
வீட்டு வசதியை இழந்து பரிதவிப்பிற்கு ஆளான ஓர் ஏழைக் குடும்பத்திற்கு பினாங்கு மாநில அரசின் வாடகை அடுக்ககத்தில் குடியமர்த்தி, உடனடி உதவிக் கரம் நீட்டிய மாநில ஆட்சி மன்றத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வீட்டுடைமை துறை பொறுப்பாளரான(மாநில அமைச்சர்) டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு, சம்பந்தப்பட்ட குடும்பத்தின் கணவருக்கு வேலை வாய்ப்பிற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவின் இன்னோர் உறுப்பினரான (சமூக நலம் மற்றும் இஸ்லாமியர் அல்லாதார் நலத் துறை) உறுப்பினர் லிம் சியூ கிம்-உடன் இணைந்து, வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு கடந்த சில நாட்களாக பத்தாங் கோத்தாவில் தங்கியிருந்த சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து, உண்மை நிலையை கேட்டறிந்த டத்தோஸ்ரீ ராஜு இந்த உடனடி ஏற்பாட்டை செய்தார்
பினாங்கு இந்து அமைப்பின் தலைவர் டத்தோ முருகையா மூலம் இந்த தகவலை அறிந்த ராஜு, லிம் சியூ கிம் ஒத்துழைப்புடன், இந்தக் குடும்பத்தை தற்காலிகமாக சமூக நலத்துறையின் வீட்டு வசதி குடியிருப்பில் தங்குவதற்கு ஆவண செய்தார்.

சம்மந்தப்பட்ட நலிந்த குடும்பத்தின் நலன் கருதி, குடும்ப தலைவருக்கு உடனே வேலை கிடைப்பதற்காக டத்தோ முருகையாவுடன் இணைந்து ஏற்பாடு செய்ததுடன் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவர்களின் கல்வி குறித்தும் அக்கறை காட்டினார்.
இக்குடும்பத்திற்கு ஒரு நிலையான வாழ்க்கையை அமைத்து கொடுக்கும் வகையில் மாநில அரசின் வீட்டு வாடகைத் திட்டத்தின் மூலம் (Rumah Sewa Kerajaan Negeri – RSKN) எளிய வாடகையில் ஒரு வீட்டை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக டத்தோஸ்ரீ சோ. இராஜு தெரிவித்தார்.

இந்த உதவி சிறியதுதான் என்றாலும் வாழ்வை புதுப்பித்துக் கொள்வதற்கான புது நம்பிக்கையை இந்தக் குடும்பத்திற்கு இது நிச்சயம் அளிக்கும் என்று பிறை சட்டமன்ற உறுப்பினரும் ஜனநாயக செயல் கட்சி-ஜசெக இந்திய தலைவர்களில் ஒருவருமான டத்தோஸ்ரீ இராஜு சோமு மேலும் தெரிவித்தார்.


