
கிள்ளானில் இயங்கிவரும் அருள் நுண்கலைப் பள்ளியின் ‘முதல் நிலை அரங்கிசை – 4’, இன்று ஜூலை 26, சனிக்கிழமை, சுபாங் ஜெயா TANSRI JEFFRY CHEAH அரங்கத்தில் மாலை 6.00 மணி அளவில் நடைபெறவுள்ளது.
பள்ளியில் நீண்ட காலம் வாய்ப்பாட்டுப் (சங்கீதம்) பாடம் கற்று, நல்ல தேர்ச்சியைக் காட்டிவரும் மாணவர்களை அடையாளம் கண்டு, முதல் முதலாக மேடையில் தனித்துப் பாடும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதே இந்த ‘முதல் நிலை அரங்கிசை’யின் நோக்கம்.
பள்ளியின் முதலாம் இரண்டாம் மூன்றாம் ‘முதல் நிலை அரங்கிசை’ நிகழ்ச்சிகள் முறையே 2016, 2019, 2023 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன.

நான்காவது முறையாக நடைபெறவுள்ள முதல் நிலை அரங்கிசையில் அரங்கேறும் மாணவர்கள், செல்வி சந்தியா சிவசிதம்பரம், செல்வி சாஷ்வினா ரகுராமன், செல்வி கோமகள் மு.சங்கர், செல்வி இஷா சுகுமாரன், செல்வி மிஷா கமலேசன், செல்வன் தேவ்ராஜ் மோகன், செல்வி சர்வேதா மகேந்திரன், செல்வன் யுவனேஷ் வெள்ளிக்கண்ணன் ஆகியோர்.
இவர்கள் எண்மரும், பள்ளியின் முதல்வர் சங்கபூசன் திருமதி அல்லிமலர் மனோகரனின் மாணவர்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
மலேசியத் தமிழ் நெறிக் கழக தேசியத் தலைவர் இரா. திருமாவளவன், நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்கவுள்ளார். இசைக்கலைமணி கார்த்திகேயன் கணபதி (வயலின்), சுநாத நந்தி சிவகுமரேசன் இந்திரன் (மிருதங்கம்) பிரம்மஸ்ரீ அரவிந்த் சர்மா (கஞ்சிரா) ஆகியோர் இந்நிகழ்வில் பின்னணி இசைக்கவுள்ளனர்.
தமிழிசை ஆர்வலர்கள் மகிழ்ந்து பாராட்டும் வகையிலே பாடல்கள் வடிவமைக்கப்பட்டுபயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. கட்டணமில்லா இந்த நிகழ்ச்சியில் இசை விரும்பியர் அனைவரும் கலந்து இன்புறுவதுடன் முதல் நிலை அரங்கேறும் மாணவச் செல்வங்களை வாழ்த்தும்படியும் அருள் நுண்கலைப் பள்ளியின் நிர்வாகி சு.மனோகரனும் மாணவர்களின் பெற்றோரும் அன்போடு கேட்டுக் கொள்கின்றனர்.

தொடர்புக்கு : 0199271722 (சு.மனோகரன்)


