
மலேசியத் தமிழ் ஊடக வட்டத்தில் பணிபுரிகின்ற செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உள்ளபடியே பரிதாபத்திற்கு உரியவர்கள்.
இதை உணர்ந்ததால்தானோ என்னவோ மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தை தற்பொழுது வழிநடத்துகின்ற தலைவர் செ. வே. முத்தமிழ் மன்னன், அவரின் தலைமையிலான குழுவினரும் நலிந்த நிலையில் இருக்கிறவர்களை தேடித்தேடி அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்றனர்.
அதற்கு ஏற்ப, தகவல் துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சிலும் உறுதுணையாக இருக்கிறார்.
இந்த நிலையில், இதன் தொடர்பில் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்க பொறுப்பாளர்கள் அனைவரையும் குறிப்பாக அதன் தலைவர் மன்னன் மற்றும் உதவித் தலைவர்களில் சிறப்பாக செயல்படுகின்ற இ. காளிதாசன் ஆகியோரின் முன்னெடுப்பிற்கும் இவர்களுக்கு பக்கபலமாக நின்று உரிய பணியை ஆற்றி வருகின்ற நிர்வாகக் குழுவினருக்கும் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் உலகம் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்க நிர்வாகத்தினரின் முயற்சிக்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்ற தகவல் துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சிலையும் குமரி மனதார பாராட்டுகிறாள்.
இதுவரை 34 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு ‘அவானா’ சமூக நலத் திட்டத்தின் மூலம் ஆளுக்கு 3,000 வெள்ளி வீதம் நன்கொடையை பெற்றுத் தந்திருப்பது மிகப்பெரிய சாதனைப் பணியாகும்.
இத்தகைய உதவியை பெற்றவர்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும்; அவர்களின் இடர்மிகு சூழ்நிலையில் இந்த நிதி எத்தகைய ஆறுதலையும் தேறுதலையும் தரும் என்பது;
அச்சு ஊடகத்தைப் பொறுத்தவரை ஆறு நாளிதழ்கள் இருந்த நிலையில் தற்பொழுது மூன்று மட்டுமே செயல்படுகின்றன; இதனால் பணி நீக்கத்திற்கும் வேலை இழப்பிற்கும் ஆளாகி சிரமத்தில் இருப்பவர்கள், மருத்துவ சிக்கலை எதிர்கொண்டிருப்பவர்கள்; ஏதோ ஒரு வகையில் ஆதரவு இன்றி தவிப்பவர்கள் என்றெல்லாம் பார்த்து பார்த்து முன்னாள்-இந்நாள் பணியாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஒற்றுமை அரசாங்கத்தின் அவானா நிதி உதவியைப் பெற்று தந்துள்ள பாங்கை எத்துணைப் பாராட்டினாலும் தகும்.

இத்தகைய உதவியை பெற்றுள்ள அன்பர்களில் உதவி கேட்டவர்களும் உண்டு; கேட்காதவர்களும் உண்டு;
அவரவர் பாங்கும் சூழ்நிலையும் அறிந்து உற்றுழி உதவுகின்ற சேவையை முத்தமிழ் மன்னன், காளிதாசன் இளங்கோ இருவரும் அயராது முன்னெடுக்கின்றனர்.
இத்தகைய அரும்பணி எந்நாளும் நினைவுகூரத்த்தக்கது; காலம் அறிந்து கடமை ஆற்றும் இவர்கள், மலேசியத் தமிழ் ஊடக எல்லையில் பணிபுரிகின்ற நூற்றுக்கணக்கானோரின் மனதில் இடம் பிடித்து செம்மாந்து திகழ்வர் எந்நாளும்.
இத்தகைய பணி தொடரட்டும்!!
வாழ்க மலேசியத் தமிழ் ஊடக பணியாளர்கள்; வளர்க மன்னன் தலைமையிலான மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம்!!


