்காரர்தானே என்று வியப்பு மேலிட இன்னொரு வினாத். தொடுப்பார்கள்.

அந்த மீசைக்காரருக்குத்தான் அவருடைய பத்திரிகை பயணத்தில் இன்றைய நாள் ஒரு பொன்னாளாக அமையும் வகையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இத்தகைய மேலான விருதை வழங்கி சிறப்பித்திருக்கிறார்.

சொல்லுக்கு சிலம்பரசி கண்ணகி, வில்லுக்கு தன்னெழுச்சித் தமிழன் ஏகலைவன், தாடிக்கு தந்தை பெரியார், மீசைக்கு நக்கீரன் கோபால் என்று சொல்லிடத் தோன்றுகிறது

நக்கீரன் கோபால் என்கின்ற அண்ணன் ராஜகோபால், திண்ணிய பார்வை, திடமான சமூக நோக்கு, எதிரில் எவர் தென்பட்டாலும் அடித்தாடும் ஊடகப் பயணம், எத்தகைய எதிர்ப்பு வரினும் எதிர்கொண்டு தான்சொல்ல வந்த கருத்தை சமூகத்திற்கு சொல்லும் துணிவு, தக்கார் தகவிலார் என்பதை நொடிப் பொழுதில் அறிந்து கருத்து சொல்லும் பாங்கு, சான்றோரிடம் காட்டும் நிறைகுட ப்பணிவு, நக்கீரன் படையில் இணைந்துள்ள அனைவருக்குமான பாதுகாப்பு அரண் என்றெல்லாம் சொல்லத்தக்க அண்ணன் ராஜகோபால் அவர்களுக்கு இந்த விருதை வழங்கி இருப்பது அத்துனைச் சிறப்பு உடையது!

செயற்கையாக எத்துணை இன்னலை ஏற்படுத்தினாலும் நெஞ்சுரத்துடன் ஏற்றுக்கொண்டு அந்நாளைய முதல்வர் ஜெயலலிதாவின் கண்களில் மிரட்சியை ஏற்படுத்திய வீரமிகு ஊடகர் அண்ணன் ராஜகோபால்.

இதழின் பெயருக்கேற்ற நெற்றிக்கண் பார்வை, உருவத்திற்கேற்ற உள்ளத்து கம்பீரம் போன்றவற்றால் தமிழகத்து இதழ்களில் நக்கீரன் கம்பீரமாக வலம் வருகிறார். அண்ணன் ராஜகோபால் அவர்களின் இதழ்சார் பயணம் இன்னும் செம்மாந்து தொடரவும் அதைப்போல ஏராள பெருமைதனை ஈட்டவும் கோலாலம்பூரில் இருந்து குமரி வாழ்த்துகிறாள்.

தமிழ்நாட்டு அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் பல்துறை சார்ந்து ஏராள அறிவிப்பை வெளியிட்டார்.

வருவாய் துறை சார்பில் மாநிலத்தில் உள்ள ஆட்சியாளர்கள், வட்டாட்சியாளர்களுக்கான சிறப்பு அறிவிப்பும் அவற்றுள் அடங்கும்.

தொடர்ந்து தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதுகள் வழங்கப்பட்டன.

நக்கீரன் இதழின் ஆசிரியர் இரா. கோபால், சுஜித்ரா ஆகியோருக்கு கலைஞர் எழுதுகோல் விருதுகளை முதல்வர் நேரில் வழங்கினார்.

தொடர்ந்து கலை பண்பாட்டுத் துறை சார்பில் மரபுவழி ஓவியம், நவீன ஓவியம் அதைப்போல சிற்பக் கலையில் ஆளுமைமிக்க ஆறு கலைஞர்களுக்கெலலாம் விருது வழங்கி சிறப்பித்தார் தமிழ்நாட்டு முதல்வர்.

இதில், மரபு வழி ஓவியத்தில் மணிவேலு, மரபு வழி சிற்பப் பிரிவில் பாலச்சந்தர், கன்னியப்பன், நவீன ஓவியப் பிரிவில் முரளிதரன், செல்வராஜ் ராகவன் உள்ளிட்டோருக்கு ‘கலைச்செம்மல்’ விருதை வழங்கினார் முதல்வர் மு க ஸ்டாலின்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை