Sunday, April 19, 2026

இரு கால்களையும் இழந்த மீனாவின் எதிர்பார்ப்பு ஒரேயொரு தையல் இயந்திரம்! சமுதாயம் நேசக்கரம் நீட்டுமா?

இரு கால்களையும் இழந்த ஒரு பெண் நம்பிக்கையை இழக்கவில்லை; தன் வாழ்க்கைக்கான நிதி ஆதாரத்தை தானே சமாளிக்க முடிவுசெய்து, ஒரு தையல் இயந்திரத்தை எதிர்பார்க்கிறார்.

பினாங்கு பட்டர்வொர்த்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணுக்கு யாராவது உதவினால், அந்த உதவி, ஒரேவோர் தையல் இயந்திரமாக இருந்தால் போதும் என்கிறார் மீனா

சங்க காலத்து சகலகலா வல்லி ஔவை நல்லாள் சொல்லி வைத்ததைப் போல பிறந்தபோது கூன், குருடு, செவிடு, பேடு என்றென எக்குறையும் இல்லாமல் பிறந்தவர்தான் மீனா. பாழாய்ப்போன இனிப்பு நீர் என்னும் இனிய கொலையாளி இந்த மீனாவை இறுக்கமாகப் பற்றிக் கொண்டதால், தப்பிக்க வழியில்லாத இந்தப் பெண் தன் இருகால்களையும் இழந்து மீத உடலையும் உயிரையும் தற்காத்துக் கொண்டிருக்கிறார்.

பெற்றோரோ உற்றாரோ எவரும் இல்லை; கட்டிய கணவனும் காலை வாரிவிடும் விதமாக மண்மாதாவில் மடியில் எப்போதோ சங்கமமாகி விட்டார்.

அதனால், முன்பின் அறிந்தவர்கள், தெரிந்தவர்களின் ஒத்துழைப்புடனும் சமூக நலத்துறை வழங்கும் மாதாந்திர உதவித் தொகையுடனும் வாழ்க்கைச் சக்கரம் நிலைகுத்தி நிற்கிறது; நகர வழியில்லை.

இந்த நிலையில் படுத்து படுக்கையாக இருக்கின்ற 41 வயது தம்பி முனியாண்டியையும் பராமரிக்க வேண்டிய கடமை இந்த அக்காளுக்கு இருக்கிறது.

முனியாண்டியின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு வாத நோயும் தொற்றிக்கொண்டு படுத்த படுக்கை-சக்கர நாற்காலி என இருக்கிறார்.

Block A-3-01, Jalan Mewah 2, Taman Mewah, 12100 Butterworth, Penang என்னும் முக முகவரியில் வசிக்கின்ற 48 வயது மீனா என்னும் மீனாட்சி, கால்கள் இரண்டும் முடங்கிய 41 தம்பிக்காக வாரந்தோறும் இரத்த சுத்திகரிப்பிற்காக மட்டும் 290 வெள்ளியை செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

இரு கால்களையும் இழந்த கைம்பெண்ணான மீனா இரு கால்களும் முடங்கிய தம்பியையும் தற்காக்க வேண்டிய கட்டாயநிலை இருக்கிறது.

பொதுமக்களின் ஆதரவை காலமெல்லாம் எதிர்பார்த்து இருப்பதை விரும்பாத மீனா தனக்குத் தெரிந்த கைத்தொழிலான தையல் கலை மூலம் தன் வாழ்க்கையை தானே சீரமைத்துக் கொள்ள விரும்புகிறார்.

கால்கள் நன்றாக இருந்த காலத்தில் தையல் பயிற்சிக்கு சென்று ஆடைகளை நல்ல முறையில் தைக்கின்ற கலையில் தேர்ந்திக்கிறார்.

அன்றாட வாழ்க்கை செலவு ஒரு பக்கம் இருக்க தம்பிக்கான நரம்பு மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ செலவுடன் ஊட்டச்சத்து பால் மாவு-Nepro HP, பெரியவர்களுக்கான பெம்பர்ஸ் Adult diapers-Tena Value என இந்த சின்னஞ்சிறு குடும்பம் பெரிய சிக்கலுடன் அண்மைக்காலமாக பரிதவித்து நிற்கிறது.

எனவே வாய்ப்பு இருக்கின்ற தனி மனிதர்களோ அல்லது சமூக அமைப்புகளோ இந்த குடும்பத்திற்கு உதவி செய்தால் குறிப்பாக கால் இல்லாதவர்கள் இயக்குகின்ற ஒரு தையல் இயந்திரத்தை ஏற்பாடு செய்தால் இந்த குடும்பம் தங்கள் வாழ்க்கையை தாங்களே சீரமைத்துக் கொள்ளும்.

இந்த அக்காள் தம்பியின் வாழ்க்கை கரை சேர விரும்புபவர்கள் மீனாவுடன் தொடர்புகொள்ள 018-4664467.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை