
மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தில் மணவிலக்கு சிக்கல் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக மலேசிய இந்திய முஸ்லிம் இளைஞர்-மகளிர் அமைப்பு-கெபிமா’வின் ஆலோசகர் முகமது காதர் அலி தெரிவிக்கிறார்.
இதற்கு பல காரணிகள் இருந்தாலும் புரிந்துணர்வு இன்மையும் விட்டுக் கொடுக்கும் தன்மை குறைவுமே மூல காரணமாக விளங்குகின்றன.
இன்றைய வாழ்க்கைச் சூழல் சிக்கலானது என்பது உண்மைதான். கணவன்-மனைவி இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்; ‘ஷிஃப்ட்’ வேலை செய்ய வேண்டிய நெருக்கடி; பெரும்பாலும் வர்த்தக சமூகமான தமிழ் முஸ்லிம் குடும்பங்களில் தொழில் அடிப்படையில் எழும் ஏற்றாத்தாழ்வு, நிதித் தடுமாற்றம் போன்றவற்றால் வாழ்வில் சஞ்சலமும் சளிப்பும் ஏற்படுகின்றன என்பதை மறுப்பதிற்கில்லை.

இருந்தாலும் வாழ்க்கையில் தன்னோடு ஐக்கியமாகிவிட்ட துணையைப் பிரியும் முடிவை எடுப்பது, கையில் கிடைத்துள்ள பொன்னான வாழ்வை இழப்பதற்கு சமம் என்று செந்தூல் மாவட்டம், தாமான் ராவுத்தர் ருக்குன் தெத்தாங்கா குழுத் தலைவருமான முகமது காதர் அலி தெரிவிக்கிறார்.
குறிப்பாக, வெளிநாட்டு பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்து, வாழ்ந்த நிலையில் பிரிவது மிகவும் அவலம் நிறைந்தது.
கணவன் அல்லது மனைவி யாராக இருந்தாலும், ஒருவரை யொருவர் சார்ந்துதான் வாழ வேண்டும். குறிப்பாக, தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து, குழந்தைகள் பிறந்த நிலையில், அந்த மனைவியை விலக்கிவைக்கும் கணவனால், சம்பந்தப்பட்ட மனைவி எதிர்கொள்ளும் துன்பத்திற்கு அளவில்லை.
பெற்றோர், உடன்பிறந்தோர் உள்ளிட்ட உறவினர், அதுவரை பழகிவந்த நட்பினர் அனைவரையும் பிரிந்து நாடுகடந்து தன்னை மட்டும் முழுதாக நம்பி வாழவந்த மனைவி சார்பில் வரதட்சணையாக அளிக்கப்பட்ட அதிகமான நிதி, தங்க ஆபரணங்கள், இன்னும் வீட்டு வசதி உள்ளிட்ட அனைத்தையும் பெற்றுக்கொண்டு சிறிதுகாலம் வாழ்ந்தபின், விலக்கி வைப்பது நீதியாகப் படவில்லை.

சம்பந்தப்பட்ட மனைவி, இந்த நாட்டில் தொடர்ந்து இருப்பதற்கான விசாவை நீட்டிக்க வேண்டுமென்றால், கணவனின் ஒத்துழைப்பு அவசியம்; அது முடியாதபோது, சட்டப்பூர்வமற்ற குடியேற்றக்காரர் என்று வகைப்படுத்தப் பட்டு, குடிநுழைத் துறை அமலாக்க அதிகாரிகளால் கைதுசெய்யப்படும் வாய்ப்பு அதிகம்.
கணவனை மட்டும் அல்ல; தான் பெற்ற பிள்ளைகளையும் பிரிந்து, வேலைக்கும் செல்ல முடியாமல் அவதிப்படும் ஒரு பெண், தன்னிடம் முறையிட்டதாக முகமது காதர் அலி தெரிவித்தார்.
இதைப்போல வெளிநாட்டு ஆடவரை மணந்து வாழ்ந்தபின், அந்தக் கணவரை விலக்கி வைக்கவும், மணவிலக்கு பெறவும் முனையும் உள்ளூர் மனைவியரும் இருக்கின்றனர்.
இப்படிப்பட்டவர்கள், தங்களின் பிள்ளைகள் குறித்து அக்கறைப் படுவதில்லை; பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்பொழுது சிக்கல் எழும்; 12 வயதில் அடையாள அட்டைக்காக தேசிய பதிவு அலுவலகத்தை நாடும்பொழுது இன்னும் பிரச்சினை எழும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தாயையோ அல்லது தந்தையையோ பிரிந்துவாழும் பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமல்ல; நிகழ்காலமே பாதிக்கப்படுகிறது.
இந்தச் சுழலில், சில பெற்றோர் செய்வது இன்னும் வருத்தத்திற்கு உரியது; திருமண வயதை எட்டிய தம் பிள்ளைகள், தங்களுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையை தேர்வுசெய்ய் விடாமல், உறவு விடுபட்டுவிடும்; சொத்து கைமாறி விடும்; வேறு குடும்பம் கலந்துவிடக் கூடாது; சொந்தத்திற்-குள்ளே திருமணம் செய்ய வேண்டும்; உறவுக்கார பெண் என்றெல்லாம் பல காரணங்களைச் சொல்லி, விருப்ப-மில்லாத பெண்ணையோ ஆணையோ தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைப்பதால், மனம் ஒட்டாமல் அப்படி வாழ்கின்ற தம்பதியரும் கடைசியில் மணவிலக்கு என்னும் எல்லையில் போய் நிற்கின்றனர்.
இதுபோன்ற ஏராளமான காரணங்க-ளால், இள வயதிலேயே கணவனும் மனைவியும் பிரிந்துவாழும் நிலைக்கு அல்லது மணவிலக்கு பெறும் கட்டத்திற்குச் செல்கின்றனர்.
இப்படிப்பட்ட தம்பதியரை அடையாளம் கண்டு, உரிய ஆலோசனை வழங்கி, விட்டுக் கொடுக்கும் தன்மையுடனும் நல்ல அம்சங்களை சீர்தூக்கிப்பார்த்து வாழும்படியும் முடிந்தவரை ஒற்றுமையை ஏற்படுத்தி வருவதாகவும் முகமது காதர் அலி தெரிவித்தார்.
அதேவேளை, குடிநுழைவுத் துறை, சமூக-குடும்ப-மகளிர் நலத்துறை, கல்வித் துறை, தேசிய பதிவு அலுவலக அதிகாரிகளையும் சந்தித்து அந்தந்த தம்பதி எதிர்கொள்ளும் பிரச்சினை-களுக்குத் தீர்வுகாண்பதிலும் பிரிந்து-வாழும் இணையரை எப்படியும் இணைத்து வைப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறோம் என்று முகமது காதர் அலி மேலும் தெரிவித்தார்.


