
நாட்டில் புகழ்பெற்ற இளைஞர் அமைப்புகளில் ஒன்றான மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் ‘தேசிய மணிமன்ற நாள்’, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 23-இல் நடைபெற இருக்கிறது. டத்தோ டி. மோகன் தொடக்கி வைக்க இருக்கிறார்
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இந்த ‘தேசிய மணிமன்ற நாள்’ விழா, கோலாலம்பூர் ஈப்போ சாலை-Jalan Sultan Azlan Shah, Wisma KKP, Star Banquet அரங்கத்தில் 23-03-2025 அன்று காலையில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வை மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ த. மோகன் அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்து திறப்புரை ஆற்றுவார்.

.மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவர் முருகன் மணியம், மேனாள் தலைவர்களையும் இன்னாள் பொறுப்பாளர் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அழைக்கிறார்.
மலேசியத் திருநாட்டில் ஆலமரம்போல வேரூன்றி, கடந்த 69 ஆண்டுகாலமாக பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர் மணிமன்றம் தொடர்ந்து வாழையடிவாழையாக இந்நாட்டில் வீறுகொண்டும் விவேகத்துடனும் செயல்பட்டு வருகின்றது.
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் வளர்ச்சிக்காக மகத்தான பங்காற்றிய மேனாள் தலைவர்கள், உறுப்பினர்களின் சேவையை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மேலும், இந்நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக மணிமன்றத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மேனாள் தலைவர்களுக்கும் இன்னாள் தலைவர்களுக்கும் ‘மணிப்பட்டம்’ என்ற விருது வழங்கப்படவுள்ளது.
அனைத்து மேனாள் தலைவர்களும் இளைஞர் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வழங்குமாறு முருகன் மணியன் கேட்டுக் கொள்கிறார்.


