Monday, April 20, 2026

வானவாசம் முடிந்து பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்: வரவேற்ற டால்பின்கள்!

விண்வெளியில் உலா வருவதும் அங்கேயே தங்கி ஆராய்ச்சிப் பணி மேற்கொள்வதும் சுனிதா வில்லியம்ஸ்க்கு மிகவும் பிடித்தமானது.

அப்படிப்பட்ட சுனிதா நல்ல உடல் நலத்தோடும் மனநலத்தோடும் நிலத்திற்கு திரும்பி உள்ளார்.

முதல் பயணத்தின் போது 194 நாட்களையும் இரண்டாவது பயணத்தின் போது 127 நாட்களையும் தற்பொழுது மூன்றாம் பயணத்தில் அதிகபட்சமாக 284 நாட்களையும் விண்வெளியில் கழித்த சுனிதா, பத்திரமாக பூமிக்கு திரும்பி உள்ளார்.

உண்மையில் அவரை சுமந்து வந்த ‘ஸ்பேஸ்எக்ஸ்’ வான்கலம் கடலில் இறங்கியது; மெல்லக் குதித்தது. அந்த தருணத்தில் டோல்பின்கள் இன்பம்பொங்க துள்ளிக்குதித்து வரவேற்ற காட்சியைக் கண்டு நாசா ஆராய்ச்சியாளர்களும் பணியாளர்களும் வியந்தனர்.

ஏறக்குறைய 9 மாதங்களுக்கு முன்பு ஆராய்ச்சி பணிக்காக விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் அந்த பணியை முடித்துக்கொண்டு ஏழு-எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்புவதாகத்தான் இருந்தது;

ஆனால் அவர் பயணம் செய்த விண்கலத்தில் பழுது ஏற்பட்டதால் தங்கும்படி நேரிட்டது. அவரை மீண்டும் அழைத்து வருவதற்காக முயற்சி மேற்கொண்ட பொழுது அவருக்கு இரண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது; உடனே பூமிக்கு திரும்ப வேண்டுமா அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து ஆராய்ச்சிப் பணியில் தொடர விருப்பமா என்று கேட்டபொழுது, அவர் இரண்டாவது வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து, வானத்து வாசத்தை விருப்பமுடன் மேற்கொண்டார்.

அங்கு ஏற்கெனவே விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அக்குழுவோடு இணைந்து ஆறு மாதங்கள் தங்கி இருந்து நாசா சார்பில் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளை முடித்துக் கொண்டு இப்பொழுது திரும்பி இருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.

இவரை அனுமதித்திருந்தால் இன்னும் ஓர் ஆறு மாதத்திற்கு அங்கேயே தங்கியிருந்து எழுச்சியோடு விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொண்டிருப்பார்.

ஆனாலும் இதை சிக்கலாக ஆக்கியது அதிபர் டோனால்ட் டிரம்ப்தான்.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் அமெரிக்க, ரஷ்ய, சீன ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மட்டும் வான்வெளியில் தங்கி இருந்ததும் ஆராய்ச்சிப் பணி மேற்கொண்டதும் உலக அளவில் பேரளவில் பேசப்பட்டதற்கான காரணம் அதிபர் டோனால்ட் டிரம்ப்.

அமெரிக்க புதிய அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜனநாயக கட்சியை சிறுமைப்படுத்தவும் அதிபர் ஜோ பைடனை தாழ்த்தவும் இதை ஒரு துருப்புச் சீட்டாக மனசாட்சியை அடகு வைத்து விட்டு பயன்படுத்தியவர் டோர்னல்ட் டிரம்ப். எல்லா உண்மையும் தெரிந்திருந்தும் இதை தேர்தல் களத்தில் பெரிதாக பேசி, பிரச்சினையாக படம் பிடித்தார் அவர்.

இத்தகைய அக்கப்போருக்கு மத்தியில்தான் பன்னாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இத்தனை காலமும் தங்கி இருந்த சுனிதா வில்லியம்ஸ், இப்பொழுது பத்திரமாக நிலத்திற்குத் திரும்பியதை உலக மக்கள் மகிழ்ச்சியோடு பார்க்கின்றனர்; அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் ஃப்ளோரிடா மாநிலத்தின் அருகில் கடற்கரையில் மலேசிய நேரப்படி இன்று விடியற்காலை 1:00 மணி அளவில் இறங்கியது.

புட்ச் வில்மோர், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் வந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்ததும் முகத்தில் மகிழ்ச்சி ததும்ப உற்சாகத்துடன் கை அசைத்தபடி வெளியே வந்தார்.

நேற்று, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பூமியில் உள்ள நாசா அதிகாரிகளிடம் விடை பெற்றுக்கொண்டு 17 மணி நேரம் பயணித்தபின் அவர் பூமிக்கு வந்தடைந்துள்ளார்.

சுனிதாவும் மற்ற மூவரும் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் பூமிக்கு மேற்கொண்ட பயணத்தின்போது வளிமண்டல மறு நுழைவு எனக் கருதப்படும் ஆபத்தான கட்டத்தை தாண்டுவதை அனைவரும் அச்சத்துடன் எதிர்நோக்கி இருந்தனர்.

ஆனால் அச்சப்பட்டபடி எதுவும் நேராமல் ஆபத்தான கட்டமான வளிமண்டல மறு நுழைவுக் கட்டத்தை எட்டியதும் நாசா அதிகாரிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் வான்கலம் பயணித்து பூமியை நெருங்கியதும் கட்டம் கட்டமாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு விண்கலத்தின் வேகம் மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு கடலில் மெதுவாக குதிக்கும்படி பக்குவமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போது கடற் பகுதியில் டால்பிகள் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்ததுதான் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஸ்பிளாஷ்டவுன்-Splashdown என்னும் நுட்பத்தை கையாண்டு சுனிதாவும் மற்றவர்களும் பயணித்த விண்கலம் கடலில் மெதுவாக இறங்கும்படி செய்தனர்.

விண்கலம் கடலில் வேகமாக குதித்து கடல்நீர் பேரளவில் தெறிக்காமலும் வான்கலம் கடலில் அமிழாமலும் தடுப்பதற்கான நுட்பம்தான் இது.

விண்கலம் கடலில் இறங்கிய புள்ளியிலிருந்து தொலைவில் படகுகளில் காத்திருந்த மீட்புக் குழுவினர் உடன் சூழ்ந்துகொண்டு சுனிதாவையும் மற்ற வீரர்களையும் பத்திரமாக மீட்டனர்.

டிராகன் வான்கலம் பூமியை நோக்கி பயணித்தபொழுது, வளி மண்டலத்திற்குள் நுழைந்தபோது சற்று நேரத்திற்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு தடைப்பட்டது. இது வழக்கமான நடைமுறைதான்.

அந்தத் தருணத்தில் வான்கலத்தைச் சுற்றி 1970 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை இருந்தது. இந்த வெப்பத்தின் தாக்கம் விண்வெளி வீரர்களை தாக்கா வண்ணம் வெப்பத் தடுப்பு தகடுகள் பொருத்தப்பட்டிருந்தன.

மீண்டும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கிடைத்ததும் நாசா அதிகாரிகள் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் நிலத்தை வந்த அடைவதற்கான பணிகளை வேக வேகமாக முடித்து தயார் நிலையில் காத்திருந்தனர்.

27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தின் வேகத்தை குறைக்கும் வண்ணம் அதில் இணைக்கப்பட்டிருந்த பாராசூட்-கள் மெல்ல விரிந்தன.

அதன் பின்னர் வான்களத்தின் வேகம் கட்டம்கட்டமாக குறைந்து கடலில் மெல்லக் குதிக்கும் அளவிற்கு அதன் வேகம் சீர் செய்யப்பட்டது.

கடந்த 2024 ஜூன் மாதம் ஐந்தாம் நாள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் பன்னாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்குச் சென்றனர்.

இப்போது இந்த இருவருடன் சேர்ந்து பூமிக்கு திரும்பிய ஹேக், கோர்புனோவ் ஆகிய இருவரும் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் ஆராய்ச்சிப் பணிக்காக விண்வெளிக்கு சென்றனர். இப்பொழுது இந்த நால்வரும் பூமிக்கு ஒன்றாக பத்திரமாகத் திரும்பினர்.

விண்வெளி ஆராய்ச்சிக்காக விண்வெளி வீரர்கள் பன்னாட்டு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி பணியை மேற்கொள்வது தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கும் நிலையில், சுனிதா தங்கி இருந்தது மட்டும் எப்படி பிரச்சினையாக பார்க்கப்பட்டது; பேரளவில் விளம்பரம் பெற்றது என்றால் இதற்கு முழு காரணம் அமெரிக்காவின் இந்நாளைய அதிபர் டோனால்ட் டிரம்ப் என்றால் அதில் நிச்சயமாக மிகைஇல்லை.

விண்வெளியில் வாழ்வது என்பது ஒரு நுட்பமான கலை; அங்கு நிலவுகின்ற சூழலுக்கு ஏற்ப தங்களை தக அமைத்துக் கொள்ளும் ஆற்றலையும் மன வலிமையும் உடல் பக்குவத்தையும் பெற்றவர்கள் இந்த விண்வெளி வீரர்கள்.

இத்தனைக்கும் நடுவே, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சுனிதாவின் பூர்வீக கிராமத்தில் பேரளவில் பூஜை செய்து வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் போக்கிற்கு ஏற்ப இதோ நானும் இருக்கிறேன் என்று தன்னைக் காட்டிக் கொள்வது ஆன்மீகத்திற்கு எப்பொழுதுமே வாடிக்கைதான்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை