
முகத்தில் எந்நேரமும் புன்னகையையும் அகத்தில் அகம்கொள்ளா அளவிற்கு பல்துறைசார் தகவலையும் தேக்கியுள்ள ‘தமிழ்த் தென்றல்’, ‘ஞான செவ்வேல்’ வழக்கறிஞர், பட்டிமன்ற நடுவர், ஆன்மிக-இலக்கிய சொற்பெருக்காற்றுனர் முனைவர் எஸ்.டி. கலையமுதன் ‘வல்லமை தாராயோ என்னும் தலைப்பில் இன்று ஜூன் 19, விழாயன் மாலையில்.. ., இன்னும் சில மணி நேரத்தில் இலக்கிய சொற்பொழிவை நகைமிக ஆற்றவிருக்கிறார்.

தன்முனைப்புப் பேச்சாளர்-தன்முனைப்பு ஆற்றலாளர் ரெ.கோ. ராசு, எப்பொழுதும் கலை சார்ந்து சமூக வீதியில் பயணிக்கும் எஸ்.பி. மணிவாசகம், எம்.புஷ்பாகரன் ஆகியோரின் முன்னெடுப்பிலும் ஒருங்கிணைப்பிலும் கடந்த ஒரு வாரமாக நிகழ்ச்சிகளைப் படைத்து வருகிறார் கலையமுதன்.
தமிழகத்தில் இருந்து கடந்த 14-ஆம் நாள் இம்மலையகத்திற்கு வந்த கலையமுதன், வந்த சூட்டோடு தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிருவாக இயக்குநர் டத்தோ பா.சகாதவனை சந்தித்தது முதல் கலையமுதனின் இலக்கிய உரைப்பயணம் தொடங்கியது.

இதுவரை பினாங்கு கொம்தாரில் எம்.ஜி.ஆர். தேவன் தலைமையில் நிகழ்ச்சி, ஜூன 15இல் சுங்கைப் பட்டானியில் கலைஞர் கலைமணி ஏற்பாட்டில் ஒரு நிகழ்ச்சி, தொடர்ந்து ஜூன் 16-இல் ஈப்போ மாநகரில் பேராசிரியர் சேகர் நாராயணன் ஏற்பாட்டில் ஒரு நிகழ்ச்சி, அடுத்து ஜூன் 17-இல் பூச்சோங்கில் டத்தோ ஏ.பி. சிவம் ஏற்பாட்டில் ஒரு நிகழ்ச்சி என நான்கு இலக்கிய நிகழ்ச்சிகளில் சேலத்தைச் சேர்ந்த கலையமுதன் உரை நிகழ்த்தி, நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் மனம்நிறைத்து அனுப்பினார்.
அந்த வரிசையில் இன்று சிறப்பாக நடைபெற உள்ள நிகழ்ச்சி மாலை ஆறரை மணி அளவில் சிற்றுண்டி உபசரிப்புடன் தொடங்கும் என்று ரெ.கோ. ராசுவும் எஸ்.பி.மணிவாசகமும் தெரிவித்துள்ளனர்.

கல்வியாளர் ம. மன்னர்மன்னனின் அறிமுக உரையுடன் தொடங்க இருக்கும் இந்த நிகழ்வு, மலையக சொல்வேந்தரும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணைவேந்தரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மேநாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ மு. சரவணனின் உரையுடன் தொடரும். நிறைவாக, கலையமுதனின் இலக்கிய உரை இடம்பெறும்.
இலக்கிய ஆர்வலர்களும் பொதுமக்களும் இலக்கிய இன்பம் பருக வரும்படி ஏற்பாட்டாளர்கள் வாஞ்சையுடன் அழைக்கின்றனர்.


