-டத்தோஸ்ரீ எம். சரவணன்!

கோலாலம்பூர் (ஸ்தாப்பாக்), மே 25:
நம் சமுதாய பெற்றோர்கள், தம் பிள்ளைகளுக்கு சமயத்தையும் இந்த நாட்டில் நமக்கு இருக்கும் வரலாற்றுத் தொடர்பையும் சொல்லி, சொல்லி வளர்க்க வேண்டும்; அப்பொழுதுதான் எதிர்காலத்தில் ஆன்மீக நன்னெறி, சமய விழிப்புணர்வு, இந்த மண்ணுக்கும் நமக்கும் உள்ள பாரம்பரியத் தொடர்பு குறித்தெல்லாம் தெளிவு ஏற்படும் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் பேசினார்.
கோலாலம்பூர், ஸ்தாப்பாக், ஆயர் பனாஸ், அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் இன்று காலையில் பொன்விழா பூச்சொரித் திருவிழா, பெரு விழாவாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு அன்னை உமையவள் அருள்மிகு முத்து மாரியம்மனை வழிபட்டபின் ஆலயத்தில் சிறப்புரை ஆற்றினார் சரவணன்.
“ஸ்தாப்பாக் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த இந்து சமய மெய்யன்பர்களுக்கு மட்டுமல்ல; தனக்கும்கூட இந்த ஆலயம் மிகவும் பரிச்சயமான ஆலயமாகும்”.
பள்ளி நாட்களில் சிறு வயதிலேயே பூச்சொரி விழாவை இந்த அம்மன் ஆலயத்தில்தான் கண்டுணர்ந்தேன் என்று சரவணன் இன்று குறிப்பிட்டார்.
சிறுவர்கள், முதியவர்கள், நோயாளிகள் இருக்கின்ற இல்லங்களுக்கு எப்படி வெறுங்கையோடு செல்லக்கூடாதோ அதைப்போல ஆலயத்திற்கு வருகின்ற அன்பர்களும் வெறுங்கையோடு வரக்கூடாது இன்று சமய சான்றோர்களும் ஆன்றோர்களும் சொல்லியிருக்கின்றனர்.

அதன் அடிப்படையில்தான் ஆலயத்திற்கு வருகின்ற பக்தப் பெருமக்கள் அர்ச்சனைத் தட்டுடன் ஆலயத்திற்கு வருகின்றனர்; குறைந்தபட்சம் பூ, வெற்றிலைப் பாக்கு, பழத்துடன் ஆலயத்திற்கு வருவது தொன்று தொட்ட வழக்கமாகும்.
ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன் ரப்பர் மரக்கன்று நடவும் ரப்பர் பால் எடுக்கவும் வந்த தமிழர்கள் பொட்டல் காடுகளைத்தான் கண்டனர்..
வீட்டில் இருந்து ரப்பர் தோட்டங்களுக்கு செல்லும் வழியில் ஒரு மரத்தை நம்பி, அல்லது ஒரு கல்லை நட்டு மாகாளி, முனீஸ்வரன், தமிழ்க் கடவுள் முருகன் என்றெல்லாம் முழுதாக நம்பி தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து தோட்டமும் வீடுமாக வாழ்ந்தனர்.
இன்று நாடு வளர்ந்திருக்கிறது என்பதால் யார் யாரோ எங்கெங்கிருந்தோ வருகின்றனர். ஆனால் அன்று வெறும் காடாக இருந்த நாட்டைத் திருத்தி பணக்கார நாடாக்கியது தமிழர்கள்தான்.
சாலை வசதி இல்லை; மின்சார வசதியும் தண்ணீர் வசதியும்கூட கிடையாது; தமிழ்ப் பள்ளி கிடையாது; முறையான வீட்டு வசதி இருக்காது.
இப்படிப்பட்ட இன்னல்களுக்கு இடையேதான் ரப்பர் தோட்டங்களில் அரும்பாடுபட்டு நாட்டுக்கு பொருள் வளத்தை தேடி தந்தனர் தமிழர்கள்.
அப்பொழுது ரப்பர் உற்பத்தி மட்டும் இல்லை என்றால் இந்த நாடு என்ன ஆகியிருக்கும் என்பதை எல்லாம் அப்போதைய தலைவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை; இப்பொழுதும் உணரவில்லை.

பக்தி மார்க்கத்தை பொருத்தவரை அன்றைய தோட்டப்புறத்தில் தொடங்கப்பட்ட ஆலயங்கள்தான் இன்று நாடு விடுதலை அடைந்த பின்னும் ஆங்காங்கே நிலைபெற்று உள்ளன.
அப்படி உருவாகி மெல்ல வளர்ந்து இன்று நம் மக்களின் சமயத்திற்கு பற்றுக் கோடாக இருக்கின்ற ஆலயங்களை சட்டவிரோத வழிபாட்டுத்தளங்கள் என்று சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து பிரச்சாரம் செய்கின்றனர்.
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி பிரதமராக இருந்தவரை இத்தகைய அக்கப்போரெல்லாம் கிடையாது; இப்பொழுது மட்டும் இவ்வாறு நடக்கிறது என்று இதற்கு யாரோ தூண்டுகோலாக இருக்கின்றனர் என்பது மட்டும் தெரிகிறது.
இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
ஏராளமான சிக்கலை எல்லாம் சமாளித்து இந்த ஆலயம் சிறப்பாக செயல்படுகிறது. இந்த ஆலய நிர்வாகக் குழுவினருக்கும் மற்ற பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுதலையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்வதாக டத்தோஸ்ரீ சரவணன் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.
இந்து சமயம் உலகிலேயே உன்னதமான சமயம்; மற்ற மதங்களைக் குறை சொல்லாத சமயம்; மற்றவர்களை மதம் மாற்றாத சமயம், இந்து சமயம்; இப்படிப்பட்ட சமயத்தை சார்ந்தவர்கள் நாம் என்பதில் பெருமை கொள்வோம்.
அதேவேளை சமய எல்லையில் மூடநம்பிக்கைக்கு அறவே இடம் கிடையாது. இதற்கு பக்தர்கள் முக்கியத்துவம் கொடுக்கவும் கூடாது; கையில் மைய்யும் வாயில் பொய்யுமாகத் திரியும் அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு, ஒதுங்க வேண்டும்.
சைவ சமயத்தில் அம்மையே அப்பா என்று இறைவனை குடும்பத் தலைவனாகவும் தலைவியாகவும் நினைத்து வேண்டுவது வழக்கம்;
என்னப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
பொன்னப்ப
னல்லவா பொன்னம்ப
லத்தவா என்றுதான் இறைவனைத் துதிப்பது நம் வழக்கு.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
என்றெல்லாம் இறைவனை நேரில் அழைத்து வழிபடுவதுதான் நம்முடைய வழக்கம்; அதற்கு பயனும் விளைந்தது; இறைவனின் அருளாசியும் கிடைத்தது.
எனவே இறைவனை தூய உள்ளத்தோடு வழிபடுவதில்தான் பக்தர்கள் அக்கறை காட்ட வேண்டுமே அல்லாமல் மைய்யும் பொய்யுமாக பையோடு அலைகிறவர்களை நம்பக்கூடாது என்று டத்தோஸ்ரீ சரவணன் எடுத்துரைத்தார்
ஆலயத் தலைவர் இரா. துரைசாமி, செயலாளர் பொன் கிருஷ்ணன், பொருளாளர் பரிமளா கதிர்வேலு மற்றும் மஇகா விலாயா மாநில தொடர்புக் குழுத் தலைவர்டத்தோ சைமன் ராஜா, மா. வீரமுத்து உள்ளிட்ட அறங்காவலர்களின் ஒத்துழைப்புடன் இந்தப் பொன்விழா பூச்சொறித் திருவிழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மே 18ஆம் நாள் 108 சங்க அபிஷேகத்துடன் இதற்கான பூஜை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


