
மக்களை பயன்படுத்துவதும் சிறந்த குடிமக்களாக உருவாக்குவதும் ஊடகத்தாரின் பணியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு. தமிமுன் அன்சாரி இலங்கையில் தெரிவித்துள்ளார்
இலங்கை தலைநகர் கொழும்புவில் Pahana மீடியாவின் ஏற்பாட்டில், கருத்தரங்குடன் கூடிய நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பொழுது மேற்கண்டவாறு அன்சாரி கருத்து தெரிவித்தார்.
மிகமுக்கிய ஆளுமைகள் மட்டுமே பங்கேற்கும் வகையில் இந்நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், ஊடகத்துறையினர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், வணிகப் பிரமுகர்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரியும் பங்கேற்று உரையாற்றினார்.
நாடாளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை மூன்றும்தான் ஒரு நாட்டை வழிநடத்தும் முக்கிய துறைகளாக உள்ளன.

வரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் ஊடகத்துறை நினைத்தால், நாடாளுமன்றத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்;
நீதிமன்றத்தை கேள்வி கேட்க முடியும்.
அத்தகைய அசைக்க முடியாத சக்திகளாக காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் இருக்கின்றன.
தற்போது சமூக வலைதளங்களும் வளர்ந்து வருகின்றன. இவைதான் உலகை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.

தனிநபரும் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், இத்துறையில் செயலாற்றும் அனைவருக்கும் சமூகக் கடமை உண்டு.
ஊடகத்தில் செயல்படுபவர்களுக்கு அதிகமான கடமையும் பொறுப்பும் இருக்கின்றன.
சமூகங்களுக்கிடையே உறவை ஏற்படுத்தி, தனிமனித உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பும் ஊடகத்தாரிடம் இருக்கிறது.
இதை உணர்ந்து ஊடகத்துறையில் பணிபுரிவர்கள் இயங்க வேண்டும்.
அந்த வகையில் இலங்கையில் செயல்படும் News Now ஊடகம் முன்மாதிரியாகத் திகழ்கிறது.
பல்வேறு சமூக அறிஞர்களையும் ஆளுமைகளையும் அழைத்து இது போன்ற கருத்தரங்குகள் நடத்துவதை அதற்கு உதாரணமாகக் கூறலாம்.
இலங்கை எங்களுக்கு அண்டை நாடு என்ற வகையிலும், நட்பு நாடு என்ற வகையிலும் இலங்கையின் மீது அன்பு உண்டு.
கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையின் சூழல் மாறி இருக்கிறது. புதிய தலைமுறையினரின் பார்வையும் புரிதலும் புதுவடிவம் பூண்டுள்ளன.
இதற்கு ஏற்ப எதிர்காலத்தை வழிநடத்த வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை நேற்று ஊடகத்துறையினரும் மற்ற ஆளுமைகளும் பங்கேற்கும் வகையில் வழி நடத்திய அஷ்ஷெய்க் முஜிப் சாலி, Pahana மீடியா நிர்வாகியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பாராட்டு தெரிவித்து தமிமுன் அன்சாரி தன் உரையை நிறைவு செய்தார்
இந்நிகழ்வில் இலங்கை சமூக நல்லிணக்கத் துறையின் துணை அமைச்சர் முனீர் முளப்பர், அமரபுர மகா பீடத்தின் பிரதம குரு கலாநிதி மாதம்பாகம அஸ்ஸஜி தேரர், தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலைய இயக்குனர் மஞ்சுள கஜநாயக ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
மு.தமிமுன் அன்சாரி குறுகிய கால பயணம் மேற்கொண்டு இலங்கை சென்றுள்ளார்.


