மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத் தலைவர் நாக. பஞ்சு வேண்டுகோள்..!

அறம் தவறாமலும், கடமை தவறாமலும் நடத்தல் ஆசிரியர்தம் கடமை
ஒழுக்கம் உடைமை குடிமை – இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். (திருக்குறள் – 133)
ஒழுக்கம் உடைமையே உயர் குடித் தலைமையாம் ஒழுக்கம் தவறுதல், தாழ்ந்த பிறப்பாய் விடும்.
அண்மையில்,
தனிமனித, பொது ஒழுக்கம் தவறிய இரு ஆசிரியர்களின் ஒழுக்கக் கேடான விபரங்களை உள்ளடக்கி வெளியான காணொலியைக் காண நேர்ந்தது.
தமிழ் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களான இவர்களின்
ஒழுக்கக் கேடான செயல், சமூக வலைத்தளங்களில் பொதுவில் பரவி வருவதால், அவை தங்களுக்கு மட்டுமின்றி, தத்தம் குடும்பத்தினர், பெற்றோர், நண்பர்கள், தம்மைப்போன்று ஆசிரியர் பணியில் ஈடுபாடு கொண்டுள்ளோர், தங்களிடம் பயிலும் மாணவர்கள் – அனைவருக்கும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதைக் கூடவா உணராத நிலையில் நடந்து கொள்வார்கள் என்று நாக பஞ்சு வினா எழுப்பி உள்ளார்.
படித்தும், பண்படாத அந்த இரு ஆசிரியர்களிடம்; எவரேனும் அவர்களின் நடைமுறைச் செயல்கள் குறித்து, “உங்களின் செயல்கள் பெருமையளிக்கக் கூடியதா?” என வினவினால், அதற்கு அவர்களின் பதில்; இது எங்கள் சொந்த விடயம், இதில் எவரும் மூக்கை நுழைக்க வேண்டாம், இது குறித்து எவரும் கேள்வி கேட்கவோ, அவதூறாகப் பேசவோ உரிமை இல்லை; எனப் பட்டவர்த்தனமாக பதிலளிப்பர் அல்லது கடிந்துரைப்பர்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்;
உயிரினும் ஓம்பப் படும். (திருக்குறள் -131)
திருக்குறள் படிப்போர் நெஞ்சம், தீமைக்கு அஞ்சும்: என்பது ஆன்றோர் வாக்கு.
படித்த ஆசிரியர்களே, பண்படாத நிலையில்;
தமிழர்களின் வாழ்வியல் அறநெறியை அறிந்திடாது, ஒழுக்கமற்ற நடவடிக்கையில் ஈடுபாடு கொண்ட இந்த உதவாக்கரைகளின் போக்கு கண்டிக்கத்தக்கதே. இதனை தனிமனித விவகாரம் என்று சொல்லி ஒதுங்கிவிட முடியாது.
மேலும் இவர்களின் ஒழுக்கமற்ற செயலால் இவர்களிடம் கற்கும் நம் மாணவர்களின் கல்வி, மனநலம், ஒழுக்கம் ஆகியவை சீரழிய வாய்ப்புகள் உண்டு.
எனவே, தக்கார் இவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கையை கட்டாயம் எடுக்க வேண்டும்.
அரசு ஊழியர்களிடையே இருக்க வேண்டிய, அல்லது கடைபிடிக்க வேண்டிய பொது ஒழுக்க விவகாரங்கள் குறித்தும், அதற்குரிய தண்டனைகள் குறித்தும் முன்னதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கைகள் கவனத்திற் குரியது மட்டுமின்றி, 1993 பொதுச் சேவை ஊழியர்கள் விதிமுறைகள் (நடத்தையும் ஒழுங்குமுறையும்) படியும் குற்றவியல் சட்டம் பிரிவு 498 (சட்டம் 574) படியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால், கல்வி அமைச்சும் பொதுச் சேவை துறையும் உறுதியான போக்கினை கொண்டிருக்க வேண்டுமென மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத் தலைவர் நாக.பஞ்சு வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கடுமையாக வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


