Thursday, April 2, 2026

நூற்றாண்டு கண்ட ஆலயங்களின் வரலாறு தொகுக்கப்பட வேண்டும்: ஜோகூர் மாநிலப் பேரவைக் கூட்டத்தில் தங்க கணேசன்

மலேசிய இந்து சங்க ஜோகூர் மாநிலப் பேரவையின் 48வது ஆண்டுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘திருநெறிச் செல்வர்’ தங்க கணேசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தை நல்ல முறையில் ஏற்பாடு செய்த மாநிலப் பேரவை நிர்வாகத்திற்கு முதற்கண் பாராட்டு தெரிவிப்பதாக குறிப்பிட்ட தங்க கணேசன், மாநிலத்தில் உள்ள ஆலயங்கள், இடுகாடு, சுடுகாடு போன்றவை எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதில் ஜோகூர் மாநில அரசு துணை நிற்க வேண்டும். குறிப்பாக நூற்றாண்டு கண்ட இந்து வழிபாட்டுத் தலங்களின் வரலாறு சரியான தகவலுடன் முறையான ஆவணமாகத் தொகுக்கப்பட வேண்டும்; இதற்கான முன்னெடுப்பை ஜோகூர் மாநிலப் பேரவை மேற்கொள்ள வேண்டும். இதன் தொடர்பில் மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் அவசியம்; நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள அனைத்து ஆலயங்களும் நிலை நிறுத்தப்படுவதற்கு மாநில அரசு உரிய ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்க வேண்டும் என்றும் தங்க கணேசன் வலியுறுத்தினார்.

இந்து சமயத்தினர் மேற்கொள்ளும் நீத்தார் கடன் சமய சடங்கை நதிக்கரையில் நிறைவேற்றுவதற்கு மாநில அரசாங்கம் இடம் ஒதுக்கித் தர வேண்டும்.

ஆலய வழிபாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறை கொண்ட கையேடு தயாரிக்கப்பட்டுள்ளதற்கு ஜோகூர் மாநிலப் பேரவைக்கு பாராட்டு தெரிவித்த தங்க கணேசன், இந்த கையேடு தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அட்சய பாத்திரத் திட்டம் நல்ல முறையில் நிறைவேற்றப் படுவதற்கு ஜொகூர் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆலயங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அட்சய திருதியை நாளை தான தர்மங்கள் மேற்கொள்ளும் நாளாக இந்து சமயத்தினர் வரும் காலத்தில் கருத்தில் கொண்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அட்சய பாத்திரத் திட்டத்திற்கும் அட்சய திருதியை நாளில் கொடை அளிக்கும் வழக்கத்திற்கும் அதிக ஆதரவளித்தால் அது நலிந்த பிரிவினருக்காக மேற்கொள்ளப்படுகின்ற நலத்திட்டங்களுக்கு உதவியாக அமையும் என்று தன் உரையில் தங்க கணேசன் சன் குறிப்பிட்டார்.

இந்து சமய பாடத்திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; அப்பொழுதுதான் இளம்பருவத்திலேயே பிள்ளைகளுக்கு சமயநெறி நன்முறையில் பயிற்றுவிக்கப்பட்டு எதிர்காலத்தில் ஆன்மீக நெறியோடு அவர்கள் வாழ்வதற்கு அது துணையாக அமையும்.

மலேசிய இந்து சங்கம் தேசிய அளவில் திருமுறை வளர்ச்சியில் அக்கரைக் காட்டி வருவது பாராட்டுக்குரிய அம்சமாக இருந்தாலும் பஞ்சபுராணம் ஓதுவது குறித்து பெரும்பாலான ஆலயங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, பஞ்ச புராணம் ஓதுவோரை அதிகமாக தயார்ப்ப்படுத்த வேண்டிய கட்டாயம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

ஜோகூர் மாநிலப் பேரவை சிறப்பாக செயல்பட்டாலும் நாட்டின் பெரிய மாநில பேரவையான இருப்பதால், இன்னும் சிறப்பாக செயல்பட்டு இந்து சமய வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் துணை புரிய வேண்டும். அதேவேளை, இளைய சமுதாயத்தினர் பொறுப்புக்கு வந்தால் சங்கம் இன்னும் எழுச்சியுடன் செயல்படும் என்பதை கருத்தில் கொண்டு மூத்தவர்கள் இளையவர்களுக்கு வழிவிடும் பக்குவத்தையும் பண்பையும் பெற வேண்டும். இதற்கு ஏற்ப இதுவரை துணைத் தலைவராக இருந்தவர் விலகிக் கொண்டு செயலாளராக இருந்த தொண்டர்மணி விஜயன் துணைத் தலைவராக வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பது மாநில பேரவையில் நல்ல மறுமலர்ச்சி ஏற்பட்டு இருப்பதைக் காட்டுகிறது

மலேசிய இந்து சங்கம், இன்னும் வலிமையாகவும் எழுச்சியோடும் செயல்பட வேண்டும் என்றால் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். இதன் தொடர்பில் அனைத்து தரப்பினரும் அக்கறையும் முயற்சியும் மேற்கொள்ள வேண்டும் என்றதுடன் இன்னும் பிற கருத்துக்களையும் முன்வைத்து தங்க கணேசன் தன் உரையில் ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசினார்.

ஸ்கூடாய் அருள்மிகு பாலசுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில ஆட்சி குழு உறுப்பினர் பிரவீன் குமார் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.

இந்து சங்கத்தின் கோரிக்கைகளை முடிந்தவரை நிறைவேற்றுவதற்கு மாநில அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட இருப்பதாகத் தெரிவித்த ரவீன் குமார், மக்கள் தொகையில் ஏறக்குறைய 6.5 விழுக்காட்டினராக இருக்கின்ற நம் சமுதாயத்தின் சார்பில் வைக்கப்படுகின்ற கோரிக்கை மிக அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

ஜொகூர் மாநில பேரவைத் தலைவர் ஆர். ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேசிய துணைத் தலைவர் கணேஷ் பாபு, தேசிய உதவித் தலைவர் எம் முனியாண்டி உட்பட தேசிய பொறுப்பாளர்களும் மற்ற மாநில தலைவர்களும் இந்து சங்க உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் அதிகமாக கலந்து கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை