Wednesday, April 15, 2026

தமிழ் ஊடக வட்டத்தில் எஸ்.பி. பிரபா தொடர் சண்டித்தனம்!

வாட்ஸாப்பில் பகிரப்பட்ட அழைப்பிதழ்

அன்புசால் ஊடக நண்பர்களே! அரவணைக்கும் இணைய வாசகர்களே, உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கம்.
நலம்; வாழிய நலம்!!.

இன்று 2025 மார்ச் திங்கள் 27ஆம் நாள் ஜாலான் ஈப்போ(Jalan Sultan Azlan Shah) சாலையில் அமைந்துள்ள ‘மெட்ராஸ் கஃபே’ உணவகத்தில் மாலை 4:00 மணி அளவில் ஏதோ ஒரு பொருள் குறித்து செய்தியாளர் கூட்டம் நடைபெற இருப்பதாக ஊடக நண்பர்கள் வட்டத்தில் தகவல் பரவியதைத் தொடர்ந்து நானும் அங்கு சென்றேன்.

அந்த உணவகத்தில், செய்தியாளர்க் கூட்டம் அல்லது சிறிய அளவிலான கூட்டம் நடத்துவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சிறிய அறையில் நுழைந்ததுமே எஸ்.பி. பிரபா என்பவர் என்னை எதிர்கொண்டு
“உங்களை நான் கூப்பிடவில்லையே; நீங்கள் எப்படி வர முடியும்? இந்தத் தகவல் எப்படித் தெரிந்தது? உங்களுக்கு யார் தெரிவித்தது? என்றெல்லாம் காவல்துறை அதிகாரியைப் போலவும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவரைப் போலவும் கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

எஸ்.பி. பிரபா

“எங்கள் ஊடக வட்டத்தில் பகிரப்பட்ட தகவலின் அடிப்படையில் நான் இங்கு வந்தேன்; வரக்கூடாது என்றால் நான் சென்று விடுவேன்; ஆனால் இத்தனை கேள்விகள் கேட்பது முறையல்ல” என்று நானும் சிடுசிடுவென்று பேச ஆரம்பித்த நேரத்தில்.. ,

மக்கள் ஓசை நாளேட்டின் புகைப்பட கலைஞரும் மலேசியத் தமிழ் அச்சு ஊடகத்தின் நீண்டகால அனுபவசாலியுமான பி. மலையாண்டியும் அங்கு வந்து சேர்ந்தார்.

அதுவரை என்னிடம் பேசிக் கொண்டிருந்த எஸ் பி பிரபா, எனக்கு பதில் சொல்லாமல் ஓர் ஓரமாக அமர்ந்திருந்த பி. மலையாண்டியிடம் சென்று உங்களை யார் அழைத்தது? உங்களுக்கு எப்படி தகவல் தெரியும்? என்று விசாரித்தார்.

எங்கள் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் இங்கு வந்ததாக மலையாண்டி பதில் சொன்னார்.

அதற்கு உடனே மறுமொழி சொன்ன எஸ் பி பிரபா, நாங்கள் உங்களையெல்லாம் அழைக்கவில்லையே என்று சுடச்சுட ப சொன்னதைக் கேட்டு,
“பரவாயில்லை; நான் திரும்பிச் செல்கிறேன்” என்று கூறி மலையாண்டி அங்கிருந்து உடன் புறப்பட்டுவிட்டார்.

பி மலையாண்டி 1975 முதல் இதுவரை புகைப்பட கருவியுடன் மலேசியத் தமிழ் ஊடக வட்டத்தில் வலம் வருகிறவர்; மலையாண்டியின் புகைப்பட அனுபவம் பொன் விழாவைக் கடந்து, தற்போது 51-ஆம் ஆண்டை எட்டியுள்ளது. அவரின் புகைப்பட அனுபவ வயதுகூட இந்த எஸ்பி பிரபாவிற்கு இல்லை.

ஏறக்குறைய ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு முன்பு இதேப்போல, ஒரு செய்தியாளர் கூட்டத்திற்கு நாட்டின் பிரபலமான காட்சி ஊடகமான தேசம் ஊடகத்தின் செய்தியாளர்கள் சென்றபொழுது, இதே பிரபா குறுக்கே வந்து, உங்களை யார் அழைத்தது? எப்படி தெரியும் என்றேல்லாம் கேட்டு சிறுமைப்படுத்தி இருக்கிறார்.

பொதுவாக செய்தியாளர் கூட்டம் நடைபெறுகின்ற தகவல்கள் தெரிந்தால் ஊடக நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரிவித்துக் கொண்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு செல்வது வழக்கம். எப்பொழுதும்போல இப்பொழுதும் அப்படித்தான் நடந்தது.

எஸ் பி பிரபா என்பவர் மலேசியத் தமிழ் ஊடகத்திற்கு அண்மையில் அறிமுகமானவர்; இவருக்கு சொந்த ஊடகம் இருப்பதாகத் தெரியவில்லை; ஒண்டு குடித்தனம் நடத்துவதைப்போல காட்சிகளை பதிவுசெய்து முகநூலில் பதிவேற்றம் செய்கிறவர்.

இப்படிப்பட்டவர்- நேற்று வந்தவர் மூத்த பத்திரிகையாளர்களிடமும் பதிவுபெற்ற ஊடக தம்பிமாரிடமும் இவ்வளவு சண்டித்தனமாக நடந்து கொள்வது கடுகளவும் ஏற்புடையதல்ல; மிகவும் கண்டிக்கத்தக்கது.

எஸ்பி பிரபாவும் அவர்மூலம் செய்தியாளர் கூட்டத்தை நடத்த விரும்புகிறவர்களும் குறிப்பிட்ட சில செய்தியாளர்களை மட்டும் அழைத்து கமுக்கமாக நடத்த விரும்பினால் அதில் தவறு இல்லை; பழுதில்லை;

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து தாங்கள் விரும்பும் இடத்தில் காதும்காதும் வைத்தாற்போல நடத்தலாம்.

அதை விடுத்து, மின்பதாகை(e-poster) மூலம் அறிவிப்பு செய்து, அதை சமூக ஊடக வெளியிலும் பரவ விட்டுவிட்டு, உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்பது அறியாமையின் உச்சம்; மடமையின் மிச்சம். இந்த நவீன உலகத்தில் சிந்திக்கத் தெரியாத மனிதனின் உளறலைப் போன்றது.

மொத்தத்தில், நேற்று வந்த எஸ் பி பிரபா, அனுபவசாளிகளான மூத்த பத்திரிகையாளர்களையும் பதிவு பெற்ற ஊடகத்தின் செய்தியாளர்களையும் தரக்குறைவாக நடத்த முயற்சிப்பது மிகமிக கண்டிக்கத்தக்கது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மலேசியத் தமிழ் அச்சு-இணைய ஊடகர்கள் மத்தியில் பிரிவினையையும் பாகுபாட்டையும் ஏற்படுத்த முயல்வது கேடுகெட்டத்தனம்.

இத்தகையப் போக்கை எஸ் பி பிரபா, இந்தமட்டில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குமரி நல்லாள் எச்சரிக்கிறாள்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை