Thursday, July 30, 2026

சிந்தனை விதைகளைத் தூவி மனத்தைச் செழிக்க வைப்பவை நூல்களே! -டத்தோ பா.சகாதேவன்!!

‘நினைவில் வாழும்’ பன்முகத் தமிழ்ச்செல்வர் நா.ஆ. செங்குட்டுவனின் பெயரில் அமைந்துள்ள ‘அறிவுச்சோலை’ நூலகம் நேற்று ஜூலை 27 செமினி நகரில் திறப்பு விழா கண்டது.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க தலைமை நிருவாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன், இந்நூலகத்தைத் திறந்து வைத்து, உரையாற்றினார்.

அவர் தமதுரையில், “நல்ல சிந்தனைகளை ஊட்டி, மனிதன் வாழ்வை நல்ல வண்ணமாக திசை திருப்பும் ஆற்றல் மிக்கவை நூல்கள்; சிந்தனை விதைகள் தூவப்பட்டால், மனங்கள் செழிக்கும். தனி மனிதன் மட்டுமல்லாமல் ஒரு சமுதாயமே முன்னேற நூல்கள் துணை செய்யும். அதற்கு நூல்களைச் சேகரிக்கும் நூலகங்கள் நமக்குத் தேவை. சிலாங்கூர், செமினி நகரில் அத்தகைய நூலகத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ள சு மா செல்வராஜ் தலைமையிலான குழுவினரைப் பாராட்டுகிறேன்” என்று கூறினார்.

நூலகத் திறப்பு விழாவை முன்னிட்டுப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்குக் கீரை வகை சமையல் போட்டி, மாணவர்களுக்குக் கோட்டோவியம் வரையும் போட்டி, தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்குக் கதை எழுதும் போட்டி எனப் பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஓவியப் போட்டிக்குப் புகழ்பெற்ற ஓவியர் சந்திரன் நடுவராக இருந்தார்.

நூலகத் திறப்பு விழாவில் சிறப்பு அங்கமாக தோக்கோ குரு, சங்கபூசன் முனியாண்டி சுப்பிரமணியம் எழுதியுள்ள ‘தொலைந்து போன தோட்ட வாழ்க்கை’ நூல் அறிமுகம் கண்டது.

மலேசிய தகவல் அமைச்சின் மேனாள் உதவி இயக்குநர் அ.பாலசுப்ரமணியன் நூல் அறிமுகத்தை வழங்கினார்.

சமூக இயக்கங்களின் பொறுப்பாளர்கள், தமிழ் உணர்வாளர்கள், சுற்று வட்டார பொதுமக்கள் எனத் திரளாகப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

நூலகம் அமைக்கும் முயற்சிக்குப் பல்வகையிலும் உதவி வரும் நா ஆ செங்குட்டுவன் குடும்பத்தாருக்கும் நன்கொடையாளர்களுக்கும்
ஆதரவு நல்கிவரும் நல் உள்ளங்களுக்கும் செம்மை இயக்கத் தலைவர் சுபா செல்வராஜ் நன்றி தெரிவித்தார்.

செமினி நகரில் செயல்படும் இந்நூலகத்தை சமூக, கலை, இலக்கிய நடவடிக்கைகளுக்கு இலவயமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சு மா. செல்வராஜ் வேண்டுகோள் விடுத்தார்.

எழுத்தாளர் கருணாகரன் நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றினார்.

இந்த நூலகத் திறப்பு விழாவின் தொடக்கத்தில் விஜயகுமார் கங்கா சலத்தின் புல்லாங்குழல் இசையும் குமரேசனின் தபேலா இசையும் நிகழ்ச்சிக்கு முன்னதாக வந்திருந்தோரின் மனதை மயக்கின.

தகவல்:
நல்லாசிரியரும் இலக்கியவாணருமான பச்சை பாலன்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை