Thursday, April 2, 2026

கணேஷ் பாபு! மலேசிய இந்து சங்கத்தின் அடுத்த தேசியத் தலைவர்!!

பேராக் மாநிலப் பேரவை ஆண்டுக் கூட்டத்தில் பிரகடனம்!!

மலேசிய இந்து சங்கத்தின் அடுத்த தேசியத் தலைவராக, சங்கத்தின் தற்போதைய தேசிய துணைத் தலைவர் கணேஷ் பாபு பொறுப்பேற்க இருக்கிறார்.

மலேசியத் திருநாட்டின் பாரம்பரிய சமய அமைப்பான மலேசிய இந்து சங்கத்தை தற்பொழுது வழிநடத்துகின்ற ‘சங்க பூசன்’, ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன், அவருக்கு தோளோடுதோள் நிற்பதுடன் அண்மைய ஆண்டுகளாக மலேசிய இந்து சங்கம் அமைதியான வழியில் சிந்தாமல் சிதறாமல் பயணம் மேற்கொள்வதற்கு உற்றுழி உதவுகின்ற தேசிய துணைத் தலைவருமான கணேஷ் பாபு ஆகிய இருவருக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், மலேசிய இந்து சங்கத்தை வழிநடத்த கணேஷ் பாபு தயாராகி வருகிறார் என்ற தகவல் இந்து சங்கத்தின் பேரா மாநில பேரவையின் அண்மைய ஆண்டுக் கூட்டத்தில் பிரகடனம் செய்யப்பட்டது.

அணி என்னும் பிணியைத் தவிர்த்து, மலேசிய இந்து சங்கத்தின் தாரக மந்திரமான ‘தொண்டு’ என்னும் ஒற்றை சிந்தனையை முன்னிறுத்தி அண்மை ஆண்டுகளாக மலேசிய இந்து சங்கம் அமைதியாக பயணிப்பது, அது வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

பல்லின, பல சமய, பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில் சிறுபான்மை சமுதாயமாக இருக்கின்ற இந்துப் பெருமக்களின் சமய-சமூக எல்லையில் நின்று ஆன்மீகம் தழைக்கவும் இந்து மக்களின் உரிமையை நிலைநாட்டவும் சீரான ஆன்மீகப் பயிர் வளர்த்து எதிர்கால இந்து தலைமுறையினரை சீரிய முறையில் வழிநடத்துவதற்காக உருவாக்கப்பட்ட மலேசிய இந்து சங்கம் அண்மைய ஆண்டுகளில் அமைதியாகவும் சீராகவும் செயல்படுகிறது.

மலேசிய இந்து சங்கத்தை வழிநடத்தும் தேசிய தலைவரை அதன் உறுப்பினர்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறைக்கு திரை போட்டு, சங்கத்தை வழி நடத்துவதற்காக 27 உறுப்பினர் கொண்ட மத்திய நிர்வாகக் குழுவை உருவாக்கி அதில் இருந்து அனைத்து தேசிய பொறுப்பாளர்களும் தெரிவு செய்யப்படும் நடைமுறையை, நிறுவனச் சட்டத்தின் (Company Act) கீழ் இயங்கும் மலேசிய இந்து சங்கத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

இதனால் ஆண்டுதோறும்
இந்த 27 பேர் கொண்ட குழுவில் இருந்து மூன்றில் ஒரு பகுதியினரான ஒன்பது பேர் விலகி, அவர்களுக்குப் பதிலாக புதிதாக ஒன்பது பேர் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை உள்ளது. இது, மலேசிய இந்து சங்கத்தின் ஆன்மீக பயணத்திற்கு பெரும் பாதகமாக அமைந்துள்ளது..

புத்தாயிரத்தாம்
ஆண்டு தொடங்கிய நேரத்தில் அதன் அப்போதையத் தலைவர் டத்தோ வைத்திலிங்கம் அம்பலவாணர் செய்த இந்த ஏற்பாடு, ஜனநாயக முறைக்கு மாறாக அமைந்துவிட்டது.

ஆண்டுதோறும் புதிதாக 9 உறுப்பினர்களை மத்தியப் பேரவைக்கு தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தால், இந்த சமய அமைப்பு அரசியல் இயக்கத்தைப் போல தேர்தல் நடத்தி, பல்லாயிரக்கணக்கான நிதி ஆதாரத்தை இழப்பதுடன் அணி என்னும் பிணியிலும் சிக்கி இந்து மக்களுக்கு ஆற்ற வேண்டிய சமயக் கடமையை முழுதாக ஆற்ற முடியாமல் தேக்கம் கண்டுள்ளது.

உண்மையை வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் இதன் தலைமைத்துவத்துவத்திற்கு வர விரும்புவர்கள் ஆள் பிடிக்கும் வேளையில் மனம் கூசாமல் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதை வாய்ப்பாக பயன்படுத்தி டத்தோ வைத்திலிலிங்கத்தை வீழ்த்தினார் மோகன் சண்முகம்.

டத்தோ வைத்திலிங்கம் உருவாக்கிய சட்டத் திருத்தத்தை பயன்படுத்தி, அவரின் விரலை எடுத்து அவர் கண்ணிலேயே குத்தியதைப் போல, அவர் கொண்டுவந்த நடைமுறை மூலம் அவரையே வீழ்த்தி, அதன்பின் ஏறக்குறைய 13 ஆண்டுகளாக தன் இரும்புப் பிடியில் வைத்திருந்த மோகன் சண்முகத்தை வீழ்த்துவதற்கு மலேசிய இந்து சங்கத்தின் இன்றைய தலைவர் தங்க கணேசனும் அவருக்கு எல்லா வகையாலும் தோள்கொடுத்து துணை நிற்கின்ற கணேஷ் பாபுவும் ஒரு வலுவான அணியை அமைத்து டத்தோ மோகன் ஷானை வீழ்த்தினார்.

2022ஆம் ஆண்டு தேசியப் பேரவை என்று நினைக்கிறேன்; அப்பொழுது நடைபெற்ற இந்து சங்க ஆண்டுக் கூட்டத்தின்போது நடைபெற்ற செய்தியாளர்க் கூட்டத்தில்,

‘மலேசிய இந்து சங்கத்தில் மானிய குளறுபடி நடந்துள்ளதாக தகவல் கசிகிறதே? என்று செய்தியாளர்கள் வினவினர்.

எப்பொழுதும் சாந்தமாக பேசுவதை வழக்கமாகக் கொண்ட (இந்து சங்கத்தின் அப்போதைய தேசியத் தலைவர்) மோகன் ஷான், உடனே கொந்தளிக்கத் தொடங்கினார்.

“அரசாங்க அதிகாரிகள் திருட வில்லையா? ஊழல் புரியவில்லையா? என்றெல்லாம் செய்தியாளர்களிடம் எதிர்க் கேள்வி கேட்ட மோகன் ஷான், 10 பேர் கூடி இருக்கிற இடத்தில் இதுபோன்று நடப்பதெல்லாம் வழமையான ஒன்றுதான்” என்று கூறி கொஞ்சம்கூட மனங்கூசாமல் மானிய மடைமாற்றத்திற்கு முட்டுக் கொடுத்தார்.

அப்படிப்பட்ட ‘மானிய மடைமாற்றப் புகழ்’ மோகன் ஷானை வீழ்த்துவதற்காக வலுவான அணியை அமைத்து திறம்பட செயல்பட்டு அவரை வீழ்த்தியவர்கள் தங்க கணேசனும் கணேஷ் பாபுவும்!

அப்போது, மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவராக பொறுப்பேற்று இதுவரை அமைதியாகவும் மலேசிய இந்து சமூகத்தின் நலனைக் காக்கும் வகையிலும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார் தங்க கணேசன்.

அப்படிப்பட்ட தங்க கணேசன், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2025-ஆம் ஆண்டு தேசியப் பேரவையின் பொழுது தன்னுடைய தலைமைப் பொறுப்பை கணேஷ் பாபுவிடம் ஒப்படைப்பது என்று செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கின்ற மலேசிய இந்து சங்க 2025ஆம் ஆண்டுக் கூட்டத்தின்போது, தலைமைப் பொறுப்பை கணேஷ் பாபுவிடம் ஒப்படைக்க இருப்பதாக மீண்டும் உறுதி அளித்திருக்கிறார் என்று தெரிகிறது.

இதைத்தான் மலேசிய இந்து சங்க பேராக் மாநில பேரவைத் தலைவர் ‘விவேக ரத்னா’ சுந்தர சேகரன் பெருமாள் கடந்த வியாழக்கிழமை மே ஒன்றாம் நாள் தெரிவித்துள்ளார்.

பேராக் சிம்மோர், கந்தன்மலை அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலய தேவஸ்தான வளாகத்தில் நடைபெற்ற மாநிலப் பேரவையின் 48-வது ஆண்டு கூட்டத்தில் தலைமை உரை ஆற்றியபொழுது இந்தத் தகவலை சுந்தர சேகரன் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை