
கோலாலம்பூரில் இசை நிகழ்ச்சிக்கு பெயர் பெற்ற டான்ஸ்ரீ கே ஆர் சோமா அரங்கத்தில் இனிமைக்கோர் இரவு என்னும் பெயரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி, அரங்கு நிறைந்த இசை ஆர்வலர்களுடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தந்தை மகள்கள் பேரப்பிள்ளைகள் என ஒரு குடும்ப கலைஞர்களே பழையபாடல்களைப் பாடி, இசை ஆர்வலர்களை மிகவும் ரசிக்க வைத்தனர்.
முறையான இசைப் பயிற்சி பெறா விட்டாலும் இசை ஆர்வத்தினாலும் பாடும்கலைமீது கொண்ட பற்றினாலும் 1960, 70-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களின் முத்தான பாடல்களை, குறிப்பாக பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடல்களை கித்தாரை மீட்டிக்கொண்டே பாடி வந்தவர் தண்டபாணி.
பிள்ளைகள் வளர்ந்தாலும் இவரைப் போலவே அவர்களும் பாடுவதில் நாட்டம் கொண்டதால் குடும்பக் கலைஞர்களைக் கொண்டு ஆண்டுதோறும் இசை நிகழ்ச்சிகளை படைத்து வந்தார் தண்டபாணி.

கொரோனா பருவத்தில் நின்று போன இந்தத் தொடர், இந்த ஆண்டு, மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மை ஸ்கில்ஸ் அறவாரிய ஆலோசகர் வழக்கறிஞர் சி பசுபதி, டத்தோ த. மோகன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் தொடக்கமே அதிரடியாக அமைந்தது; தண்டபாணியின் கித்தார் மீட்டலுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, அவரின் பேரப்பிள்ளையின் பக்திப் பாடலுடன் தொடர்ந்து.
எம்ஜிஆர் நடித்த பாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஜானகி பாடிய ‘ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி’ என்னும் பாடலுடன் இசை நிகழ்ச்சி முறையாக தொடங்கியது.
மாந்த வாழ்வில் எல்லா ஆணும் பெண்ணும் ஒரு கட்டத்தில் எதிர்கொண்டே ஆக வேண்டிய பால் கவர்ச்சி ததும்பும் இளம் பருவத்தில் உள்ள ஒரு பெண்ணாக வருகின்ற பாசம் திரைப்படத்தின் நாயகி அந்தப் படத்தின் நாயகனையே திருடிக் கொண்டதாக பாடுவதுதான் இந்தப் பாடல்.
அந்தப் படத்தின் நாயகனும் ஒரு திருடன், ஆனால் இந்த பெண்ணோ அந்த நாயகனையேத் திருடி தன் உள்ளத்தில் சிறைபிடித்துக் கொண்டதாக நாயகி தனக்குத்தானே பெருமிதம் கொள்வாள்; கதையின் தன்மையோடு ஒட்டி, கவியரசு கண்ணதாசன் புனைந்த பாடல் அது.

அப்பாடலே இந்த இசை நிகழ்ச்சிகள் தொடக்கப் பாடலாக அமைந்தது; பாடியதோ தண்டபாணியின் மும்மகள்களான தாரணி, வாணிஸ்ரீ, காயத்ரி ஆகியோர்.
தாரணி நினைவில் வாழும் மலேசிய வாசுதேவனுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடியவர்; இப்பொழுது கி,ள்ளானில் ஒரு பன்னாட்டு பள்ளியின் முதல்வராக இருக்கிறார். இருந்தாலும் தந்தையின் கலைப் பயணத்தில் இணைந்து திரைப்பட பாடல்களைப் பாடுவதில் நாட்டம் கொண்டவர்; அதைப்போல வாணிஸ்ரீ ஒரு வங்கியில் மனிதவளப் பிரிவு தலைமை அதிகாரியாக இருந்தாலும் அவரும் தன் அக்காளை போல பாடுவதில் ஆர்வம் கொண்டவர்.
காயத்ரியோ, நிகழ்ச்சிகளை படைக்கும் ஒரு தனி நிறுவனத்தை நடத்தி வருபவர்;
ஒரு பெண் பாடிய பாடலை இந்த மூன்று பெண்களும் இரு ஒலிவாங்கிகளைக் கொண்டு மாற்றி மாற்றி பாடிய விதம் மிகவும் அற்புதமாக இருந்தது.
தண்டபாணியின் 20 வயது பெயர்த்தி தர்ணியாதேவி, பாகப்பிரிவினை திரைப்படத்தில் இடம்பெற்ற தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் என்று தொடங்கும் பாடலைப் பாடினார்: இவர் சட்டக்கல்லூரி மாணவியாவார்.
அதைப்போல இவரின் பெயரன் துகிர்குமார் ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ எனத் தொடங்கும் டி எம் சௌந்தரராஜன் பாடிய பாடலைப் பாடினார்.
தொடர்ந்து ‘எனக்காகவா?’ எனத் தொடங்கும் பாடல் உட்பட புகழ் பெற்ற பழைய படப் பாடல்கள் இரவு 10: 40 மணிவரை பாடி வந்திருந்தோரை மகிழ்வித்த கலை நிகழ்ச்சியாக இனிமைக்கு ஓர் இரவு என்னும் தண்டபாணி குடும்ப இசை நிகழ்ச்சி அமைந்தது.
மேடை முழுவதும் ஏராளமான இசை கலைஞர்களை இரு புறமும் அமர்த்திக் கொண்டு இந்த நிகழ்ச்சி படைக்கப்பட்டது.


