Monday, April 20, 2026

மின்னல் பண்பலை வானொலி வீழ்ச்சி: நிருவாகி ரோகினியின் பலவீனமே காராணம்!பொறுப்பிலிருந்து உடனே நீக்க வேண்டும்!- தகவல் அமைச்சுக்கு எல். சிவசுப்பிரமணியன் கோரிக்கை!!

கோலாலம்பூர், ஏப்.26:
மின்னல் பண்பலை வானொலி, மலேசியத் தமிழ் நேயர்களுக்கு மட்டுமல்ல; உலகளாவிய தமிழ் வானொலி நேயர்களின் விருப்ப வானொலியாக இருந்தது ஒரு காலம். தற்பொழுது தகுதியில்லாத ஒரு பெண்ணை நிருவாகியாக நியமித்தது முதல் மின்னல் பண்பலை வானொலியின் பெயரும் புகழும் மங்கிவருகிறது என்று ம.இ.கா. தேசிய ஊடகப் பிரிவுத் தலைவர் எல்.சிவசுப்பிரமனியன் தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்தியர்களின், குறிப்பாக தமிழ் நேயர்களின் மனங்கவர்ந்த வானொலியாக வானில் தவழ்ந்த இந்த மின்னல் வானொலியின் இன்றைய நிருவாகி இறுமாப்புடன் நடந்து கொள்கிறார். எவருக்கும் பதில் சொல்வதில்லை; தனக்கு மிகவும் வேண்டிய ஒருசில அறிவிப்பாளர்களை துணையாக சேர்த்துக்கொண்டு கொட்டமடிக்கிறார்.

மின்னல் பண்பலை வானொலியில் முன்பு இருந்த தலைவர்கள் எல்லாம் அரசியல்-சமூகத் தலைவர்களின் கருத்திற்கு செவிசாய்த்து, உடனுக்குடன் பேசி, நல்ல உறவை வளர்த்து வந்ததுடன், முன்வைக்கப்படும் விமர்சனத்திற்கு மரியாதை கொடுக்கும் தன்மையுடன் மின்னல் வானொலியை வழிநடத்தினர்.

இப்பொழுது, தகுதி இல்லாத ஒரு பெண்ணை மின்னல் பண்பலை வானொலிக்கு நிருவாகியாக ஆர்.டி.எம். நிருவாகம் நியமித்துள்ளதால், சமுதாயத்தில் ஒட்டும் உறவும் இல்லாமல் பதுங்கியும் ஒதுங்கியும் நிற்கிறார்.

யார் அழைத்தாலும் பேசுவதில்லை. இரும்புத் திரைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு இறுமாப்புடன் நடந்துகொள்ளும் இந்த நிருவாகியை உடனே மாற்ற வேண்டும் என்று மலேசிய இந்திய சமுதாயத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினருமான எல். சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மின்னல் பண்பலை வானொலியின் தற்போதைய நிர்வாகியாக ரோகினி சுப்பிரமணியன் பொறுப்பேற்றது முதல், புதிதாக எந்த நிகழ்ச்சியையும் அறிவிக்கவில்லை. இருந்த நிகழ்ச்சிகள் அத்தனையையும் ஒவ்வொன்றாக நீக்கிவிட்டு, இப்பொழுது வானொலி நாடகத்திற்கும் மூடுவிழா நடத்தும் முனைப்பில் இருக்கிறார்.

மின்னல் வானொலி சார்ந்து, வானொலி நாடக எழுத்தாளர்கள், வானொலி நாடகக் கலைஞர்கள், கவியரங்க கவிஞர்கள், உள்ளூர் இசைக் கலைஞர்கள் என்றெல்லாம் அனைத்துத் தரப்பினருக்கும் இருந்த வாய்ப்பை அகற்றிவிட்டு, இவர்மட்டும் திரைக்குப் பின்னால் உல்லாச உலா வருகிறார்.

இதற்குமுன் இருந்த தலைவர்கள் எல்லாம், இந்திய சமூகம் சார்ந்து தமிழிலக்கியம், கலை, பண்பாட்டுத் தலங்களில் அணுக்கமாக இணைந்து நல்லவண்ணமாக பயணம் செய்து, அரசாங்கத்தின், குறிப்பாக தகவல் அமைச்சுக்கும் சமுதாயத்திற்கும் இடையே ஒரு பாலமாக வானொலியைக் கட்டமைத்து செயல்பட்டனர்.

ரோகினி, நிருவாகியாக வந்ததுமுதல், எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

சமூகத்தையும் தலைவர்களையும் மட்டுமல்ல; எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட அத்தனைத் தரப்பினரையும் அலட்சியப்படுத்தும் ரோகினி சுப்பிரமணியனுக்கு, மின்னல் பண்பலை வானொலியை வழிநடத்த அடியோடு தகுதியில்லை என்பதால், இவரை உடனே அந்தப் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும் என்று மலேசிய இந்திய சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரின் சார்பில் ஆர்.டி.எம். நிருவாகத்திற்கு கோரிக்கை வைப்பதாக எல்.சிவசுப்பிரமணியன் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை