
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் மிகமுக்கிய பாண்டிகையான நோன்புத் திருநாளை இன்று, மார்ச்-31இல் கொண்டாடி குதூகலிக்கின்றனர்.

இன்றைய உலகில் வேகமாக வளர்ந்துவரும் சமயம் இஸ்லாம் அல்லது முஸ்லிம் சமயம் ஆகும். இப்படிப்பட்ட இஸ்லாத்தைச் சேர்ந்த கோடிக் கணக்கான மக்கள் இன்று உலகம் முழுவதும தங்களின் சமயம் சார்ந்த ஐங்கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்றலை ஒரு மாத காலத்திற்கு மேற்கொண்டு, நேற்றுடன் நிறைவடைந்த ரமலான் அல்லது ரம்ஜான் மாதத்தில் நிறைவேற்றியபின், இன்று ஷவ்வால் மாத முதல் நாளில் நோன்புத் திருநாளைக் கொண்டாடும் உற்சாக வெள்ளத்தில் திளைத்துள்ளனர்.

ஆனாலும், போர் மேகம் அகலாமல் சூழ்ந்துள்ள காஸா பகுதியில் வாழ்கின்ற பாலஸ்தீன ம்க்களும் சமய மாண்பு குறையாமல் நோன்புத் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

அதைப்போல, வருடக் கணக்கில் 2022 பிப்ரவரி 24 முதல் போர் முனையாக மாறியுள்ள உக்ரேன்வாழ் இஸ்லாமிய மக்களும் தங்களின் சூழலுக்கேற்ப நோன்புத் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மியன்மார் நாட்டில், கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையிலும் அங்கு நடைபெறும் இராணுவ ஆட்சியினர் சளைக்காமல் சண்டையையும் ஒருபக்கம் தொடர்கின்றனர். அந்த நாட்டின் வடபகுதியான நௌங்சோ, நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சர்காயிங், சாங்-யூ நகரியம் ஆகிய இடங்களிலும் வான்படை மூலம் குண்டுவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மியன்மார் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள், குறிப்பாக சிறுபான்மை ரொஹிங்கியா மக்கள் எவ்வாறு நோன்புத் திருநாளைக் கொண்டாடுகின்றனர் என்ற விவரம் தெரியவில்லை.

கி.பி. 624ஆம் ஆண்டில்தான், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டது. அது முதல் உலகம் முழுவதும் எந்தவித மாற்றமும் இல்லாமல் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது; ஹிஜ்ரி ஆண்டுத் தொடக்கத்தின் இரண்டாம் ஆண்டில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் மத நூலான புனித அல்-குர்ஆனால் கட்டாயமாக்கப் பட்டது அல்லது கடமையாக்கப்பட்டது என்று இஸ்லாமிய நிபுணர்கள் கூறுகின்றனர்.

நோன்பு நோற்பது, இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் அல்லது ரம்ஜான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு சமய நடைமுறையாகும். ஹிஜ்ரி ஆண்டு, சந்திர இயக்கத்தின் அடிப்ப்டையில் வகுக்கப்படுகிறது.

ரமலான் மாத நோன்பு என்பது, இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் முதன்மையானதாகும். கலிமா, தொழுகை, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவையே மீதமுள்ள 4 கடமைகள்.
பொதுவாக 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் இந்த நோன்பு காலத்தில், விடியற்காலை(ஸஹர்) முதல் சூரிய மறைவு(இஃப்தார்) வரை முஸ்லிம்கள் சாப்பிடவோ, பருகவோ மாட்டார்கள். இஸ்லாத்தில் பக்தி மற்றும் சுய ஒழுக்கத்தின் செயலாக இது பார்க்கப்படுகிறது.

இத்தகைய இறைக் கடமையை நிறைவேற்றிய இன்பத்தில் இன்று உலகம் முழுவதும் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் நோன்புத் திருநாள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துள்ளனர்






