
கோல சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயாவைச் சேர்ந்த தோட்டப்பாட்டாளி துரைராஜுவின் மகன் பூபாலன், பெரிய கலைத்திறம் வாய்த்து, சிரிய உருவத்துடன் வலம் வருகிறார்.
திரைப்பட பழம்பெரும் பாடகர் சி.எஸ். ஜெயராமனின் குரலும் பாவமும் சிறிதும் தப்பாமல் அப்படியேப் பாடும் இந்தக் கலைஞனை, மலேசியத் தமிழ்க் கலை உலகத்தினர் ஏன் அடையாளம் காணவில்லை எனத் தெரியவில்லை.
கோலசிலாங்கூரைச் சேர்ந்த து.பூபாலனை அண்மையில் எதிர்பாராமல் சந்திக்கும் வாய்ப்பு நேர்ந்தது. முன்பின் அறிமுகமில்லாத இந்தத் தம்பியுடன் ஒரே மேசையில் எதிரெதிரே அமர்ந்து தேநீர் பருகியபொழுது ஒருவொருக்கொருவர் அறிமுகமானோம்.
அப்பொழுதுதான், பூபாலன் பாடல்வல்லான் என்பது தெரியவந்தது. பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், பூக்காரி, அணையாவிளக்கு போன்ற படங்களின் நாயக நடிகர் மு.க.முத்துவின் தாய்மாமனான சிதம்பரம் ஜெயராமன் பாடிய பாடல்களை இசை இல்லாமலேயே வெகு அற்புதமாகப் பாடினார்.

இசையுடன் சேர்த்து பாடினால், சிதம்பரம் ஜெயராமனே நேரில்வந்து படுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
சி.எஸ்.ஜெயராமனின் பாடால்களை வரிசையாகப் பாடிய பூபாலன், ஓர் இருகுரல் பாடலையும் பாடத் தொடங்கினார்; ஜெயராமன் பாடியபிறகு, பி.சுசிலாவின் குரல் வரும்பொழுது, அத்துடன் நிறுத்திக் கொள்வார் என்று நான் எதிர்பார்த்திருந்த வேளையில், தொடர்ந்து பெண் குரலிலும் பாடினார்.
பி.சுசிலாவின் குரல் அப்படியே இருந்ததா என்று அவதானிக்க முடியாவிட்டாலும், இனிமையான பெண் குரலாக அது அமைந்தது. புதையல் திரைப்படத்தில் இடம்பெற்ற விண்ணோடும் முகிலோடும் என்று தொடங்கும் அப்பாடலை ஜெயராமனின் குரலிலும் பி.சுசிலா குரலிலும் மாறிமாறி முழுதாக இசையின்றி பாடியதைக் கண்டு வியப்புதான் மேலிட்டது.

ஏ.எம். ராஜா குரலிலும் பாடிக் காண்பித்தார்; மலேசிய வாசுதேவன் குரலிலும் பாடுகிறார்.
மொத்தத்தில் பலகுரல் இசைக்கலைஞனாக இருக்கும் இவர், கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதித் துறையிலும் ஈடுபட்டுள்ளார்.
இவரை, கோலாலம்பூர்-சிலாங்கூர் மண்டல தமிழ்க் கலை உலகத்தினர் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பூபாலுடன் பேச, 016-2401473.


