
2022-இல் தான் பொறுப்பேற்க இருந்த தேசிய தலைவர் பதவியை தங்க கணேசனுக்கு தாரைவார்த்ததுடன் அல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகாலமாக தனக்கு துணை நின்றவரைப் பார்த்து தடி எடுப்பவர் என்றும் தண்டல்காரர் என்றும் கண்டனம் செய்யும் தங்க கணேசன் நன்றி கெட்டவர் என்று மலேசிய இந்து சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் எல். சிவசுப்பிரமணியம் விளாசியுள்ளார்.
அதே 2022ல் தங்க கணேசன் அணி வெற்றி பெற்றதும் அவரை, தலைவர் பொறுப்பேற்க விடாமல் இந்து சங்கத்திற்கு தான்தான இன்னமும் தலைவர் என்று அந்த ஆண்டு கூட்டத்தில் தோல்வி அடைந்த மோகன்ஷான் வல்லடி புரிந்தார்.
பிரச்சனை நீதிமன்றம் சென்றதால் மலேசிய இந்து சங்கம், தலைவரே இல்லாமல், மாதக்கணக்கில் முடங்கிக் கிடந்தது.
இதற்கு இடையில் மலேசிய இந்து சங்கத்தின் பூட்டை மாற்றி சங்கிலி எல்லாம் போட்டு தங்க கணேசன் உள்ளே நுழையாதபடி அவரை வீதியில் நிறுத்தியவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மோகன்.
ஆண்டுக் கூட்டம் நடத்தியபின், நிதித் தட்டுப்பாடு இருந்த நிலையில், மலேசிய இந்து சங்கத்தை நீதிமன்றத்தில் நிறுத்தி பல்லாயிர கணக்கில் நட்டம் ஏற்படுத்தியவர் மோகன் சார் என்று அப்பொழுது புலம்பித் தீர்த்தவர் இதே தங்க கணேசன்.

இப்பொழுது, இதே கணேசன் கணேஷ்பாபுவிடம் வாக்களித்தபடி தலைவர் பொறுப்பை 3 ஆண்டுகளுக்குப் பின் ஒப்படைக்க மறுத்துவிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளா ஆண்டுகாலமாக மலேசிய இந்து சங்கத்தை கிடப்பில் போட்டுவிட்டு, எந்தவித மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தாத தங்க கணேசன் பதவி மோகத்தால் உந்தப்பட்டு, இதே கணேஷ் பாபுடன் சேர்ந்து யாரை வீழ்த்தினாரோ அதே மோகன் ஷானுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இப்பொழுது பதவியை தர மறுப்பதுடன் கணேஷ் பாபுவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்; சமரசத்திற்கும் உடன்படவில்லை.
மலேசிய இந்து சங்கத்தின் 27 பேர் கொண்ட மத்திய பேரவையில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் ஏறக்குறைய ஆறு மாதங்கள் வரை தங்க கணேசனை வீதியில் நிறுத்தியவர் மோகன்ஷான்.
மோகன்ஷான், தங்க கணேசன் ஆகிய இருவரின் தலைமைத்துவத்தில் மலேசிய இந்து சமுதாயமும் இந்து சங்கமும் இந்து சமயமும் அடைந்த மறுமலர்ச்சி முன்னேற்றம் என்ன என்பதைப் பற்றி இவர்கள் இருவராலும் சொல்ல முடியாது.
காரணம் மானியம் ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு தன்னல போக்குடன் செயல்பட்ட இந்த இருவரும் இப்பொழுது கூட்டு சேர்ந்து கொண்டு யார் முறையாக தலைமைத்துவத்திற்கு வரவேண்டுமோ அவர் எதிர்த்து இனிமேல் தான் தாங்கள் ஆக வேண்டிய கடமைகளை செய்யப் போவதாக செய்தியாளர்களிடம் பசப்புகின்றனர்.
இந்த ஏமாற்று வேலையையும் நரி தந்திரத்தையும் மலேசிய இந்து சங்க உறுப்பினர்கள் அடையாளம் கண்டு அடுத்த வாரம் நடைபெற இருக்கின்ற ஆண்டு கூட்ட தேர்தலின் போது இந்த இருவரையும் மண்ணை கவ்வ செய்ய வேண்டும்.
இந்து சமயத்திற்கும் இந்து சமுதாயத்திற்கும் எந்த பங்களிப்பையும் அளிக்காத இவர்களின் தலைமை இனியும் தேவையில்லை.
இன்றைய நிலையில் மலேசிய இந்து சங்கத்தில் தலைமை மாற்றம் என்பது மிகவும் இன்றியமையாதது; காலத்தின் கட்டாயம்;
மலேசிய இந்து சங்கத்தை முடக்கி வைத்துள்ள தங்க கணேசனின் தலைமை இனி தேவையில்லை.
எனவே தலைமை மாற்றம் ஒன்றுதான் மலேசிய இந்து சங்கத்திற்கும் இந்து சமயத்திற்கும் இந்து சமுதாயத்திற்கும் மிகவும் பயன் அளிக்கும் என்பதால் புதிய தலைமையை ஏற்படுத்தும் படி மலேசிய இந்து சங்க உறுப்பினர்களை மீண்டும் கேட்டுக் கொள்வதாக இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் எல் சுப்பிரமணியன் மேலும் தெரிவித்துள்ளார்.


